தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டச் சந்திப்பு, எதிர்வரும் 6ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில், புதிய அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கைகள் மீதான விவாதம், எதிர்வரும் ஒன்பதாம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கவுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தச் சந்திப்பு, முக்கியத்துவம் பெறுகின்றது.
அரசியலமைப்புப் பேரவை நியமித்த ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளும், ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையைத் தயாரிக்கும் பணியில், சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜயம்பதி விக்ரமரட்ணவும் எம்.ஏ.சுமந்திரனும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர், அந்த அறிக்கையும் தயாராகிவிடும் என்று கூறப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பு மீதான கேள்விகள், தமிழ் மக்கள் மத்தியில் பலமாக எழுந்திருக்கின்ற நிலையில், இடைக்கால அறிக்கைகள் மீதான விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னரான நாட்களில், கூட்டமைப்பினால் ஏன் இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது என்கிற கேள்வி எழுகின்றது.
புதிய அரசியலமைப்பு எதனை பரிமட்டாக இறுதி செய்யப் போகின்றது, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவுக்குள் உண்மையில் என்ன வகையிலான உரையாடல்கள் இடம்பெறுகின்றன என்கிற கேள்விகளை, தமிழ் ஊடகங்களும் செயற்பாட்டாளர்களும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் கூட, தொடர்ச்சியாக எழுப்பி வந்தன.
குறிப்பாக, ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் உயர்மட்டச்சந்திப்பைக் கூட்டுமாறு பலகாலமாகக் கோரி வந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரத்திலும் கூட, அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்பின் தலைவருக்கு உயர்மட்டச் சந்திப்பினை ஒழுங்குபடுத்துமாறு கோரி, கடிதமொன்றை எழுதினார். இவற்றுக்கெல்லாம் பிறகே, கூட்டமைப்பின் இந்தச் சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
“1987ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய ஒப்பந்தங்களுக்கு அமைய, இணைந்த வடக்கு- கிழக்கில், கிட்டத்தட்ட இந்தியத் தலையீடுகளுடன் கூடிய தனித்த மாநில அலகை ஸ்தாபிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது.
ஆனாலும், அதனை தமிழ்த்தரப்பு நிராகரித்தது. 2000களில் பிராந்தியங்களின் ஒன்றிணைவான நாடு என்கிற அடிப்படையிலான தீர்வுப்பொதியொன்றை, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்தார். அதனை நிறைவேற்றுவதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஐந்து வாக்குகளே தேவைப்பட்டன.
ஆனால், அதனைக் கூட்டணி நிராகரித்தது. அந்தத் தீர்வுப்பொதியை வரைந்தவர்களில், கூட்டணியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம் முக்கியமானவர். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருந்தால், ஒஸ்லோ பிரகடனத்தின் படியான, கிட்டத்தட்ட சமஷ்டித் தீர்வு ஒன்று சாத்தியப்பட்டிருக்கும்.
ஆனால், அப்போது ரணிலைத் தோற்கடித்து, அதனையும் தமிழ்த் தரப்பு நிராகரித்தது. நாம் இன்று வந்து சேர்ந்திருக்கின்ற இடம், 13வது திருத்தத்தை அடிப்படையாக வைத்து, சில முன்னேற்றங்கள் என்கிற அளவே. அதுவே, புதிய அரசியலமைப்பில் இடம்பெறப்போகின்றது. அதனையே, தீர்வாகவும் கூறப்போகின்றார்கள். அதனை மீறி இப்போதைக்கு வேறொன்றும் சாத்தியமில்லை” என்று அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கிஸ்தரும், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சருமான மனோ கணேசன், அண்மைய தொலைக்காட்சி விவாதமொன்றில் கூறினார்.
புதிய அரசியலமைப்பு எவ்வகையான தீர்வினை இறுதி செய்யப் போகின்றது என்பது தொடர்பில், அண்ணளவான பதிலொன்றை வெளிப்படையாகக் கூறிய தமிழ்த் தலைவராக மனோ கணேசனைக் கொள்ள முடியும். இன்றைய யதார்த்தத்திலிருந்து அடுத்த கட்டங்களை நோக்கி செல்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் நிகழ்வொன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, “மக்களுக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதில், எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பது குறித்து, எமக்கு ஆதங்கங்களும் கவலைகளும் உண்டு.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தோற்கடிக்கப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எண்ணிவிடக்கூடாது” என்றார்.
கிட்டத்தட்ட தங்களின் வாக்குறுதிகளுக்கு அப்பாலான தோல்வி மனநிலையொன்றின் பக்கத்தில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் தற்போது இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். உண்மையில் அவர்கள், கடந்த காலத்தில் வெளியிட்டு வந்த நம்பிக்கையின் அளவு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
தற்போது, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையிழப்பை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனால், வெளிப்படையாகப் பேசுவது குறித்த பிரச்சினைக்குள் சிக்கித் தவிக்கின்றார்கள். அது, கட்சி நலன் சார் அரசியலைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள்.
வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை; சமஷ்டி முறைமை இல்லை; பௌத்தத்துக்கு தொடர்ந்தும் முன்னுரிமை ஆகிய விடயங்களுக்கு, கூட்டமைப்பு கிட்டத்தட்ட உடன்பட்டுவிட்டது. இறுதியாகக் கூட்டமைப்பு இழுத்துப் பிடிக்க நினைக்கும் விடயம், “ஒற்றையாட்சி” என்கிற விடயத்துக்குப் பதிலாக “ஒன்றிணைந்த நாடு” என்கிற விடயமே. அதாவது, அதுவும் வார்த்தை அளவிலானது மட்டுமே. மற்றப்படி, ஒற்றையாட்சியின் ஏற்பாடுகள் அனைத்துமே அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொண்டு, வார்த்தையளவில் மாற்றமொன்றை ஏற்படுத்திவிடுவது தொடர்பிலான போராட்டத்திலேயே, சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவுக்குள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
அது தவிர்த்து, மொழிக் கொள்கைகளின் அடிப்படையில் சிங்களம், தமிழ் என்கிற இரு மொழிகளையும் ஆட்சி மொழியாக வரையறுத்து, சம அந்தஸ்து வழங்குவது என்று, இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்றும் தெரிகின்றது.
“அரசியலமைப்பு வழிநடத்தல் குழுக் கூட்டங்களுக்கு, வெளிநாட்டிலிருந்து அரசியலமைப்பு துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்களும் மிகவும் முன்னேற்றகரமான ஆலோசனைகளையெல்லாம் முன்வைத்தார்கள். ஆனால், அந்த ஆலோசனைகள் எவையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
மாறாக, கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தர் தினேஷ் குணவர்த்தன, ஜாதிக ஹெல உறுமயவின் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரின் கருத்துகள் வீச்சுப் பெற்றன. அவர்களின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் நோக்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் அதிகமாகக் காணப்பட்டது.
சம்பந்தனும் சுமந்திரனும் பல நேரங்களில் “ரயிலைப் போகவிட்டு கை காட்டும்” நிலையிலேயே இருந்தார்கள். தற்போதும் அப்படியான சிக்கலொன்றையே சந்தித்து நிற்கின்றார்கள். அவர்கள் இருவரும் “யதார்த்தம் எது என்பது தொடர்பில் தெளிவாக இருக்கின்றார்கள். ஆனால், அதனை எவ்வாறு மக்களிடம் பேசுவது என்பது தொடர்பில் குழப்பத்தோடு இருக்கின்றார்கள்.
இப்போது ஏற்பட்டிருக்கின்ற நிலை இதுதான்” என்று வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர் ஒருவர் தனிப்பட்ட உரையாடலொன்றின் போது என்னிடம் கூறினார். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் இன்னொரு முக்கியஸ்தரும் இவ்வாறான விடயமொன்றையே சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அப்போதும், இந்தப் பத்தியாளர் அதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள் மீது, அவர்கள் உடன்படாத அரசியலமைப்பு ஒன்று இறக்கி வைக்கப்படப்போகின்றது. அதன் பங்காளிகளாக கூட்டமைப்பும் இருக்கப்போகின்றது. ஆனால், இங்கிருக்கின்ற கேள்வி, சாத்தியமில்லாத விடயங்கள் சார்பிலான நம்பிக்கைகளை தொடர்ச்சியாக விதைப்பதில், சம்பந்தனும் கூட்டமைப்பும் ஏன் இன்று வரையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே. அது, மக்களை ஒரு வகையில் எரிச்சலடைய வைத்திருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள், காலாகாலமாக வெளிப்படைத்தன்மையற்ற உரையாடல்களையே நிகழ்த்தி வருகின்றன என்பது வரலாறு. ஒப்பீட்டளவில் யதார்த்தத்துக்கு ஒப்பில்லாத விடயங்களை வாக்குறுதிகளாகவும் வழங்கி வந்திருக்கின்றன.
அப்படிப்பட்ட நிலையொன்றின் நீட்சி, இன்னமும் எந்தவித தொய்வுமின்றி நீடிக்கின்றது. அது, தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளிடம் இருந்து செயற்பாட்டுத் தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் கூட ஊடுகடத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் தமிழ் மக்கள், கடந்த கால அனுபவங்களை உள்வாங்கி பிரதிபலிக்கும் நிலை நோக்கி முன்னோக்கி வந்திருக்கின்றார்கள். அது, அரசியல் தலைமைகளின் வாக்குறுதிகளுக்கு அப்பாலானது. சாத்தியப்பாடுகள் சார்ந்தவை. ஆனால், தேர்தல் அரசியல் சார்ந்து மாற்றுத் தெரிவுகள் என்கிற நிலை இன்னும் உருவாகவில்லை.
இன்னும் சில காலத்துக்கு அது சாத்தியமும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், கூட்டமைப்பின் மீதான ஏக அங்கிகாரத்தையே மக்கள் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து நிற்பார்கள். ஆக, உணர்ச்சிபூர்வமான வாக்குறுதி அரசியலுக்கு அப்பாலான நிலை சார்ந்து, கூட்டமைப்பும் அதன் தலைமையும் இயங்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. ஏனெனில், அதனையே மக்கள் தற்போது எதிர்பார்த்து நிற்கின்றார்கள்.
மாறாக, சந்தர்ப்பங்களைச் சமாளித்தால் மாத்திரம் போதுமென்கிற நிலையில், “இயங்கித் தப்பித்தல்” என்பது கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. வெள்ளிக்கிழமை கூட்டப்படவுள்ள கூட்டமைப்பின் கூட்டமும், நிலைமைகளைச் சமாளிக்கும் நோக்கிலானதுதான்.
அது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தயார்ப்படுத்துவதற்கானது. அது, தமிழ் மக்களை ஒருவகையில் புதிய அரசியலமைப்புக்கு இணங்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அதுதான், உறைக்கும் உண்மை.
(புருஜோத்தமன் தங்கமயில்)