(ஜனவரி 3ம் திகதி கனடா மிரர் என்ற பத்திரிகையில் வந்த செய்தியை தற்போதைய நிலைக்கும் பொருந்துவதினால் பிரசுரிக்கின்றோம்)
வடக்கு மாகாண முதல்வர் திரு.சிவி. விக்னேஸ்வரன் அவர்களின் முதன்மையதிகாரியாகப் பணியாற்றும் நிர்மலன் கார்த்திகேசு கனடாவிற்கு வருகை தந்துள்ளார். ஐக்கிய நாடுகளவையின் அபிவிருத்தித் திட்டத்திற்காக 250 மில்லியன் டொலர்களை ஐக்கியநாடுகளைவை வடமாகாணத்தில் செலவளிக்க முன்வந்தது.
அதனை ஏற்றுக் கொள்வதற்கான நிபந்தனையாக முதலமைச்சர் திரு.சிவி. விக்னேஸ்வரன் அவர்கள் அவுஸ்திரேலியப் பிரஜையான தனது தனிச் செயலாளர் நிர்மலன் கார்த்திகேசுவை அந்தத் திட்டத்திற்கான விசேட அலுவலராக நியமனம் செய்யக் கோரி ஐக்கிய நாடுகளவைக்கு கடிதம் எழுதியதோடு, அக் கடிதத்தில் தன்னுடைய தனிச் செயலர் நிர்மலன் கார்த்திகேசுவிற்கு மாதாந்தம் 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கொடுக்க வேண்டுமெனவும் நிர்ப்பந்தித்தார்.
இதற்குப் பதிலளித்த ஐக்கிய நாடுகளவை பதிலளித்த போது தங்களுடைய அமைப்புக்கு ஆட்களைச் சேர்ப்பது தங்களது பணியென்றும், அதற்கான வரையறுக்கப்பட்ட முறை நடைமுறையிலுள்ளதெனவும் அதில் யாரும் தலையிட முடியாது என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக வடக்கிற்கு கிடைக்கவிருந்த 250 மில்லியன் டொலர்கள் அங்கு துன்பப்படும் மக்களிற்கு கிடைக்காமல் செய்த பெருமையை வடக்கு மாகாணசபை பெற்றுக்கொண்டது. இத்தகைய சர்ச்சைகளை சந்தித்த் திரு. நிர்மலன் கார்த்திகேசு கனடாவில் தனது தனிப்பட்ட தொடர்பாடல்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.
இதேவேளை கனடாவிற்கு ஒரு மாநகரசபையின் உத்தியோகபூர்வ அழைப்பில் விஜயம் செய்யும் வடக்கு முதல்வரின் விஜயத்தை தனிப்பட்ட தேவைகளிற்காகவும், பண-நிதி திரட்டல்களிற்காவும் பயன்படுத்தும் நடவடிக்கையானது மிகுந்ததொரு சர்ச்சையைத் தோற்றுவிக்கவுள்ளது.
குறிப்பாக முதல்வரின் கனடிய பயணத்திற்கான பொறுப்பேற்றல் கடிதமானது மார்க்கம் நகராட்சியின் முதல்வரால் கையொப்பமிடப்பட்டு கனடியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டதே அவர் விசாப் பெறுவதற்கு ஏதுவாயிற்று.
இந்நிலையில் வடக்கு முதல்வரின் பயணத்திற்கு தாங்கள் தான் பயணச்சீட்டு வாங்கினோம், தாங்கள் தான் கொட்டேல் வசதிகளை ஏற்படுத்தினோம் என பணம் சேர்க்கும் ஒரு குழுமம் வர்த்தகர்களை அணுகி நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த “முதல்வரை வரவேற்பதற்கான தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள்” குழுவின் அங்கத்துவர் ஒருவர், தன்னை தனது குழு முட்டாளாக்கி முதல்வரின் பயணச் சீட்டு உள்ளிட்ட சகல செலவுகளையும் தாங்களே ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்ததாகக் கூறினார்.
இருந்தபோதும் கொள்வனவு செய்யப்பட்ட ரிக்கற்றுக்களின் பணப் பெறுமதி விபரங்கள் மீளப் பெறுவதற்காக மார்க்கம் தமிழ் மரபுரிமைக் குழுவிடம் கையளிக்கப்பட்ட விபரம் தெரிந்த போது தான் வியப்படைந்ததாகவும், இந்த மோசடிகளைத் தடுக்க திரு. நிர்மலன் தனது பரிவாரங்களினுடாக உதவி புரிவார் என்றும் நம்புவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை மார்க்கம் நகராட்சியின் “பொறுப்பேற்கப்பட்ட விருந்தினரான” வடக்கு முதல்வர் திரு.சிவி. விக்னேஸ்வரன் அவர்கள் எதற்கென அடையாளம் காணப்படாத ஒரு நிதிசேர்ப்பில் இணைந்து கொள்ள அவரது முதன்மை அதிகாரியான நிர்மலன் கார்த்திகேசு எவ்வாறு அனுமதியளித்தார் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது.
மார்க்கம் நகரசபை தனது இராஜாங்க அழைப்பிதழை மீளப்பெற்றால் முதல்வர் திரு.சிவி. விக்ணேஸ்வரன் அவர்கள் கனடாவிற்கு வரவிருக்கும் நிகழ்வில் முட்டுக்கட்டை ஏற்படும் என்றும் அதற்கான முழுப் பொறுப்பேற்றலும் திரு. கார்த்திகேசு நிர்மலனையே சாருமெனவும் விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
(சுதர்மா)