(எழுக தமிழ் என்று சொல்லி உசுப்பேத்தும் அரசியலில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லை ஆகினும் தமிழ் மக்கள் பேரவையின் சுய ரூபத்தை அம்பலப்படுத்த இந்தக் கட்டுரையும் உதவலாம் என்பதன் அடிப்படையில் பிரசிரிக்கின்றோம்- ஆர்)
(புருஜோத்தமன் தங்கமயில்)
இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்படுத்தும் பிரசாரப்பணிகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்ட வடிவமொன்றில் அதிகளவான தமிழ் மக்கள் கூடிய தருணம் அது.
அப்படியொரு மக்கள் திரட்சியையும் கோரிக்கைகளின் கோசத்தையும் மீளவும் நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. அதனை, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் நிரூபிப்பார்கள். அது தொடர்பில் எந்தவித சந்தேகங்களும் கொள்ள வேண்டியதில்லை.
ஆனால், முதலாவது எழுக தமிழ் பேரணிக்கும் இரண்டாவது பேரணிக்கும் இடையிலான இந்த நான்கு மாதங்களில், எழுக தமிழை முன்னிறுத்தி என்ன வகையான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் காணும்போது, சில உறுத்தலான விடயங்கள் மேலெழுந்திருப்பதைக் காண முடிகின்றது.
குறிப்பாக, தமிழ் மக்கள் பேரவை ஒருங்கிணைந்த பேரணி என்கிற நிலையிலிருந்து எழுக தமிழ், ஒரு சில கட்சிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டது அல்லது அந்தக் கட்சிகளின் ஆதரவு நிலையைக் காட்டுவதற்கானது என்ற நிலையை நோக்கி நகர்ந்திருக்கின்றது.
இது, ஒருவித ஒவ்வாமையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை, தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிசாரா அங்கத்தவர்கள் சிலர் உணர்ந்து கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
முதலாவது, எழுக தமிழ் பேரணியில் உரையாற்றும்போது, பேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன், “எழுக தமிழ் பேரணி எந்தவொரு கட்சிக்கும் எதிரானது இல்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு எதிரானது இல்லை. அதுபோல தென்னிலங்கைக்கும் எதிரானது இல்லை. மாறாக, தமிழ் மக்களின் உரித்துக்கள் குறித்து உரக்கச் சொல்வதை நோக்கமாகக் கொண்டது” என்றார்.
அதுபோல, எழுக தமிழ் பிரகடனமும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தற்போதைய வாழ்வாதார சிக்கல்கள் தொடர்பிலேயே கோடிட்டுக் காட்டியிருந்தது. அந்தப் பிரகடனம் தமிழ் மக்களின் எழுபது வருடகாலக் கோரிக்கைகளின் தொடர்ச்சியே.
தமிழ்த் தேசிய அரசியலில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த முடிவுகளையும் எடுக்கும் நிலைக்கு நகர்த்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தங்களை வழங்கக் கூடிய ஏற்பாடுகளை எழுக தமிழ் உள்ளிட்ட மக்கள் எழுச்சிகள் ஏற்படுத்தும் என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது.
அரசியலின் போக்கில் அது அவசியமானது. அரசியல் உரித்துகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபடும் இனமென்கின்ற நிலையில், எப்போதுமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி பொறுப்பு தமிழ் மக்களுக்குரியது. அப்படியான தருணத்தில் கூட்டமைப்பை கேள்விகளுக்கு அப்பாலானது என்று கொள்ள வேண்டியதில்லை.
அழுத்தத்தை வழங்கிக் கொண்டிருப்பதன் மூலம், கூட்டமைப்பை சரியான திசையில் இயக்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய முடியும். ஏனெனில், ஏகநிலை என்பது தமிழ் மக்களை பல தருணங்களில் தோல்வியின் பக்கத்துக்கு நகர்த்தியிருக்கின்றது.
ஆக, ஏகநிலையில் இருந்தாலும், தொடர் அழுத்தம் ஒன்று தலைமையேற்கும் தரப்புக்கு அவசியமானது. அதன்போக்கிலும், தமிழ் மக்களின் திரட்சி தொடர வேண்டியது.
ஆனால், எழுக தமிழில் ஒருங்கிணைந்த மக்கள், கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டவர்கள் என்கிற அடையாளப்படுத்தல்கள்தான் பெரும் சிக்கலை தற்போது ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
அதாவது, எழுக தமிழ் பேரணியை, வாக்கு அரசியலின் போக்கில் கையாளுவதற்கான ஏக்கத்தினை சில தரப்புக்கள் கொண்டிருக்கின்றன.
எழுக தமிழ் பேரணி நிறைவடைந்து ஒரு மணித்தியாலம் கடந்திருக்காது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பேரவையின் முக்கியஸ்தருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒருவித உச்சநிலையை அடைந்த தொனியில் கருத்தொன்றை சமூக ஊடகமொன்றில் வெளியிட்டார். அது கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை நோக்கியது. ஏனெனில், சமூக ஊடகத்தளத்தில் கஜேந்திரகுமாருக்கும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் நக்கல் நையாண்டிகளுடனான விவாதங்கள் விடாப்பிடியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. அதன்போக்கிலேயே, எழுக தமிழுக்குப் பின்னரான அவரது, கருத்தும் இருந்தது.
அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த போதும் ‘எழுக தமிழ்’ எதன் போக்கில் அவசியமானது? என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் முன்வைத்த கருத்துக்கள் சில அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதில், முக்கியமானது ‘மஹிந்தவை எழுப்புவது’ தொடர்பிலானது.
அதாவது, “இந்த (மைத்திரி- ரணில்) ஆட்சியை விரும்புகின்ற சர்வதேசம், குறிப்பாக வல்லரசுகளுக்கு இந்த ஆட்சி கவிழாமல் காக்க வேண்டிய தேவையுண்டு. தமிழ்த் தேசிய அரசியல் எவ்வளவுக்கு கொந்தளித்து, தலை தூக்குகின்றதோ, அது தென்னிலங்கையிலும் பாரிய விளைவினை ஏற்படுத்தும். ராஜபக்ஷ போன்றவர்களுக்கு அதுவொரு பலத்தைக் கொடுக்கும்.
தமிழ் அரசியல் பலப்படுவது, தென்னிலங்கையில் இனவாதத்தைக் கூ(கா)ட்டும். அது, அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். அதாவது, தமிழ் மக்களை அமைதியாக்குவதற்கு தமிழ் மக்களின் நலன்களையும் பேண வேண்டும் என்றொரு நிலைமையைக் கொண்டு வரும்.
ஆகவே, எழுக தமிழ் போன்ற மக்கள் பேரெழுச்சிகள் அந்த அழுத்தத்தைக் கொடுக்கும். குறிப்பாக, இந்த ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகின்ற தரப்புக்களுக்கு, இந்த எழுச்சி, பெரியளவில் அழுத்தமாக இருக்கும். அவர்களுக்கு இருக்கின்ற பயம், தமிழ் மக்கள் பெரியளவில் கொந்தளித்துக் கொண்டு வந்தால், தென்னிலங்கையிலும் கொந்தளிப்பு வரும்.
ஆகவே, ஏதோவொரு வழியில் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு தீர்வைக் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படும். அவர்களுடைய எடுபிடிகளாக இருக்கக் கூடிய இன்றைய அரசாங்கம் அந்த அடிப்படையில் வேலை செய்யத் தொடங்கும்” என்றார்.
மைத்திரி – ரணில் ஆட்சியை இந்த ஆண்டின் இறுதிக்குள் கவிழ்ப்போம் என்று மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருக்கின்ற நிலையில், ‘மஹிந்தவை எழுப்புதல்’ தொடர்பில் கஜேந்திரகுமார் வெளியிட்ட கருத்து ஒருவிதமான சிரிப்பையும், அதேநேரம் எரிச்சலையும் ஏற்படுத்திவிட்டிருக்கின்றது.
எழுக தமிழ் பேரணியில் பிரதான உரையாற்றிய விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு முழுவதும் எதிரான கருத்தினையே கஜேந்திரகுமார் இப்போது எழுக தமிழ் தொடர்பில் வெளியிட்டிருக்கின்றார்.
மஹிந்தவை எழுப்புவது தொடர்பில் கஜேந்திரகுமார் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, பேரவையின் ஏனைய முக்கியஸ்தர்களும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். ராஜபக்ஷக்கள் மீண்டும் கோலொச்சும் ஆட்சி தொடர்பில் பேரவை முக்கியஸ்தர்களே அச்சம் கொண்டிருப்பார்கள். கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக ராஜபக்ஷக்களின் எழுச்சியை பூகோள அரசியலின் போக்கில் தேவை என்று வலியுறுத்துகிறார்கள்.
பூகோள அரசியல் பற்றிய உரையாடல்களை இவர்கள் எப்போதுமே முரணான பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் நோக்கம் அபத்தமானது. கஜேந்திரகுமார் சொல்லிக் கொள்ளும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரம், இன்னொரு மாதிரி வேலை செய்தால் மீண்டும் முள்ளிவாய்க்கால் கொடூரங்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம்.
அதாவது, இப்போது தமிழ் மக்கள் நிலையெடுத்துப் பாதுகாப்பான ஆட்டத்தினை ஆட வேண்டியிருக்கின்றது. மாறாக, காட்டுத்தனமான தாக்குதல் ஆட்டத்தினை அரசியலாகச் செய்ய முடியாது. மரபுரீதியான ஆயுதப் போராட்டத்தில் கட்டங்களையெல்லாம் கண்டுவந்த தமிழ் மக்களுக்கு அது தெரியும். ஆனால், கஜேந்திரகுமார் “தாக்குதல் ஆட்டத்தை ஆடுவோம். அதுதான் சாத்தியமான வழிகளைத் திறக்கும்” என்கின்றார். அவரின் நிலைப்பாட்டின் பக்கம் மக்கள் தற்போது செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
ஆனால், இங்கிருக்கின்ற கேள்வி, கஜேந்திரகுமாருக்கு அரசியல் ஆசான்களாக செயற்படுகின்ற புத்திஜீவிகள் உண்மையிலேயே தாக்குதல் ஆட்டமொன்றுக்கு தயாராகவா இருக்கின்றார்கள்?
இன்னொரு முள்ளிவாய்க்கால் கொடூரத்தை ஒத்த அரசியல் சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்களா? அப்படியிருக்க வாய்ப்பில்லை. அவர்களும் பாதுகாப்பான சூழலுக்குள் இருந்துகொண்டே ஆட (போராட) விரும்புகின்றார்கள். அப்படியிருக்க, ஏன் மஹிந்தவை எழுப்புவது தொடர்பிலான கருத்துக்களை கஜேந்திரகுமாரைக் கொண்டு வெளியிட வைக்கின்றார்கள்.
இவ்வாறான கருத்துக்களை அவர் பூகோள அரசியலின் போக்கில் புத்திசாலித்தனமானது என்று நினைத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். இது, அவரோடு எஞ்சியிருக்கின்ற கொஞ்ச மக்களையும் விலகிச் செல்ல வைத்துவிடும்.
அது, உண்மையான நோக்கங்களைக் கொண்ட எழுக தமிழையும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்திவிடும். எழுக தமிழ், அவருக்கோ, முன்னணிக்கோ தனித்துச் சொந்தமானதல்ல. அது, மக்களின் போராட்ட வடிவங்களில் ஒன்று. அதற்கு எந்தச் சாயமும் அவசியமல்ல.