(மாதவன் சஞ்சயன்)
ஆரம்பத்தில் 25 நாடுகள் ஆதரவளித்த நிலையில் தற்போது 38 நாடுகளும் நாளடைவில் அனைத்து நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தியில் நாம் சர்வதேசத்தின் கரிசனையில் வந்துள்ளமை தெரிகிறது. நாடுகளின் நலன்களுள் எம் நலன்களும் அடங்கும் விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு எமக்கு சாதகமானதை பெறுவதே புத்திசாலித்தனம். இந்த நிலையில் நடைமுறை சாத்தியமான விடயத்தை நாம் முன்னெடுத்தால் அது நிச்சயம் சாத்தியமாகும். பிரிவினை திட்டத்தை இந்தியா ஆரம்பத்திலேயே ஆதரிக்கவில்லை என்பதை சம்மந்தர் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காலம் கடந்தாவது பகிரங்கமாக இன்று ஒத்துக்கொள்கின்றனர். இந்திய அனுசரணை இன்றி எதுவும் அரங்கேறாது.
தன் வழி சென்ற பிரபாகரனின் 2ம் கட்ட தலைமைகளுக்கும் இறுதியில் இந்த நிலைமை புரிந்ததால் தான் சரணடைய முன்வந்தனர். ஆகவே வீ வோன்ட் தமிழ் ஈழம் என்பது வெற்றுக் கோசம் என்பது கத்துபவருக்கும் தெரியும். அதே வேளை சமஸ்டி என்ற சொல் வேண்டத் தகாததாக பார்க்கப்படும் நிலை இன்றும் உள்ளதால் எடுத்த எடுப்பில் அதை தூக்கிப்பிடிக்க முடியாது.
சந்திரிகா காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வை, பிரபாகரனுக்கு பயந்த சம்மந்தர் தலைமையால் ஆதரிக்கா முடியவில்லை. இன்று அந்த நிலை இல்லை. அதை எதிர்த்த ரணில் கூட இன்று நியாயமான தீர்வு பற்றிய முன் மொழிவை செய்ய முற்படுகிறார். சர்வதேச நெருக்கு வாரத்தில் இருந்து நாட்டைக்காக்க தாம் ஐ நா வுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீற முடியாத நிலையில் தான் தற்போதைய அரசு உள்ளது.
அதே வேளை உள்நாட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாதம் முற்றாக தன் நிலை தளர்ந்து விடவில்லை என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. உதய கம்மன்வில போன்ற அதி தீவிரம் கொண்ட தெற்கின் அரசியல் வாதிகள் இந்த அரசு 2 வருடங்கள் கூட தாக்குப் பிடிக்குமா என பகிரங்கமாகவே சவால் விடுகின்றனர்.
கிராமப்புற சிங்கள மக்களிடம் நாடு பிரிபடப் போகிறது என்ற அச்சத்தை அவர்கள் ஊட்டிக்கொண்டே இருக்கின்றனர். இந்த நேரத்தில் பண்டா-செல்வா ஒப்பந்த காலத்தில் எழுந்த சமஸ்டிக்கு எதிரான கோசத்துடன் மீண்டும் வீதிக்கு வர தீவிர பௌத்த பிக்குகளும் காத்து இருக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட பொது பல சேனாவின் இனவாத போக்கின் பின் செல்ல பலர் இருக்கிறார்கள்.
எடுத்த எடுப்பில் இதுதான் வேண்டும் என்ற தீர்வு வரைவை முன்வைக்கும் நிலையில் தமிழர் தரப்பு இன்று இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தம் எமது விருப்பு தெரிவு இல்லா விட்டாலும் கூட அதனை அன்று அனைவரும் ஏற்றிருந்தால் 13வது திருத்தம் மிகப் பலமானதாக அமைந்திருக்கும்.
சந்தர்ப்பங்களை தவறவிடுவதே எம்மவர் சரித்திரம் என்ற நிலைமயை இனியும் நாம் தொடரக்கூடாது. 6 தசாப்தங்களுக்கு மேலான பிரச்சனை ஐ நா அறிக்கையுடன் தீர்ந்துவிடும் என்ற எதிர்பார்க்கையுடன் கற்றுக்குட்டி அரசியல் செய்பவர்களும், அமெரிக்கா ஸ்ரீலங்காவின் காதை முறுக்கும் என்று காத்திருந்த கனவான்களும் சர்வதேச அரசியலை புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
பிராந்திய அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. நாடுகள் தம் நலன் சார்ந்த முடிவுகளை தான் நடைமுறைப் படுத்தும். அதில் நமக்கு சாதகமானதை, படிப்படியாக பெறவேண்டிய கையறு நிலையில் தான் நாம் இருக்கிறோம். பல கோடி தமிழர்கள் இந்தியாவில் இருந்தும் இறுதி யுத்த நேரத்தில் அவர்களினால் எதைச் செய்ய முடிந்தது ?
வைகோ முதல் கருணாநிதி வரை அமெரிக்க வரைவை விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்களால் இந்திய அரசைக் கொண்டு எதனையும் செய்விக்க இயலவில்லை. பாரிய ஆயுதங்கள் பாவிக்கப் படவில்லை என்ற செய்தி கேட்டதும் தான் நடித்த காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட உண்ணா விரத நாடகத்தை முடித்தவர் முத்துவேலர் கருணாநிதி.
தேர்தல் முடியும்வரை தாக்கு பிடியுங்கள் என கூறி அனைவரையும் கூண்டோடு கைலாயம் அனுப்பியவர் வைகோ. யுத்தம் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வர் என அறிக்கை விட்டவர் ஜெ ஜெ அம்மையார். இன்று அவர் தமிழ்நாடு சட்ட சபையில் எத்தனை தீர்மானம் போட்டாலும் டெல்லிக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றதே.
பேரவலம் முடிந்த பின் தொடங்கிய மே17 இயக்கமும், சீமானின் முழக்கமும் இறந்தவர்களுக்கு நீதி கேட்டு புலம்பெயர் புலி பினாமிகள் அனுசரணையில் உலகை வலம்வர, இலவச பயணங்கள் செய்யும் அதே வேளை, தமிழ் நாடு அகதி முகாங்களில் எம்மவர் உயிரோடு வதைபட, மற்றவர்கள் அமைக்கின்றனர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.
ஆரம்ப அமெரிக்க வரைவில் இருந்ததில் மாற்றம் செய்து, ஸ்ரீலங்காவுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்ட போதும், அது எமக்கு பூரண திருப்தி தராவிட்டாலும் அதனை முதல்ப் படியாக கொண்டு மேலும் வலுவான தீர்வை பெறமுடியும் என சுமந்திரன் கூறியது அவரின் நம்பிக்கையின் வெளிப்பாடே. அன்று வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது ஈ பி ஆர் எல் எப் தலைவர் பத்மநாபா கூட, நாம் இதனை எமக்கான தீர்வின் ஆரம்ப படியாகவே கொள்கிறோம் எமது தொடர் செயல்பாட்டால் இதனை முழுமைப் படுத்துவோம் என விடுத்த அறிக்கை குறிப்பிடத்தக்கது.
அன்று போராட்ட இயக்கமாக இருந்த தம்மை ஒரு அரசியல் கட்சியாக மாற்றிய பெருமை ஈ பி ஆர் எல் எப் க்கு உண்டு. இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை திருமலையில் நிறுவி மாகாண கொடி ஏற்றி ஆட்சி நடத்தியவர்கள் அந்த யதார்த்தவாதிகள். பத்மநாபாவின் நம்பிக்கை கூற்றை நிறைவேற்ற மாகாண முதல்வர் தன் பங்களிப்பை செய்த போதும் பிரேமதாசவின் ஏவல் கூட்டமும், பின்பு அவரின் வாலாக செயல்பட்டவர்களும் செய்த செயலால் நிகழ்ந்தது தான் கூறுபட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள்.
எடுத்ததற்கு எல்லாம் பொன்னான வாய்ப்பு, சொர்க்க வாசல் என்பவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் இடைக்கால நிர்வாக சபையை கூட அமைக்க முடியாமல் இருந்த நிலையை அனைவரும் அறிவர். இணைந்த சபையை வடக்கு கிழக்கு என பிரிக்கப்படுவதை வெறுமனே பார்த்திருந்த அரசின் பங்காளிகள் / பயனாளிகள்.
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல் தம்மால் இணங்கியும் செய்ய முடியாததை இன்று எதிரணி செய்ய முற்படும் வேளையில் அந்தக் காரியம் முழுமை அடையும் முன் குற்றம் காணலும், குறை கூறலும், ஏளனம் செய்வதும் அவர்களின் இயலாமையினால் வரும் பிதற்றல்கள்.
தம் சாதனை என எதையும் கூற முடியாத இவர்கள் சர்வதேச அனுசரணையை பெற முற்படும் சம்மந்தர் தலைமை மீது அபசுரம் வாசிக்கும் நாயனமாக மாறிவிட்டனர். சம்மந்தர் அணியினர் மக்களிடம் வாக்குறுதி கொடுத்து வென்றவர்கள். அதை நிறைவேற்ற அவர்கள் முயன்று தோற்றால், மக்களுக்கு பதில் கூற வேண்டியவர்களும் அவர்கள் தான்.
கடந்த கால சூழ்நிலை வேறு இன்றுள்ள நிலைமை வேறு. சம்மந்தர் தலைமை சுயமாக செயல்ப்படும் போது எட்டப்படும் விடயங்கள், இனித்தான் தெரிய வரும். சம்மந்தர் சுமந்திரன் மட்டுமல்ல கூட்டமைப்பில் இருக்கும் ஒரு சில குழப்பல் வாதிகள் தவிர்ந்த அனைவரும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த முன்னெடுப்பை செய்கின்றனர்.
கரைசேர வேண்டும் என்றால் காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடக் கூடாது, நீரோட்டத்தின் போக்கில் நீந்தி அகப்பட்டதை பற்றி கரை சேருவதே புத்திசாலித்தனம். ஹுசைனின் அறிக்கை ஜெனீவாவில் அமெரிக்காவால் மென்மை படுத்தபட்ட உடன், அமெரிக்க செயலரை சந்தித்த சுமந்திரன் செயல்ப்பட்ட விதம் பற்றி போதகர் இமானுவேல் கூறியதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தாம் முன்னெடுத்த விடயத்தை கவனமாக கையாண்டு இந்தளவு தூரம் முன்னேறி இருக்கும் இவர்கள் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்தில் செயல்ப்படும் எம்மவர் ஆதரவையும் பெற்றமை வரவேற்கத் தக்கதே. அமெரிக்கா, கனடா பிரித்தானியா நாடுகளில் செயல்ப்படும் யதார்த்த வாதிகளின் அனுசரணை இவர்களுக்கு பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கை எமக்கு வேண்டும். எதையும் இலகுவாக விமர்சிக்காலம் ஆனால் அடைவதற்கு கடின முயற்சி வேண்டும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
6 வருடங்களின் பின் ஏற்பட்டிருக்கும் இந்த புதிய சூழலை நாம் பயன்படுத்தினால் ஏற்படக் கூடிய விடயங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாவது கிடைக்கும். மாறாக அகதி முகாங்களில் அவர்கள் தொடர்ந்தும் அல்லல்ப் படவேண்டும் என்றால், நீங்கள் மட்டும் பாதுகாப்பான நாடுகளில் வசதியாக இருந்து கொண்டு கூவுங்கள் வீ வோன்ட் தமிழ் ஈழம் என்று. ஊரில் மணல் வருமானம் இல்லாத மகேஸ்வரிகளும் மாரடித்து உங்களைப் போல் அறிக்கை வீரர்களாய் வலம் வரட்டும்.