ஈழத் தமிழர்கள் ‘நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்’ என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப் பேசும் போது குழப்பமாகத் தான் இருக்கும்.
உரிமைகளை வென்றெடுக்கவும், தங்களை வழி நடத்தவும் தலைமைக்குப் பின்னால் அணி திரள வேண்டும் என்று கோஷம் போடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தங்களைப் போலவே ஒரு மந்தைக் கூட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தமிழர்கள் எப்போதுமே ‘நாங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும்’ என்று பம்மாத்து விடுகிறார்கள். இதனால் தான் தங்கள் மந்தைகளுடன் சேராதவர்களை கறுப்பு ஆடுகளாக்கி, அவற்றை பலி(ழி) வாங்கிய வைரவருக்கு இத்தனை நாள் படைத்துக் கொண்டிருந்தார்கள்.
பின்னால், அந்த வைரவரே பலியாடு ஆகிய பின்னால், தங்களை மேய்ப்பதற்கான மேய்ப்பனை இந்த புலன் பெயர்ந்த தமிழர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
துப்பாக்கியை வைத்துக் கொண்டு, ‘ஈழத்தை அடிச்சுப் பறிக்கலாம்’ என்று கனவு கண்ட ஒரு மேய்ப்பனின் பின்னால், கேட்டுக் கேள்வியில்லால் போன கூட்டம், இன்னொரு முறை ‘அடிச்சுப் பறிக்கக் கூடிய’ தலைவன் கிடைக்காவிட்டாலும், ‘வாயால் வெட்டி எண்டாலும் விழுத்தக் கூடிய’ தலைவனாவது கிடைக்க மாட்டானா என்று அலைந்து கொண்டிருந்த போது, பாரசூட்டில் வந்து குதித்து இந்த மந்தையை மேய்க்கும் புனிதப் போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டவர் தான் எங்கள் முதல்வர் விக்னேஸ்வரன்.
எங்கள் போராட்டம் முப்பது வருட (அல்லது ஐம்பது வருடம்? Depending on who you ask!) வரலாறு கொண்டது என்று பீற்றிக் கொள்ளும் இந்த சமூகம், இந்த புதிய மேய்ப்பர் அந்தக் காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றிய ரிஷிமூலங்களை ஆராய்வதில்லை. சிங்களத் திணிப்பு, தரப்படுத்தல் என்று சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளைப் பட்டியலிடுவோர், அதையெல்லாம் கடந்து, சிங்கள அரசின் ஆட்சியில் ஒரு நீதிபதியாக இருந்தார் என்பதையோ, அவரது காலத்தில் சிங்கள அரசினால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு எந்த சட்டத்தின் கீழ் நீதி விசாரணை செய்து சிறைக்கு அனுப்பினார் என்பதையோ கேட்கவில்லை.
தேசியத் தலைவரின் நல்லாட்சிக் காலத்தில் கூட, ஈழப் பிரச்சனை பற்றி இவர் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்றோ, சமாதானக் காலத்தில் போய் இறங்கி தேசியத் தலைவரோடு போட்டோ எடுக்க முயன்ற புலன் பெயர்ந்த கோட் போட்ட பிரபலங்கள் மாதிரி, இவர் ஏன் ஒரு போட்டோ கூட எடுத்ததில்லை என்றோ யாராவது கேட்டார்களா? அப்படித்தான் ஆயுத அரசியலில் நம்பிக்கை இல்லை என்றாலும், பல்லிளிக்கும் தமிழ்ச்செல்வனுக்கே பல்லிளித்த கூட்டமைப்பில் கூட சேர்ந்து அரசியல் செய்ததில்லை.
இன்றைக்கு இப்படியெல்லாம் ஆக்ரோஷமாக சவால் விடுபவர், அன்றைக்கு ஏன் மெளனமாக இருந்தார் என்று சொல்வாரா?
இவர்களுடைய தேடலில் கஜேந்திரகுமார் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் மக்கள் ஆதரவு இல்லாமல் வெறும் விண்கற்களாக எரிந்து விழுந்த நிலையில், மாகாண சபையில் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன், கொண்டு வந்து இறக்கப்பட்டு கூட்டமைப்பின் சார்பில் முதல்வரானவர் தன்னை ஒரு ‘திடீர்’ விடுதலைப் போராளியாக்கிக் கொண்டிருந்தார்.
காவி போடாத குறையாக திருநீறணிந்து சைவப்பழமாக காட்சி தரும் முன்னாள் பிரேமானந்தா சீடரான இவரை, கோபாலசாமி மாதிரி கெரில்லா சீருடையில் கற்பனை பண்ணிப் பார்ப்பவர்களே தற்போது அதிகமாக இருப்பார்கள்.
காரணம், சிங்கள அரசுக்கு எதிராக ‘நிண்டு அடிபடுற’ ஒரே மாவீரன் இவர் தான்! (தற்போதைக்கு!)
கூட்டமைப்பு சார்பாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற இவர், தன் சொந்த செல்வாக்கால் தான் வென்றேன் என்று மார் தட்டிச் சொல்ல முடியாதவர். கூட்டமைப்பின் மென்போக்கு அரசியலால் எதையும் சாதிக்க முடியவில்லை என்று விரக்தியடைந்த ஈழம்வாழ் தமிழர்களும், வெளிநாட்டில் இருந்தபடியே காசைக் கொடுத்து தாங்கள் சொல்கிறபடி அரசியல் நடத்த அலையும் கோட் போட்ட புதுப் பணக்காரப் புலன் பெயர்ந்தவர்களும் ஆழக் கடலில் தேடிய முத்து தான் இவர். இவரும் தன்னை தற்போது பேரவை, கஜேந்திரக் குதிரைகள் கூட்டத்துடன் தான் அடையாளப்படுத்துகிறாரே தவிர, தனது பதவிக்கு காரணமான கூட்டமைப்புக்கு அல்ல. அடுத்த தேர்தலில் இவருக்கு ஆசனம் கிடைக்குமா என்பது பெருத்த சந்தேகமாகக் கூட இருக்கிறது.
முப்பது வருடம் ஈரூடகப்படை, வான்படை, தற்கொலைப் படையெல்லாம் வைத்திருந்த ஒரு மாமேதகுவால் சாதிக்க முடியாததை, இந்த வாய்வீரனால் சாதிக்க முடியும் என்று இந்த மந்தைக் கூட்டம் எந்த வித பகுத்தறிவும் இன்றி நம்பி வருகிறது.
முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில தெரியும் என்பது போல, இவர் மாகாண சபையை நடத்தும் இலட்சணத்தில் இவரால் ஒரு நாட்டைப் பிடிக்க முடியுமா என்பது தெரியும். ஊழல்கள், நிர்வாகத் திறமையின்மை, அபிவிருத்திக்கு அனுப்பப்படும் பணத்தையே பயன்படுத்த முடியாமல் திருப்பி அனுப்பும் திறன் என இவரது நிர்வாகத் திறனின் ‘திறம்’ அப்படி! இவரது ஆட்சிக்காலத்தில் வட மாகாணத்தில் எந்த விதமான அபிவிருத்தி திட்டங்களும் பெருமளவில் முன்னெடுக்கப்படவில்லை.
வீட்டு முற்ற மரநிழலில் சோம்பேறியாய் படுத்திருக்கும் நாய் தன் இருப்பைக் காட்ட அவ்வப்போது குலைப்பதைப் போல, சிங்கள அரசாங்கத்தை வெறுமனே விமர்சிப்பதுடன் இவரது அரசியல் கடமை முடிந்து விடுகிறது.
மாகாண சபை, மாகாண நிர்வாகம் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து, தன்னை ஒரு பிரபாகரனாக்கும் கூட்டத்தைக் குஷிப்படுத்த, தேசிய அரசியலில் கருத்துக் கூறுவதை இவர் வழக்கமாகக் கொண்டு வருகிறார். மாகாண சபை அமர்வுகளோ தாய்வானிலும் தென் கொரியாவிலும் நடைபெறும் பாராளுமன்ற குஸ்திகளை நினைவுபடு;துகின்றன.
மந்தைக் கூட்டத்திற்குள் இவருக்கு இருக்கும் மவுசை அறுவடை செய்து, தங்கள் அரசியல் கனவுகளை நிறைவேற்ற அலையும் முடிச்சுமாறிகளின் கைங்கர்யத்தில் இவர் கனடாவிற்கு வந்திருக்கிறார். மார்க்கட் இல்லாமல் அலையும் நடிகைகளைப் பார்ப்பதற்கே பணத்தைக் கொட்டி அலையும் கூட்டம், இவருடன் செல்பி எடுப்பதற்கு முண்டியடிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
இங்கே இருந்து பணத்தை அனுப்பி றிமோட் கொண்ட்ரோல் அரசியல் செய்யலாம் என்ற கனவில், கஜேந்திரக் குதிரைகள் மீது பணம் கட்டி மூக்குடைந்தவர்கள், தங்களை இலங்கை அரசியலைத் தீர்மானிப்பவர்கள் என்ற கனவில், இப்போது இவரை வைத்து நிதி திரட்டி, இவர் மூலமாக அங்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கனவு காண்கிறார்கள். இவர்களுடைய அரசியல் கனவுகள் முள்ளிவாய்க்காலில் மண் கவ்வினாலும், மீசையில் மண் படாதனவாகவே இருக்கின்றன.
இந்த மந்தைகள் கேட்க விரும்புகின்றவைகளைச் சொல்லி, அவற்றைக் குஷிப்படுத்துவதன் மூலம் நிதியுதவி பெறலாம் என்ற கணக்கு ஊரில் அரசியல் செய்யும் பலருக்கும் உண்டு. அவர்கள் அரசுக்கு எதிராக விடும் அறிக்கைகளை இங்குள்ள ஊடகங்களில் வெளிவரச் செய்வதில் அக்கறை காட்டுவதன் நோக்கமே அது தான்.
பிரபாகரனில் இருந்து விக்னேஸ்வரன் என மேய்ப்பர்கள் மாறியிருக்கிறார்களே தவிர, மந்தைகள் மாறவில்லை. எனவே இந்த வழமையான கோமாளிக்கூத்துகள் ஒன்றும் எங்களுக்கு புதியவை அல்ல.
ஆனால் ‘இறைவா, இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை’ என்று எச்சரிக்க வேண்டிய விடயம் ஒன்றிருக்கிறது.
இந்த விக்னேஸ்வரனின் அடிமுடிகளை ஆராய்ந்து பார்ப்போமா?
இவர் வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தி. அதிலொன்றும் பிரச்சனையில்லை. பிள்ளைகள் விரும்பிக் கொள்ளும்போது நடைபெறும் திருமணங்கள். இவர் ஒன்றும் பெரிய இடத்து சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அலைய வேண்டிய தேவையில்லாதவர்.
அதற்குள் வாசுதேவ இடதுசாரி! ஆனால் முன்னாள்!
அது தான் பிரச்சனை.
தற்போதைய வாசுதேவ முன்னைய firebrand இல்லை. பதவி சொகுசில் சுகம் கண்டவர்.
மகிந்தவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்ற பாடுபடும் விமல் வீரவன்ச உட்பட்ட நால்வர் அணியில் ஒருவர்.
இந்த சம்பந்தியுடன் இன்றும் உறவாடும் இவர், சாப்பாட்டறையில் எந்த அரசியலும் பேசமாட்டேன் என்று எந்தச் சத்தியப்பிரமாணமும் எடுக்கத் தேவையில்லை. ஆனால் தனது பிள்ளைகள் புகுந்த வீட்டில் பெருமையுடன் இருக்க வேண்டும் என்ற அக்கறை தந்தைக்கு இருக்குமல்லவா!
அங்கே எந்த அரசியல் சித்து விளையாட்டுகளுக்கான இரகசிய உடன்படிக்கைகள் நடைபெறக் கூடும்?
மகிந்த ஆட்சிக்கு வர வேண்டுமாயின், தமிழ் தரப்பு இன்னமும் தன்னுடைய போர்க்குணத்தைக் கைவிடவில்லை, தீவிரவாத சிந்தனையில் இருக்கிறது என்பதைக் காட்டியே ஆக வேண்டும்.
சிங்கள இனத்திற்கு ஒரு தமிழ் வில்லன் தேவை.
அந்த வில்லனை அடித்து வீழ்த்த ஒரு சிங்கள ஹீரோ தேவை.
ரணிலும், மைத்திரியும் மென்போக்கு அரசியல்வாதிகள். இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது உள்ளவர்கள்.
அவர்களால் சிங்கள இனத்திற்கு எதிராக தமிழ் தரப்பிலிருந்து எழும் வீரக்குரலை அடக்க முடியாது.
அதைச் செய்து காட்டிய மகிந்தவினால் மட்டுமே அது முடியும்.
எனவே அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள தரப்பில் எழ வேண்டும்.
மறுபுறத்தில், சிங்கள அரசு கைதிகளை விடுவிக்கவில்லை, நிலங்களை விடுவிக்கவில்லை, இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கவில்லை என்று மனம் குமுறும் தமிழர்களுக்கு, ‘சிங்களவனுக்கு அடி போட’ ஒரு மாவீரன் தேவை.
அந்த ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் இரட்டை வேடத்தை ஐயாவே கச்சிதமாக ஏற்று நடிக்க வேண்டுமாயின், மனோகரா வசனம் பேசியே ஆக வேண்டும்.
கூட்டமைப்பின் மென்போக்கு அரசியல் எந்த தீர்வையும் கொண்டு வரவில்லை, எனவே வெற்றி அல்லது வீரமரணம் என்று உரக்கச் சொல்லியே ஆக வேண்டும்.
மொத்தத்தில் தமிழர்கள் தங்களை யார் இன அழிப்பு செய்தார்கள் என்று சர்வதேச விசாரணைக்கு கோருகிறார்களோ, அவரை ஆட்சி பீடமேற்றும் கைங்கர்யத்தை விக்னேஸ்வரன் தனது வீரவசனங்களால் நிறைவேற்றுகிறார்.
அதற்கான மகிந்தவின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பாத்திரத்தை இவர் திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் தான் சிங்கள அரசு செய்யும் எந்த நடவடிக்கையையும் விமர்சிப்பவராக, அந்த நடிவடிக்கைகளுக்கு தமிழர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கக் கூடாது என்பதை உறுதி செய்பவராக நடந்து கொள்கிறார்.
சிங்கள அரசை விமர்சிப்பவரால், தமிழர்களின் விடுதலைக்கான, குறைந்தது சமஷ்டிக்கான தனது திட்டம் எதுவெனக் கூற முடியுமா? கேட்டால், அது கூட்டமைப்பு எதிர்க்கட்சியின் கடமை என்று மட்டுமே கூறுவார்.
கைதிகளின் விடுதலைக்கு, நிலங்கள் விடுவிப்புக்கு தான் என்ன செய்தேன் என்று கூறுவாரா?
ஏன் அந்தக் கைதிகளின் அவலங்களுக்கும், தங்கள் வாழ்வைக் கொண்டு நடத்த முடியாமல் அவலப்படும் முன்னாள் போராளிகளின் துன்பங்களுக்கும் நடுவில் இரட்டை நகர்க் கூத்துக்கான அத்தியாவசியத் தேவை தற்போதைக்கு என்ன, இதனால் முல்லைத்தீவு நகரில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நலன்கள் கிடைக்கும் என்பதை கூறுவாரா?
இந்த இரட்டை நகர்க் கூத்தை சம்பந்தனோ, சுமந்திரனோ செய்திருந்தால் நேர்காணல் என்ற பெயரில் ஜால்ரா வாழ்த்துப்பா பாடிய ஊடகக் கூட்டம், கூட்டத்தைக் குழப்பியே இருக்கும்.
இந்த ஜால்ராக் கூட்டம் முடிந்தால், ‘மகிந்த ஜனாதிபதியாக இருந்தாலும், இவருடைய இந்த அரச எதிர்ப்பு நிலைப்பாடு தொடருமா?’ என்பதைக் கேட்டுப் பார்க்கலாம்.
புலிகளுக்கும் ஈழத்திற்கும் ஆதரவாக முழங்கிக் கொண்டிருந்த வைகோ, சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகள் புலிகளின் இறுதிக்கட்டத்தில் எப்படி நடித்தார்கள், புலிகளை வைத்து எப்படி பிழைத்தார்கள், கடைசியில் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இயங்கினார்கள் என்பதெல்லாம் நாங்கள் கண்டதே. தற்போது புலிகளின் அழிவு அவர்களின் சம்மதத்துடனேயே நடந்தது என்ற விவரங்கள் எல்லாம் வெளியே தெரிய வருகின்றன.
விக்னேஸ்வரனின் தற்போதைய மனோகரா நாடகமும் இவ்வாறானதொன்றே.
போராட்டத்தைக் காட்டி பணம் சுருட்டிய கூட்டத்திற்கு அங்கே ஒரு சிங்கள இனவாதி வருவது பிழைப்புக்கு வசதியானதாக இருக்கலாம். புலியில் சவாரி செய்ய நினைத்து எல்லாம் முடிந்து கஜேந்திர மண்குதிரைகளை நம்பியது போல, இந்த ட்ரோஜான் குதிரையை நம்புவதன் மூலம் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு இன்னொரு அழிவுக்கு தமிழ்மக்களை இவர்கள் தயார் படுத்துகிறார்கள்.
இந்த நடிப்பை எல்லாம் விளங்கிக் கொள்ள முடியாதபடிக்கு, மந்தைக் கூட்டம் தலையை எட்டி வெளியே பார்க்க முடியாமல், முன்னால் போகும் மற்ற மந்தைகளின் பின் புறத்தை மணந்தபடி செல்பிகளுக்காக முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.
(தாயகம்)