ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசியல், சமூக, கலாச்சார உணர்வுகள் சார்ந்து மக்கள் திரள்வதற்கான துவக்கப் புள்ளி என்றால் எனக்கு மகிழ்ச்சியே.அதேவேளை இந்த போராட்டம் அடுத்து வரும் நாட்களில் என்னவாகப் போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கு முன் மதுவுக்கு எதிராக இப்படியான உணர்வெழுச்சி போராட்டங்கள் நடந்தன. அதற்கு முன்பு ஈழப்போரை முன்னிட்டு இதை விட உக்கிரமான ஆவேசத்துடன் இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் மக்கள் உணர்ச்சிகளுக்கான வடிவாலாக அவை முடிந்து போயின. எந்த கட்சிகளும் இப்போராட்டங்களை வடிவமைக்கவில்லை. சொல்லப் போனால் இளைஞர் கூட்டத்தை ஒரு அமைப்பாக, அரசியல் சக்தியாக மாற்றுவதில் கட்சிகளுக்கு அதிக ஆர்வமில்லை என தோன்றுகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா பூரா உள்ள நிலை தான். நிர்பயா விசயத்தில் திரண்ட பெரும் எதிர்ப்பை, ரோஹித் வெமுலா மரணத்தை ஒட்டின போராட்டங்களை எதிர்க்கட்சியால் ஒருமுகப்படுத்தி பயன்படுத்த முடியவில்லை. இளைஞர்களை, குறிப்பாய் மாணவர்களை, எப்படியான வாக்காளர் குழுவாய் கட்டமைப்பது என்பதில் கட்சிகளுக்கு குழப்பம் உள்ளது. இவர்கள் தேர்தல் களத்தில் எங்கிருப்பார்கள்? எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள்? யாருக்கும் தெரியாது. தெரியாதவரை இவர்களுக்கு என சமூக அதிகாரமும் கிடைக்காது. இது ஒரு நுட்பமான சிக்கல். அதுவரை இம்மக்கள் போராட்டங்கள் தற்காலிக உணர்வு வடிவால்களாய் மட்டுமே இருக்கும்.
ஒரு சமூகத்துக்கு இத்தகைய குறுகிய கால எழுச்சிகள் அவசியம் தான் என்பதையும் நான் மறுக்கவில்லை. சிவில் உணர்வை உயிர்ப்புடன் வைக்க இவை நிச்சயம் உதவும்.
அதேநேரம் ஜல்லிக்கட்டு பிரச்சனையை, அதன் நடைமுறை நிலவரத்தை, நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. ஜல்லிக்கட்டில் என்ன நடக்கிறது, அதன் சமூக, கலாச்சார, விவசாய தேவை என்ன என தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்? ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதி மக்களைத் தவிர கணிசமான மக்களுக்கு இது குறித்து தூலமான புரிதல் இல்லை. எனக்கு சமீபம் வரை தெரியாது. என் மனைவி ஒரு விலங்குகள் உரிமை ஆர்வலர். இந்த ஆர்வலர்கள் இப்போது இரண்டாய் பிரிந்திருக்கிறார்கள். ஒரு பகுதியினர் ஜல்லிக்கட்டை மாட்டைப் பிடித்து முரட்டுத்தனமாய் விளையாடுவது என பார்க்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஜல்லிக்கட்டை தடை செய்வது எப்படி ஒரு காளை இனம் அழிய காரணமாகும், எப்படி ஜல்லிக்கட்டு காளைகள் கிராமத்து மாடுகளில் சிறந்தவற்றின் மரபணுக்கள் மட்டும் அடுத்த தலைமுறைக்கு கடந்து போவதற்கான ஒரு முக்கியமான கண்ணி; மக்களால் ஜல்லிக்கட்டு இல்லாமல் இந்த மாடுகளை பராமரிக்க முடியாது என்பதால் அவற்றை கசாப்புக்கு அனுப்புகிறார்கள் என பேசுகிறார்கள். என் மனைவி இப்படியான ஒரு ஜல்லிக்கட்டு ஆதரவாளர். அவர் தான் தொடர்ந்து உரையாடி எனக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தினார். அதாவது ஜல்லிக்கட்டு ஒரு கலாச்சார தேவை மட்டும் அல்ல. விலங்கினங்களின் உய்வு எப்படி இது போன்ற பண்பாட்டு நிகழ்வுகளை நம்பி இருக்கின்றன என அவரும் அவரைப் போன்ற ஆர்வலர்களும் பேசுகிறார்கள்.
ஆனால் இந்த கோணத்திலான வாதங்களை நீங்கள் ஆங்கில சானல்களிலோ பத்திரிகைகளிலோ பார்க்க முடியாது. இந்திய அளவில் நன்கு படித்த கணிசமான மக்களுக்கே இந்த விசயங்கள் தெரியாது. அவர்கள் மாடுகள் ஒரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டின் பொருட்டு துன்புறுத்தப்படுகின்றன என்றே நினைக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் நிச்சயம் இதன் நுணுக்கங்கள் தெரிந்திருக்காது. அவர்களுக்கு சாதாரண காளைக்கும் ஜல்லிக்கட்டு காளைக்குமே வித்தியாசம் தெரியாது. தெரியாதது அவர்கள் தவறல்ல. நம் தவறு தான்.
எனக்குத் தெரிந்து இரு பத்தாண்டுகளாய் விலங்குகள் நல ஆர்வலர்கள் இது போன்ற பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு காளை மட்டுமல்ல நாய்கள், யானைகள், குரங்குகள், ஆமைகள் என எல்லா ஜீவராசிகளுக்காகவும் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த அமைப்பினரால் சில நன்மைகள் விளைந்துள்ளன. நம் நகரங்களில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கருத்தடை மூலம் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் பரபரப்பாய் செயல்படும் சென்னையில் நாய்க்கடியால் மக்கள் அதிகம் இறக்காமல் இருப்பதற்கு உதவியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தொண்டாற்றாத கேரளாவில் நாய்க்கடி ஒரு பெரும் பிரச்சனை. அதனால் தெருநாய்களை மக்கள் அங்கு கொன்று குவிக்கிறார்கள். கேரளாவில் நாய்களை பிடித்து கொன்று இறைச்சியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். தமிழகத்தில் இத்தகைய அவலங்கள் நிகழாததற்கு நாம் புளூகிராஸ் போன்ற அமைப்புகளையே பாராட்ட வேண்டும்.
மேலும் இந்த விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் ஆதரவற்ற, காயம் பட்ட மிருகங்களுக்கான சிகிச்சை மையங்கள் உருவாக்கி இருக்கிறார்கள். மிருகங்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ அங்கெல்லாம் போய் மூர்க்கமாய் போராடுகிறார்கள்.
ஆக பீட்டா, புளுகிராஸ் போன்ற அமைப்புகள் ஒரு முக்கியமான பங்காற்றி வருகின்றன.
இன்னொரு பக்கம் இந்த அமைப்புகளில் ஊழல் பெருத்து விட்டது. சாதாரண தொகை அல்ல. கோடிக்கணக்கில் தில்லுமுல்லு செய்கிறார்கள். இவ்வமைப்புகளின் சீரழிவை எதிர்க்கும் மாற்று விலங்குகள் இப்போது நல அமைப்புகள தோன்றி விட்டன. அவர்கள் இவ்வமைப்புகளின் ஊழலை சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துகிறார்கள். வழக்கு தொடுக்கிறார்கள். பீட்டா போன்ற அமைப்புகளுக்கு தம் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க ஒரு சாக்குபோக்கு தேவைப்படுகிறது. ஜல்லிக்கட்டு அப்படியான ஒன்று தான்.
ஜல்லிக்கட்டை தடை செய்வதற்காய் ஒரு திறமையான வழக்கறிஞரை அமர்த்தி பீட்டா பல வருடங்களாய் போராடி வருகிறது. ரெண்டாயிரத்தில் இருந்தே அவர்களின் ஆதரவாளர்கள் இணையம், மீடியா எங்கும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இந்த பிரச்சாரம் அவர்களுக்கு ஒரு ஒரு நல்ல புரொமோஷனாக இருக்கிறது. நிறைய பணம் ஜெயின் மக்களிடம் இருந்து நன்கொடையாக வருகிறது. ஜெயின் மக்கள் சைவர்கள். அவர்களுக்கு விலங்குகளை ”காட்டுமிராண்டிகள்” துன்புறுத்துவதாய் ஒரு சித்திரத்தை ஏற்படுத்தினால் உருகி விடுவார்கள். அவர்கள் அதைத் தடுக்க பணம் அள்ளித் தருவார்கள். பீட்டாவின் உயிர்நாடி இது தான். நாம் செய்ய வேண்டியது இந்த ஜெயின் நன்கொடையாளர்களின் தவறான மனபிம்பத்தை திருத்துவது தன். அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பதுதான்.
ஆனால் இந்த பிரச்சாரத்தை தகர்க்கும் ஒரு எதிர்-பிரச்சாரத்தை தொடுக்க தமிழர்களால் முடியவில்லை. இது தான் பிரச்சனையின் ஆதாரப் புள்ளி.
இப்போது தான் பீட்டா, புளுகிராஸ் போன்றவற்றின் போட்டி அமைப்பினர் மத்தியில் ஒரு சரியான புரிந்துணர்வு ஜல்லிக்கட்டு சார்ந்து ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இன்று பீட்டாவுக்கு எதிராக பேசுகிறார்கள். ஜல்லிக்கட்டின் பண்பாட்டு முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால் மாட்டு இனங்கள் பாதுகாக்கப்பட ஜல்லிக்கட்டு அவசியம் என நம்புகிறார்கள். ஆனால் இது போல் ஆயிரக்கணக்கானோர் பேச வேண்டும். இந்தியா பூரா இந்த மாற்று பிரச்சாரம் பரவ வேண்டும். அல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஒரு சூழல் அகில இந்திய அளவில் ஏற்படாது. அங்கு ஏற்படாவிடில் வருடாவருடம் நீதிபதிகள் தடை விதிப்பாளர்கள். ஒரு கட்டத்தில் இந்த மாட்டினமே கேரள கசாப்பு முதலாளிகளுக்கு மொத்தமாய் விற்கப்பட்டு அழிந்து விடும்.
அதாவது தமிழகத்துக்குள் நாம் எப்படியான கூட்டத்தை கூட்டி போராடினாலும் பயனில்லை. இது ஒரு அகில இந்திய பிரச்சனை. ஜல்லிக்கட்டை தடுப்பதற்காய் அவர்கள் நிறைய மெனக்கெடுகிறார்கள். அமைப்பு ரீதியாய் செயல்படுகிறார்கள். அரசியல்வாதிகளின் லாபி செய்கிறார்கள். பணத்தை இறைக்கிறார்கள். வழக்கறிஞர்களை வரிசையாய் அனுப்புகிறார்கள். வருடக்கணக்காய் இதற்காய் உழைக்கிறார்கள். நீங்களும் இந்தளவு உழைக்காவிடில் தோற்க வேண்டியது தான். லாபியிங்கை லாபியிங் மூலம் தான் சமாளிக்க முடியும். பிரச்சாரத்தை முறியடிக்க எதிர்பிரச்சாரம் செய்வதே தீர்வு. போராட்டங்கள் அரசியல்வாதிகளுக்கு புரியும். நீதிமன்றத்துக்கு புரியாது. உலகெங்கும் உள்ள ஊடகங்களுக்கு புரியாது. குறைந்தது, தமிழகத்தின் ஆங்கில ஹிந்து பத்திரிகை எடிட்டர்களுக்கே புரியாது. அவர்களின் ஆதரவின்றி நீங்கள் ஜெயிக்க முடியாது.
(Abilash Chandran)