“அவசரச் சட்டம் கொண்டு வந்து நானே சல்லிக்கட்டை துவங்கி வைப்பேன்” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்ததுபோல், அவசரச் சட்டம் கொண்டுவந்து, தற்காலிகமாக சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாகக் கூடியிருக்கும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கே அழுத்தத்தை கொடுத்திருந்தார்கள்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஊழலை ஒழிக்க ‘லோக்பால்’ உருவாக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரேன் பேடி ஆகியோர் நடத்திய போராட்டம் போல், இன்றைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ‘தலைவர்கள்’ இல்லாத பட்டாளம் குவிந்து கிடக்கிறது.
தமிழக வரலாற்றில், தமிழ் மொழிக்காகப் போராடிய மாணவர்கள், இன்றைக்கு தமிழ் கலாசாரத்துக்காக முன்னுக்கு நிற்பது அரசியல் கட்சிகளுக்கு பாடமாக அமைந்திருக்கிறது.
‘கத்தியின்றி, இரத்தமின்றி’ இப்படியொரு மிகப்பெரிய போராட்டத்தை அமைதி வழியில் நடத்த முடியும் என்பதை உலகுக்கு அறிவித்து இருக்கிறார்கள் தமிழக இளைஞர்கள்.
ஜனநாயக ரீதியில் போராடியே சல்லிக்கட்டை பெற்றுவிட முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள் தமிழக இளைஞர்கள்.
தீவிரவாதம், பயங்கரவாதம், மாவோயிஸம் போன்றவற்றால் இளைஞர்கள் இழுக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், ஜனநாயகத்தின் பால், அறவழிப் போராட்டத்தின்பால் இழுக்கப்பட்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு தமிழகமும் இந்தியத் திருநாடும் எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தகும்.
அப்படியொரு சாத்வீகமான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, “சல்லிக்கட்டு நடத்தப்படும்” என்ற தமிழ் கலாசாரம் காப்பாற்றிய அறிவிப்பாகும்.
தமிழகத்தில் ‘பொங்கலோ பொங்கல்’ என்பதுதான் தமிழக கிராமங்களில் தை மாதத்தில் கேட்கும் குரலாக இருக்கும். ஆனால், இப்போது ‘சல்லிக்கட்டோ சல்லிக்கட்டு’ என்ற குரல் சென்னை மெரினா கடற்கரையில் தொடங்கி கன்னியாகுமரி வரை கேட்கிறது.
ஏன் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் ‘சல்லிக்கட்டு’ ஆதரவுக் குரல் கேட்கிறது. இந்த ஒட்டு மொத்தக் குரல்களுக்கும் இப்போது கிடைத்துள்ள பதில் ‘சல்லிக்கட்டு நடக்கப் போகிறது’ என்பதுதான்.
2014 இல் சல்லிக்கட்டுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். அதற்கு மிக முக்கியக் காரணம் மத்திய அரசின் சட்டமான ‘மிருகவதைத் தடுப்புச் சட்டம் 1960’ தான். அந்தத் தீர்ப்பில் ‘மிருகவதை தடுப்புச் சட்டம், விலங்குகளின் நலன் சார்ந்த சட்டம்.
தமிழகத்தில் காளைகளை கும்பிடும் வழக்கம்தான் இருந்திருக்கிறது. காளைகளை அடக்கும் சல்லிகட்டு போன்ற பழக்கம் இருந்தது இல்லை. இந்த சல்லிக்கட்டு தமிழ் கலாசாரம் என்று கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை’ என்ற ரீதியில், ஒரு தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் அளித்திருந்தது.
அந்தத் தீர்ப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்குத்தான் மத்திய அரசுக்கு தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து ‘காளைகளை காட்சி பொருள் பட்டியலில் இருந்து நீக்குங்கள்’ என்று கூறி வந்தன.
அப்படி நீக்கி விட்டால் ‘மிருக வதை தடுப்புச் சட்டம்’ சல்லிக்கட்டுக்கு தடையாக இருக்காது என்பது எண்ணம். ஆனால், இதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலிருந்த மத்திய அரசாங்கம் இணங்கவில்லை.
இப்போது இருக்கின்ற பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் உடன்படவில்லை. இரு அரசுகளுமே ‘காளைகளை நீக்க’த் தயாராக இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் சல்லிக்கட்டு முற்றிலுமாக மூன்று வருடங்களாகத் தடைபட்டு நின்றது.
‘மிருகவதைத் தடுப்பு’ என்பது இந்திய அரசியல் சட்டத்தில் ‘சட்டம் இயற்றும்’ அதிகாரங்கள் கொண்ட ‘பொதுப்பட்டியலில்’ இருக்கிறது. அதன்படி ‘மிருகவதை தடுப்பு’ தொடர்பாக மத்திய அரசும் சட்டம் இயற்ற முடியும். மாநில அரசும் சட்டம் இயற்ற முடியும். ஆனால் 1960லிருந்து மிருக வதைத் தடுப்பு என்பது மத்திய அரசின் சட்டமாக இருக்கிறது.
அதே ‘மிருகவதைத் தடுப்பு’ தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டுமென்றால் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற வேண்டும்.
அப்படிப் பெற்றால் மட்டுமே மாநில அரசின் சட்டம் செல்லும். அந்த மாதிரிதான் இப்போது முதலமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம், குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுத்தான், ‘சல்லிக்கட்டு நடத்தும் அவசரச் சட்டம்’ கொண்டுவந்திருக்கின்றார்.
அரசியல் சட்டப் பிரிவு 254 (2)ன் கீழ் இந்த அதிகாரம் மாநில அரசுக்கு இருந்தாலும், அதே பிரிவில் உள்ள இன்னொரு அதிகாரம் எதிர்காலத்தில் சிக்கலை உருவாக்கும்.
அதாவது, மத்திய அரசு சட்டத்துக்கு எதிராகக் குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் மாநில அரசு சட்டம் கொண்டு வந்தால், அந்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது.
அதே அரசியல் சட்டப் பிரிவில் உள்ள இந்த அதிகாரம், எதிர்காலத்தில் சல்லிக்கட்டு அவசரச் சட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் போது பரிசீலிக்கப்படலாம்.
இதனால்த்தான் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாணவர்களும் ஏனையவர்களும் அறிவித்திருக்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் பார்த்தால், சல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசே அவசரச் சட்டம் கொண்டுவந்து, நிரந்தரமாக சல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நிரந்தரமாக நீக்குவது நியாயமாக இருக்கும்.
ஆனால், இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள ‘சல்லிக்கட்டு மறு சீராய்வு மனுவை’ காரணம் காட்டி மத்திய அரசே நேரடியாக அவசரச் சட்டம் கொண்டு வர மறுத்து, தமிழக அரசின் மீது அந்தச் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது.
இதற்கிடையில், காளைகளை காட்சி பொருள்கள் பட்டியலில் இடம்பெற வைத்த மத்திய அரசின் 2011 ஆம் ஆண்டு அறிவிக்கை அப்படியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது நீக்கப்படாத வரை, மாநில அரசின் சட்டம் எந்த அளவுக்கு நிரந்தரமாக சல்லிக்கட்டு நடத்துவதற்கு வழி விடும் என்பது இது வரை தெளிவுபெறாத விடயமாகவே இருக்கிறது.
மாணவர்கள், இளைஞர்களின் ‘பிரமாண்டமான’ போராட்டத்தின் விளைவாக இந்தச் சட்டம் அமுலுக்கு வந்து, சல்லிக்கட்டு தமிழ்நாடு எங்கும் நடத்தப்படுகின்றது.
ஆனால், இது உச்சநீதிமன்றத்தின் பார்வையில் தொடர்ந்து செல்லுபடியாகும் சட்டமாக இருக்குமா? இந்திய விலங்குகள் நல வாரியம் இந்த விடயத்தில் எப்படி அமைதி காக்கப் போகிறது?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, அதே வழக்குக்கு உட்பட்ட விடயத்தில் மாநில அரசினால்க் கொண்டு வரப் பட்டிருக்கும் அவசரச் சட்டம் எந்த அளவுக்கு உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது எல்லாம் வருங்காலத்தில் சல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்விக்கான பதிலை கொடுக்கும்.
ஆனால், ஒரு வியத்தகு முன்னேற்றம் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளால் சாதிக்க ஏதுமில்லை என்ற ஓர் எண்ணம் பலமாக இந்த போராட்டத்தின் மூலம் விதைக்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கலாசாரத்தினை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்தப் பிரமாண்டமான போராட்டம், தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் மட்டுமல்ல, எதிர்காலத்தில் இப்போது இருக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய தலைமையின் கீழ் இளைஞர்கள் எல்லாம் ஒன்றுசேர, ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
யார் அந்தப் புதிய தலைமை என்ற தேடல் இளைஞர்களின் மனதில் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
தி.மு.க மற்றும் அதி.மு.கவுக்கு இடையில் இருந்த வலுவான தமிழக அரசியல் இப்போது இளைஞர்கள் பக்கமாகத் திரும்பிச் சென்றிருக்கிறது.
தி.மு.க தலைவர் கருணாநிதி செயலாற்றலுடன் இல்லாததும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவும் தமிழகத்தில் இப்படியொரு இளைஞர்கள் போராட்டத்துக்கு வித்திட்டிருக்கிறது.
இந்த இருவரில் ஒருவர் களத்தில் செயலாற்றலுடன் இருந்திருந்தால், தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அவர்களே முன்னோடிகளாக இருந்திருப்பார்கள்.
இப்படியொரு போராட்டம் நடைபெற்று, முற்றிலும் அரசியல் கட்சிகள் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் சூழ்நிலை தமிழகத்தில் நிச்சயம் ஏற்பட்டிருக்காது.
இனி வரும் காலங்களில், தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ கூட யோசித்து அடியெடுத்து வைக்க வேண்டிய சூழல் இன்றைக்கு, வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் கூட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
கலாசாரம், பண்பாடு போன்ற முக்கிய விடயங்களை ஆளும் மாநில அரசாங்கத்திடம் விட்டு விட வேண்டும் என்ற செய்தி நீதித்துறைக்கு விடப்பட்டுள்ளது.
ஆனால், இத்தனை கூட்டமும் அமைதியாக, சட்டத்துக்குக் கட்டுப்பட்டு, ஜனநாயக முறையில் நடைபெற்றது என்பதே இந்திய அரசியல் சட்டத்தின் மீது மக்களுக்கு, குறிப்பாக தமிழக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை எடுத்துரைத்திருக்கிறது.
சாத்வீகமான இந்த உணர்ச்சி மிகுந்த போராட்டம், தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது என்பதுதான் இன்றைக்கு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலக அளவில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கும் விடப்பட்டுள்ள தலைப்புச் செய்தியாகும்.
(எம். காசிநாதன்)