தமிழ்க்கவி – வாழ்வே வழிமுறையும் ஆயுதமும்

(கருணாகரன்)

தமிழ்க்கவியை முதன்முதலில் சந்தித்தது எப்போதென்று சரியாக நினைவு கொள்ள முடியவில்லை. 1993 அல்லது 1994 ஆக இருக்கலாம். சாம்பவி என்ற பெண் போராளியோடு சந்திக்க வந்திருந்தார். (பின்னாளில் புநகரிப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்தார் சாம்பவி). சட்டென தமிழ்க்கவியைத் திரும்பிப்பார்க்க வைத்தது அவருடைய குரல்தான். சற்றுத் தடிப்பான குரலில் உரத்த தொனியில் பேசிக் கொண்டிருந்தார். என்ன, ஏதும் பிரச்சினையோ என்று கவனத்தைத் திருப்பிக் கூர்ந்து கவனித்தபோது, அப்படி எதுமில்லை. அவருடைய குரலும் கதைக்கும் முறையும் அப்படித்தான் என்று புரிந்தது. பேச்சிலடித்தது கிராமிய மணம். அறிமுகமில்லாத புதிய முகம். ஏறக்குறைய ஐம்பதுகளை நெருங்கிய தோற்றம். குரலைப்போலவே சற்றுத் தடித்த உடல். ஆனால், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும் ஆளாகத் தெரிந்தார். அவருடைய பேச்சும் அப்படித்தான். படுவேகமானது. படபடவென்று ஆயிரம் விசயங்களைப் பேசித்தள்ளி விடும் ஒரு மாய இயந்திரத்தைப்போல. இப்போதும் தமிழ்க்கவி அப்படித்தான். ஒரு பேச்சியந்திரம்.

அந்த வயதில் மிகச் சில பெண்களே அப்பொழுது இயக்கத்தில் – புலிகள் அமைப்பில் – இருந்தனர். மிகச் சிலர் என்ன, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒன்றிரண்டு பேர் மட்டும்தான். (பின்னர் அந்த வயதை எட்டியவர்கள் பலர் வந்து விட்டனர்). நிச்சயமாக அவர், குடும்பப் பெண்ணாக இருந்த நிலையிலேயே இயக்கத்தில் இணைந்திருப்பார் என்று தோன்றியது. பிறகு, அவருடன் பேசி, அறிமுகமாகியபோது எல்லா விவரங்களையும் சொன்னார். துக்கமும் வியப்பும் கலந்து உருவாகிய கதை அது.

இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்தபோது ஈ.என்.டி.எல்.எவ் தமயந்தியின் ஒரு மகனைப் பிடித்துச் சென்றது. மகனை மீட்பதற்குத் தமயந்தி அவர்களுடைய முகாம்களையெல்லாம் தேடி அலைந்தார். எதர்பாராத விதமாக அந்தச் சூழலில் இந்திய அமைதிப்படை வெளியேறத் தொடங்கியது. அதிர்ஸ்டவசமாக அப்போது அவருடைய மகன் ஈ.என்.டி.எல்.எவ்வினரிடமிருந்து தப்பி, வீட்டுக்கு வந்தான். தமயந்திக்குப் பெரீய மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. துரதிருஸ்டம் காத்திருந்தது அவர்களுடைய காலடியில். வீட்டுக்கு வந்த மகனைத் தங்களிடம் ஒப்படைக்க வேணும் என்று புலிகள் அறிவித்தனர். மாற்று இயக்கங்களில் இருந்தவர்கள் சரணடைய வேணும் என்ற அறிப்பைப் புலிகள் விடுத்திருந்தனர் அப்பொழுது. வேறு வழியில்லை. புலிகளின் கைகளில் அந்த மகன் ஒப்படைக்கப்பட்டான். புலிகளிடம் மகனை ஒப்படைத்ததையடுத்து, மற்ற மகனைப் புளொட் பிடித்துச் சென்றது. மறுபடியும் இரண்டு பிள்ளைகளையும் தேடி அலையத்தொடங்கினார் தமயந்தி. ஆனால், இடையில் மீண்டும் ஒரு சிறிய அதிர்ஸ்டம் தமயந்தியின் கதவைத் தட்டியது. புளொட் பிடித்துச் சென்ற மகன் அங்கிருந்து தப்பியோடி, முஸ்லிம்களின் பக்கத்திற்குச் சென்று, பிறகு அங்கிருந்து வீட்டுக்கு வந்திருந்தான்.

தமயந்தி இருந்த வவுனியா கோவில்குளம் புளொட்டின் கோட்டை. ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேயிருந்தனர். தொடர்ந்து அங்கே இருப்பது தமயந்தி குடும்பத்துக்குப் பிரச்சினையாக இருந்தது. அவன் வந்த கையோடு தமயந்தியின் குடும்பம் கோயில்குளத்திலிருந்து வெளியேறி புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்தது. அங்கிருந்து புலிகளிடம் ஒப்படைந்த மகனைத் தேடிக் கொண்டு தமயந்தி, புலிகளின் தலைமைப் பணிமனையிருந்த யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.எல்.எவ்.ரி, புளொட், பீ.எல்.எவ்.ரி, ரெலோ போன்ற இயக்கங்களில் இருந்தவர்களையும் இடதுசாரிகளையும் புலிகள் பரவலாகக் கைது செய்திருந்தனர். ஆகவே, அவர்களுடைய உறவினர்களும் தங்களுடைய உறவுகளைத் தேடி, புலிகளின் தலைமையோடு தொடர்பு கொள்வதற்காக அலைந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் ஒருவராகத் தமயந்தியும் சேர்ந்து தன்னுடைய பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தார். மகனைப் பற்றிய சேதிகள் கிடைக்கவில்லை. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதும் வன்னிக்குத் திரும்புவதுமாக இருந்தார். அந்த நாட்களில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் போய் வருவது என்பது சாதாரண விசயமல்ல. ஆனையிறவு, புநகரிப் பாதைகளைப் படையினர் மூடியிருந்தனர். மிஞ்சியிருந்தது கள்ளப்பாதையும் கடல்வழியுமே. அவை மரண களங்கள். எந்த நேரமும் அந்தப் பாதைகளிலும் மரணம் சம்பவிக்கலாம். கிளாலிக்கடலில் கடற்படையும் கொம்படிப்பாதையில் இராணுவமும் வேட்டையாடிக் கொண்டிருந்தன.

இந்த மரண களங்களுக்குள்ளால் சென்றே மகனைத் தேடினார் தமயந்தி. சாவுக்கஞ்சிப் பிள்ளையைக் கைவிட முடியுமா? அதேவேளை அவர் தானிருந்த வன்னிப்பகுதியில் வழமையைப்போலப் பொதுப்பணிகளையும் செய்துகொண்டிருந்தார். இப்படிப் பொதுப்பணியைச் செய்து கொண்டிருந்த தமயந்திக்கும் புலிகளின் வன்னிப் பகுதிப் பெண் போராளிகளுக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டது. தன்னுடைய மகன் புலிகளால் கைது செய்யப்பட்ட கதையையும் அந்தப் பெண்போராளிகளிடம் சொன்னார் தமயந்தி. இப்படியே தமயந்திக்கும் பெண்புலிகளுக்குமிடையிலிருந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கூடிய நெருக்கமாகியது. இந்த நெருக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் புலிகளால் நடத்தப்பட்ட பெண்கள் மாநாட்டுக்குத் தமயந்தியையும் அவர்கள் அழைத்திருந்தனர். யாழ்ப்பாண மாநாட்டுக்குப் பல இடங்களிலிருந்துமிருந்து வந்திருந்த பெண்களை, மாநாடு முடிந்த பிறகு பிரபாகரன் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது தமயந்தி உட்படப் பலரும் பல விசயங்களைப்பற்றியும் பிரபாகரனிடம் பேசினார்கள். அந்தச் சந்திப்பு தமயந்தியிடம் மாற்றங்களை ஏற்படுத்தியது. புலியானார் தமயந்தி. ஆனால், புலிகளால் கைது செய்யப்பட்ட மகன் அவருக்கு மீளக் கிடைக்கவில்லை.

தமயந்தி பிறந்ததும் வளர்ந்ததும் வவுனியா மாவட்டத்திலுள்ள கோயில்குளம் என்ற கிராமத்தில். காடும் வயலும் கலந்த சின்னஞ்சிறிய கிராமம் அது. விவசாயம் செய்து வாழ்ந்த குடும்பம். வயது, பால் வேறுபாடில்லாமல் குடும்பமே வயலிலும் புலவிலும் நின்று உழைத்தால்தான் வாழ்க்கை. தந்தையின் வழிகாட்டலிலும் ஊக்கத்திலும் தமயந்தி படித்தார். ஆனால், அதிகமில்லை. 10 ஆம் வகுப்புவரையில்தான். அதற்கிடையில் 14 வயதில் அவருக்குத் திருமணமானது. அது அவர் விரும்பியதோ தீர்மானத்ததோ சம்மதித்ததோ இல்லை. கல்யாணம் என்றால் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத வயதில், திருமண வாழ்க்கையைப்பற்றி அறியாதிருந்த பருவத்திலேயே அவருக்குத் திருமணமானது. திருமணத்துக்கு முன்பே வயலில் உழுது, விதைத்து, காவல்காத்து, அறுவடை செய்யும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். தனியாகவே இதையெல்லாம் செய்துமுடிக்கும் வல்லமை பதின்ம வயதிலேயே, இருபதுக்குள்ளேயே தமயந்திக்கு வந்துவிட்டது. அதையும் தகப்பனே அவருக்குப் பழக்கிப் பயிற்றுவித்திருந்தார்.

திருமணத்துக்கு முன்பு, தமயந்திக்கு வாசிப்பில் தீராத ஆர்வம். இந்த ஆர்வத்தைப் பார்த்த அவருடைய தகப்பன் கந்தப்பு வாங்கி வருகின்ற கல்கி, ஆனந்தவிகடன், சுடர், போன்ற இதழ்களும் சுதந்திரன், வீரகேசரி என்ற பத்திரிகைகளும் தமயந்தியை எழுதத் தூண்டின. தமயந்தியின் கவிதைகள் திருமணத்துக்கு முன்பே 13, 14 வயதிலேயே வீரகேசரி. சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. பிறகு அங்குமிங்குமாக ஒன்றிரண்டு இதழ்களில் கவிதைகளையும் சிறிய கதைகளையும் எழுதினார். திருமணம் எல்லாவற்றையும் மாற்றியமைத்தது. அதற்குப்பிறகு பிள்ளைகளும் வீடும் கணவரும் விவசாயமும் என்றே பொழுதுகள் மாறின. ஏறக்குறைய இடைப்பட்ட பதின்மூன்று ஆண்டுகள் வரையில், தான் எதையும் எழுதவில்லை என்கிறார் தமயந்தி. தமயந்தியை மீண்டும் எழுத வைத்தது தமிழ்க்கவியே. அதாவது, அவர் இயக்கத்தில் இணைந்த பிறகே மீண்டும் எழுதத் தொடங்கினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவர் இணைந்தபோது அவருடைய பெயர் தமயந்தி என்பதிலிருந்து தமிழ்க்கவி ஆகியது. தமிழ்க்கவி என்ற பெயரில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

இயக்கத்தில் இணைவதற்கு முன்பு, ஊரில் பொது அமைப்புகளில் இணைந்து செயற்பட்ட அனுபவம் தமிழ்க்கவிக்குண்டு. அந்தக் காலத்தில் இயங்கிய பல இயக்கங்களோடும் அவர் பேசியும் மோதியும் உறவாடியும் செயற்பட்டிருக்கிறார். அதெல்லாம் அவரைப் பலரிடமும் அறிமுகமாக்கியது. காந்தியம், சர்வோதயம் போன்ற அமைப்புகளோடு செயற்பட்ட அனுபவங்கள் இன்னும் அவருக்கு மகிழ்ச்சியே. அப்படியான ஒரு சூழலும் காலமும் பின்னர் இல்லாமற் போனது அவருக்குத் துக்கம். சந்ததியார் உள்பட பலருடன் பொதுப்பணிகளில் ஈடுபட்ட அனுபவங்கள் தமிழ்க்கவியைப் பல வழிகளிலும் வளர்த்தன. அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் தன்னுடைய கெட்டித்தனத்தினால், முயற்சியினால் கற்றுக் கொண்டார். கூடவே, பலதுறையிலும் ஆற்றலுள்ளவர் தமிழ்க்கவி. பாடுவார். நடிப்பார். எழுதுவார். நிகழ்ச்சிகளைத் தயாரிப்பார். பேசுவார். நாட்டார் கலைக் களஞ்சியம் என்று சொல்லக்கூடிய அளவுக்குக் கிராமியப் பாடல்களும் கிராமிய மரபுகளும் சடங்குகளும் கலைகளும் தமிழ்க்கவிக்கு நல்ல பரிச்சியம். புலிகளின் குரல் வானொலியில் நாட்டார் கலைகளை வைத்துப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியிருக்கிறார் என்றால், அவரிடம் இந்தத்துறையைப் பற்றி எவ்வளவு ஆழமான அறிவும் தகவல்களும் இருக்கும் என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். மட்டுமல்ல வானொலி நாடகங்கள், தெருவெளி அரங்கப் பிரதியாக்கம், பத்திரிகைகளுக்கான பத்திகள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதிக் குவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எழுதித்தயாரித்தார். “அம்பலம்“ என்ற சமகால அரசியல் விமர்சனத் தொடர் அவர் எழுதித் தயாரித்த நிகழ்ச்சிகளில் மிகச் சிறப்பான ஒன்று. தமிழ்க்கவியைப் புலம்பெயர்ந்த மக்களிடம் இந்த நிகழ்ச்சி அதிகமாக அறிமுகப்படுத்தியது. கூடவே இயக்க உறுப்பினர் என்ற பொறுப்பின் வழியாகப் போராட்ட வேலைகளையும் செய்தார்.

இயக்கத்தின் பரப்புரை தொடக்கம் போராளிகளுக்கான வகுப்புகள், சந்திப்புகள் என இன்னும் ஏராளம் வேலைகள். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திச் செயற்படுத்திய தமிழ்க்கவியை அதிகமான பெண் போராளிகள் ஒரு மூத்த தோழியாகவும் தாயாகவும் கொண்டாடினார்கள். “அன்ரி” என்று செல்லமாக அழைக்கும் ஒரு பெரும் கூட்டம் தமிழ்க்கவிக்கு அறிமுகமாகியது. ஆனால், அந்த அன்ரி, எந்த நேரம் எப்படித் தங்களுடன் நடந்து கொள்வார் என்று பலருக்குத் தெரியாது. தனக்குப் பிழையாகத் தோன்றும் விசயங்கள் என்றால், அல்லது தனக்குப் பிடிக்காத சங்கதிகள் என்றால் தமிழ்க்கவி சந்நதம் கொண்டு ஆடும் காளியாகி விடுவார். இதனால் பலர் தமிழ்க்கவியை விட்டுச் சற்று விலகியதும் உண்டு. ஆனால், அது நீண்ட இடைவெளியாக இருப்பதில்லை. தாய் பிள்ளை உறவென்பதால் மறுபடியும் அவரோடு வந்து ஒட்டிக்கொள்வார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்கு ஏற்படும் அத்தனை நல்லது கெட்டதுகளிலும் தமிழ்க்கவி அவர்களுக்குப் பக்கத்தில் உரிமையோடு நின்றுகொள்வதே. வயதையும் மீறிய துடிப்பும் அசாத்தியமான வேகமும் தமிழ்க்கவியின் அடையாளங்கள். அதைப்போல எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சூழலிலும் யாரையும் பொருட்படுத்தாமலே தன்னுடைய மனதில் பட்டதையெல்லாம் பகிரங்கமாகவே சொல்லிவிடுகிற தன்மையும் அவருடைய அடையாளங்களில் ஒன்று. சிலவேளை காலம், இடம் பாராமல் முந்திரிக்கொட்டையைப்போல முந்திக்கொண்டு அபிப்பிராயங்களைச் சொல்லி சங்கடங்களில் சிக்கியதுமுண்டு அவர். என்னதானிருந்தாலும் தமிழ்க்கவியின் வெளிப்படைத்தன்மையும் துணிச்சலும் அவருக்குப் பலரிடத்திலும் மதிப்பை உண்டாக்கியது. அதைப்போல பலரை அவருக்கு எதிரியாக்கியுமிருக்கியது. ஆனால், தமிழ்க்கவியின் இந்தத் துணிச்சலான – வெளிப்படையான இயல்பையும் குணத்தையும் பிரபாகரன் பாராட்டினார். “எதுவாக இருந்தாலும் நீங்கள் தயங்காமல் எழுதுங்கள், பேசுங்கள்” என்றொரு அங்கீகாரத்தையும் அனுமதியையும் தமிழ்க்கவிக்குப் பிரபாகரன் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து தமிழ்க்கவி தன்னுடைய நிகழ்ச்சிகளில் மெல்ல மெல்ல விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். சமூக நடத்தைகளைப்பற்றியும் இயக்கத்தின் நடவடிக்கைகளைப்பற்றியும் போராளிகளிடத்தில் குறைபாடுகள் காணப்படும் இடங்கள் பற்றியும் அந்த விமர்சனங்கள் இருந்தன. ஈழநாதம் பத்திரிகையில் அவர் வாரந்தோறும் எழுதிய கட்டுரைகள் அந்த வகையிலானவை. அவை சில போராளிகளிடத்திலேயே சலசலப்பை உண்டாக்கியதுமுண்டு. புலிகளின் குரல் வானொலியில் அவர் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளிலும் இந்த விமர்சனங்கள் வெளிப்பட்டன. ஆனால், அவை மென்னிலை விமர்சனங்களே. இயக்கத்தையோ போராட்டத்தையோ மூர்க்கமாக எதிர்ப்பவை அல்ல. இருந்தும் இப்படி அவர் விமர்சனங்களை மெல்ல முன்வைப்பது பலருக்கும் எரிச்சலையுட்டியது. இதைப்பற்றித் தெரிந்தாலும் தமிழ்க்கவி அதிலிருந்து பின்வாங்கியதில்லை. தன்னை மாற்றிக் கொண்டதில்லை. தமிழ்க்கவியின் விமர்சனங்களும் சுட்டிக்காட்டுதல்களும் இன்னொரு பக்கத்தில் பலரையும் அவரின் மீது கவர்ந்தது. சொல்ல வேண்டியவற்றைப் பொறுப்போடு சொல்கிறார் என அவர்கள் தமிழ்க்கவியை ஆதரித்தனர். இதனால் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த ஒரு இடைநிலை உண்டாகியிருந்தது. இப்படியான இயல்போடு இயங்குவோருக்கு சமூகத்தில் ஏற்படும் நிலை இது. இதை எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவமும் தமிழ்க்கவிக்கிருந்தது. மட்டுமல்ல, அவர் எதையும் அநாயசமாகக் கடந்து போகின்ற ஒரு வகையான இயல்பையும் துணிவையும் தன்னுடைய வாழ்க்கை முறைமைக்குள்ளே கொண்டிருந்தார் என்றே நினைக்கிறேன்.

வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிய தமிழ்க்கவி, சிறுகதை மற்றும் நாவல்களையும் எழுது ஆரம்பித்தார். ஈழநாதம், வெளிச்சம், சுதந்திரப்பறவைகள், நாற்று என அன்று வெளியான அச்சு ஊடகங்களில் தமிழ்க்கவியின் கதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகின. 2000 க்குப் பின்னர், தமழ்க்கவியின் முதலாவது நாவல், “இனிவானம் வெளிச்சிடும்“ வெளிவந்தது. இந்த நாவல் அப்போது பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றது. இதனால் கூடிய கவனிப்பு இந்த நாவலுக்கு உண்டாகியது. தொடர்ந்து தமிழ்க்கவியின் இரண்டாவது நாவல், “இருள் இனி விலகும்“ வெளிவந்தது. அதுவும் பரவலாக வாசிக்கப்பட்டது. மெய்ச் சம்பவங்களையும் மெய்யான பாத்திரங்களையும் மையமாக வைத்து எழுதப்பட்டவையே தமயந்தியின் நாவல்கள். அதனால், அவற்றுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவமும் சமூகப் பெறுமானமும் உண்டு. இடையில் “தாழமுக்கம்“ என்ற ஒரு தொடரை சுதந்திரப்பறவைகள் பத்திரிகையில் அவர் எழுதியதாகவும் நினைவு. அதுவும் உண்மைச் சம்பவங்களின் வெளிப்பாடுதான். இதற்கிடையில் தமிழ்க்கவி, மேலும் இரண்டு பிள்ளைகளையும் ஒரு பேரப்பிள்ளையையும் போராட்டத்தில் இழந்து விட்டார். இருந்தாலும் தமிழ்க்கவியின் இயங்கு நிலைகளில் எந்தத் தொய்வும் தளர்ச்சியும் ஏற்பட்டதில்லை. ஒரு அசாத்தியமான பெண்ணாக நின்று வியக்கும் முறையில் இயங்கிக் கொண்டிருந்தார். இப்படி நெருக்கடிகளில் மத்தியில் பல துறைகளில் எழுதியும் இயங்கியும் வந்த தமிழ்க்கவி, அந்த வயதிலேயே, அவருடைய மிகச் சிக்கலான குடும்ப வாழ்க்கைக்குள்ளேயே இதழியல், உளவியல், நூலகவியல் கற்கைகளையும் வெளிவாரியாகப் படித்துக் கொண்டார். தமிழீழச் சட்டக்கல்லூரியில் சட்டத்தையும் பயின்றார். கூடவே இலங்கை மன்றக் கல்லூரியில் கிராமிய மூலவள ஆய்வு என்ற தலைப்பில் கிராமியப் பொருளாதாரத்துறையை மேம்படுத்துவதற்கான பயற்சி நெறியிலும் பங்குபற்றி, அதிலும் தகுதி நிலைப்பட்டதாக அறிந்தேன்.

தன் வாழ்வில் எண்ணற்ற ஏற்ற இறக்கங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்த தமிழ்க்கவி, வன்னியில் நடந்த இறுதிப்போரின் முடிவில், பல ஆயிரம் போராளிகளோடு முள்ளிவாய்க்கால் வழியாகப் படையினரிடம் சரணடைந்தார். தொடர்ந்து இரண்டாண்டுகள் சிறைவாழ்க்கை. புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகியவர் வவுனியாவில் குடியேறினார். அங்கிருந்தபோதே அவருடைய “ஊழிக்காலம்“ என்ற நாவல் வெளியானது. அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான போரையும் அதில் பொதுமக்கள் அனுபவித்த அவலத்தையும் ஊழிக்காலம் மையப்படுத்திப் பேசியது. இதனால், இந்த நாவல் மூலம் தமிழ்க்கவி இன்னொரு புதிய தளத்தில் அறிமுகினார். குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் ஊழிக்காலம் அதிகமாக வாசிப்புக்குள்ளாகிப் பேசப்பட்டது. ஆனால், புலிகளின் ஆதரவுச் சக்திகளாகத் தம்மைக் காண்பிக்க முற்படும் சிலர், ஊழிக்காலம் முன்நிறுத்திப் பேசிய உண்மைகளால் முகவாட்டமடைந்தனர். அதையெல்லாம் தமிழ்க்கவி பொருட்படுத்தவில்லை. தான் சந்தித்த அனுபவங்களுக்கும் தான் அனுபவித்த, உணர்ந்த உண்மைகளுக்குமே மதிப்பளிக்க வேணும் என்ற நிலைப்பாட்டையே அவர் தொடர்ந்தும் பின்பற்றினார். இதனை அவர் ஷோபாசக்திக்கு வழங்கியிருந்த நேர்காணலில் கூட வெளிப்படுத்திப் பேசினார். இந்த நிலைப்பாட்டிலேயே அவர் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

இப்போது, ஊழிக்காலத்தின் தொடர்ச்சியாகவும் அதைக்கடந்தும் மூன்று நாவல்களை எழுதிவிட்டார். அவற்றில்

ஒன்று புனர்வாழ்வு என்ற சிறைக்கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதற்குப் பிறகு இன்னொரு நாவல். இப்படித் தொடர்ந்து எழுதிக்கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கும் தொடரியக்கம் அவர். இரண்டும் பதிப்பாகும் நிலையில் உள்ளன. அவையும் பலவகையான விமர்சனங்களுக்கும் இடமளிக்கும் தன்மையைக் கொண்டவையே. தொடர்ந்தும் அவருடைய பேனை எழுதிக்கொண்டேயிருக்கிறது. அவருணர்ந்த வாழ்க்கையும் அவர் சந்தித்த வரலாறுமே அவருடைய எழுத்துகள். அவற்றின் குணம் அவை வெளிப்படுத்தத் துடிக்கும் உண்மைகளே. அது வேறொன்றுமல்ல, தமிழ்க்கவியின் குணமே. அந்தக் குணம் பெண் படைப்பாளிகளின் அடையாளத்தை மேலும் துலக்கமுற வைக்கிறது. கூடவே பெண் அடையாளத்திலும் பெண் வாழ்க்கையிலும் பல திறப்புகளையும் உண்டாக்குகிறது. எழுத்து, இலக்கியம் என்ற செயற்பாடுகளுக்கு அப்பால் சமூகச் செயற்பாடுகள், பெண்கள் இயக்க வேலைகள் என்று எந்தக் காலத்திலும் தன்னை உழைப்பில் – செயற்பாட்டில் ஈடுபடுத்திக் கொள்ளும் இயல்பு தமிழ்க்கவியிடமுண்டு. சளைத்துப்போய், தோல்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பிறர் மீது பழியைச் சுமத்தி விட்டுப் புனித பீடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு நியாயங்கூறும் தராசை தமிழ்க்கவி எடுத்ததில்லை. தமிழ்க்கவியின் மீதும் அவருடைய எழுத்தின் மீதும் விமர்சனம் வைப்பவர்கள் அவருடைய வாழ்க்கையையும் அதில் அவர் சந்தித்த நெருக்கடிகளையும் உணர முற்படுவதில்லை. அப்படி உணர்ந்தால் அதன் முன்னே அவர்களுடைய தலைகள் தாழந்து விடும். வீரத்தையும் தியாகத்தையும் உண்மையை ஏற்றுச் செயற்படுவதையும் வாழ்வாக்காமல், பிம்பமாக்குவோரின் தலைகள் வரலாற்றில் எப்படி நிமிர முடியும்?

நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கையில் பண்பாட்டு வெடிப்பாக எழுச்சியடையும் பெண்களின் அசாதாரணமான மனவலிமையை தமிழ்க்கவி தன்னுடைய எழுத்துகளில் வெளிப்படுத்துகிறார். தன்னுடைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலுக்குள்ளிருந்து தான் எப்பிடி வெடித்துக் கிளம்பினேனோ, அவ்வாறு பல பெண்கள் சமூகத்தின் பல இடங்களிலிருந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ள விரும்பாமல், பெண் ஆற்றலை அங்கீகரிக்க விரும்பாமல் இந்தச் சமூகம் ஆண்களின் வழிப்படுத்தலிலும் உழைப்பிலும் ஆற்றலினாலும்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கட்டமைக்க விரும்பும் பிம்பத்தை தமிழ்க்கவி கலைத்துப் போட முயற்சிக்கிறார். பதிலாகப் பெண் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் சமகால யதார்த்த வாழ்க்கையை எழுதி, அந்த வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பும் பங்கேற்பும் எப்படி இருக்கிறது என்று காண்பிக்கிறார். இதற்காக அவர் பெண்களை மட்டும் பிரத்தியேகப்படுத்திக் காட்ட முயலவில்லை. அல்லது பெண்களைப் பிரத்தியேகமாகத் தனிமைப்படுத்தவுமில்லை. நம் கண்முன்னே திறந்திருக்கும் உண்மைகளின் மீது கவனத்தைக் குவிக்கும் வகையில் சிறிய அளவில் ஒளியைப் பாய்ச்சுவதை மட்டுமே செய்கிறார். இப்படிச் செய்யும்போது நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறிய உண்மைகள் தெரிகின்றன. பெண் முகமும் பெண் வாழ்க்கையும் புரிகிறது. பல சந்தர்ப்பங்களிலும் அது நம் தலையைக் குனிய வைப்பதுடன், மனதையும் கூசச் செய்கிறது. ஆனால், மெய்யறியத் துணியும் மனதில் அக விழிப்புகளை இவையெல்லாம் ஏற்படுத்துகின்றன. தமிழ்க்கவியின் பங்களிப்பு இப்படியே ஒரு தொடரோட்டமாக பல நிலைகளிலும் அசாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
வரலாற்றுக்கு தமிழ்க்கவி அளித்துவரும் அரசியல் பங்களிப்பும் சமூகவியல் பங்களிப்புகளும் அவருடைய வாழ்க்கையின் வழியானவையே. அவை வெறும் சொற்களல்ல. உண்மையை நெருங்கிப் பார்க்கத் தூண்டும் ஊக்க மருந்துகள். அதுவே இங்கே கவனத்திற்குரியது.