மீண்டும் அப்பாவி மக்கள் போராட்ட முனையில்…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 23.01.2017 இல் வவுனியா, பிரதான தபாலகத்திற்கு முன்பாக சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்ட உண்ணாவிரதிகள் அமர்ந்திருந்த மேடையின் பின்னால், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு”, ‘சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்,” ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்” என்று எழுதப்பட்ட பதாகையொன்றும் தொங்கவிடப்பட்டிருந்தது. எனவே இவையே போராட்டக்காரர்களின் கோரிக்கைகளென எடுத்துக் கொள்ளலாம். போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு தினங்களின் பின்னர், வவுனியாவிற்கு நேரில் விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் பெரும் எடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேர் கொண்ட குழவினரும் மேலும் சிலரும், 09.02.2017 இல் பிரதமர், இராஜாங்க அமைச்சர் மற்றும் சட்டமாதிபர் ஆகியோருடன் அலரிமாளிகையில் சந்தித்துப் பேசலாமென்பதே இராஜாங்க அமைச்சரால் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி. நான்கே நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்திற்கு தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வவுனியாவிற்கு வருகைதந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்தோடு ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரியளவில் ஆதரவுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதற்கு ஆதரவாக நல்லூரில் 26.01.2017 இல் அடையாள உண்ணாவிரதப் போராட்மொன்றும் நடாத்தப்பட்டதோடு, கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தன.
யுத்தகாலங்களில் கைது, மரணம் என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தன. 1971, 1989 ஜே.வி.பி. கிளர்ச்சியின்போதும் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் போதும் இலங்கை அரச படைகளாலும் புலிகளாலும் இந்தியப் படையினராலும் ஏனைய ஆயுதப்போராட்ட இயக்கங்களாலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் யுத்தம் முடிந்து அமைதி திரும்பிய பின்னர் மரணித்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள், இடம்பெயர்ந்த அகதிகள் என்பது உணர்வுபூர்வமாகவும் மனிதாபிமானத்தோடும் அணுகவேண்டியதொரு பிரச்சனை.
2009 இல் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்த அரசு, யுத்தத்தில் அரச படையினரால் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேற்ற அனுமதித்ததோடு, 12000 தமிழ்க்கைதிகளை புனர்வாழ்வளித்தும் விடுதலை செய்தார்கள். எனினும் அந்த அரசு, யுத்தத்தில் மரணித்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், நிரந்தர அரசியற்தீர்வு காண்பது பற்றியும் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை. குறிப்பாக யுத்தத்தில் மரணித்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை எதிர்காலத்தில் பூதாகரமான பிரச்சனையாக உருவெடுக்கலாம் என்பது தொடர்பாக அசிரத்தையாக இருந்துவிட்டது. இதுவே போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் வெளிச்சக்திகள் இலங்கையில் தலையிட வழிவகுக்குமென்ற தீர்க்கதரிசனமும் அந்த அரசிடம் இல்லாமலிருந்தது.
இந்த சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை பின்னின்றி நடாத்தியவர்கள் எவரென்பது இதுவரையில் தெரியாவிடினும், இது முற்றுமுழுதான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஒரு தன்னெழுச்சியான போராட்டமல்ல என்பதனைத் திட்டவட்டமாகக் கூறலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினரதும் இந்த அரசை ஆதரிக்கும் ஏனைய தமிழ்த் தேசியவாத சக்திகளினதும் அனுசரணையும் வழிநடத்தலுமின்றி இது நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த அரசை உலுப்பும் தமிழ்த்தேசியவாதக் கோரிக்கைகள் அடங்கிய ஒரு போராட்டமாக இல்லாதிருக்கும் வகையில், இது கவனமாகத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகளும் நியாயமான கோரிக்கைகளே. எனினும் ‘நிரந்தர அரசியற்தீர்வினை முன்வை” என்ற நீண்டகாலக் கோரிக்கை சேர்க்கப்படாதது ஏன்? எப்போதும் போலவே அரசின் வாக்குறுதியை நம்பி வெறும் நான்கே நாட்களில் போராட்டம் கைவிடப்பட்டது சரியானதா? கொழும்பில் வீற்றிருக்கும் அரசு வவுனியாவிற்கு வருகை தந்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமூகமான தீர்வொன்றினை எட்டிய பின்னர் போராட்டத்தினை வெற்றிகரமாக முடித்திருக்கலாமல்லவா? தற்போதைய அரசு ஆட்சியில் அமரவும் நீடிக்கவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முழு ஒத்தாசையும் வழங்கி வருவதால், உதாரணமாக நிரந்தர அரசியற்தீர்வு தொடர்பாக மக்கள் கோசம் எழுப்புவதையும், வாரக்கணக்காக, மாதக்கணக்காக தொடர்ச்சியாக மக்கள் வீதிகளில் நின்று போராடுவதையும் அரசும் கூட்டமைப்பினரும் விரும்பமாட்டார்கள். அத்தோடு இறுதி யுத்தகாலத்து வடுக்களை மாத்திரம் கிளறுவதென்பது முன்னைய அரசுக்கு தலையிடியைக் கொடுக்கும் விவகாரம். இது தற்போதைய இலங்கை ஆட்சியாளர்களை மாத்திரமன்றி, வெளிச்சக்திகளையும் திருப்திப்படுத்தும் என்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு நன்கு தெரியும்.
இந்த வருடத்திற்குள் தற்போதைய அரசு கவிழுமென முன்னைய ஜனாதிபதி எச்சரித்திருக்கிறார். அத்தோடு அண்மைக்காலமாக தென்னிலங்கையில் (கொழும்பு, அமபாந்தோட்டைபோன்ற இடங்களில்) இந்த அரசுக்கெதிராக தெடர்ச்சியாக பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களுக்கெதிராக இலங்கைப் பாதுகாப்புப்படை கண்ணீர்ப் புகைக்குண்டு, தடியடித் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளார்கள். இதனால் தென்னிலங்கையில் நிலைமை இன்னமும் மோசமாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. தென்னிலங்கையில் நிகழும் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ள தற்போதைய அரசு, இவ்வகையான போராட்டங்களுக்கு முன்னைய அரசினரே காரணமென குற்றஞ்சாட்டியும் வருகின்றனர். இவ்வாறு அரசுக்கெதிராக தென்னிலங்கையில் எழுந்துள்ள அசாதாரண சூழலின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே, வவுனியா-உணவு தவிர்ப்புப் போராட்டம் பயன்படுத்தப்பட்டதோவென்ற வலுவான சந்தேகம் இன்றைய காலகட்டத்தில் எழுவதும் தவிர்க்க முடியாதது.
நன்றி: வானவில் இதழ் 73