அமெரிக்க அதிபரின் உலகை உலுக்கிய குடிபெயர்வு, அகதிகள் மீதான புதிய நடவடிக்கை உலகம் முழுதும் எதிர்ப்புகளுடன் குழப்பங்களை அதிகரித்துள்ளது. ஆனால் ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும், இந்த புதிய உத்தரவு, ‘அருமையாக வேலை செய்கிறது’ என்று புளகாங்கிதம் அடைந்துள்ளனர். விமான நிலையங்களில் தேங்கியுள்ள முஸ்லிம் மற்றும் பிற பயணிகளின் வழக்கறிஞர்கள் கூறும்போது, “குழப்பம் மேலும் நீடிக்கும் என்றே தெரிகிறது. இது ஒரு தொடக்கம் போல்தான் தெரிகிறது” என்று பயமுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே சிகாகோ புறநகர் யூதக்குழுக்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அமெரிக்கா மாகாணங்கள் நெடுகிலும் விமான நிலையங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்து வருகிறது.
மாணவர்கள், அமெரிக்க பல்கலைக் கழக பேராசிரியர்கள், சிவில் உரிமை போராளிகள் என்று எதிர்ப்புகள் கடுமையாக பரவி வரும் நிலையிலும் ட்ரம்ப் நிர்வாகம் தனது உத்தரவிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. “தடைசெய்யப்பட்ட தடை செய்யப்பட்டதுதான், தேசப்பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக விசாக்களை எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறுவோம்” என்று ஹோம்லேண்ட் பாதுகாப்பு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்திற்கு உதவிய, பணியாற்றிய இராக் நாட்டவர்களுக்கு அமெரிக்காவில் வாழ்வளிக்க உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இவர்களும் தற்போது செய்வதறியாது திகைத்துள்ளனர். ஈரான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ள அமெரிக்க குடிமகன்களான பல முஸ்லிம்கள் அமெரிக்கா திரும்ப முடியுமா என்று ஐயம் எழுந்துள்ளது,
இது குறித்து அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய லாஸ் ஏஞ்சலசைச் சேர்ந்த இராக்கில் பிறந்த அமெரிக்க குடிமகன் மொகமது அல் ராவி என்பவர் கூறும்போது, “அடுத்து என்ன? அடுத்து என்ன நடக்கப் போகிறது? தன் பேரக்குழந்தைகளைப் பார்க்க கலிபோர்னியா வந்த என் 69 வயது தந்தை 12 மணி நேரம் விமான நிலையத்தில் அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டு பிறகு இராக்கிற்கே அனுப்பப்பட்டார். என்ன முஸ்லிம்களுக்கென்று முகாம் உருவக்கி அதில் எங்களை அடைக்கப் போகின்றனரா?” என்று கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா நோக்கி பயணத்தில் இருக்கும் 109 பேருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 173 பேர்கள் அமெரிக்காவுக்கான விமானங்களில் ஏற குறிப்பிட்ட நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கிரீன் கார்டு வைத்திருப்பவர்களை தடுக்கவில்லை எனினும், அனுமதிக்கு முன்பாக பல மணிநேரங்கள் விமான நிலைய அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். பிராங்க்பர்ட்டிலிருந்து சான்பிரான்சிஸ்கோ வந்த விமானத்தில் வந்திறங்கிய 80 வயது முதியவர் அப்துல்லா மோஸ்தாவி என்பவரை 6 மணி நேரம் பிடித்து வைத்திருந்து பிறகு விட்டுள்ளனர்.