பற்குணத்தின் மகள் அபிராமியை மன்னார் முன்னாள் அரச அதிபர் வாமதேவன் சுண்டுக்குளி மகளிர் க்ல்லூரியில் சேர்ப்பதற்கு உதவினார்.எனக்கு வேலை இல்லை என்பதால் நான் அவளை பள்ளிக்கு கொண்டு செல்லும்வேலையை பொறுப்பெடுத்தேன்.
இந்திய இராணுவக் கெடுபிடிகள் அதிகமானது.நான் வீட்டில் தனியே இருப்பதால் அடிக்கடி சுற்றிவளைப்பில் கைது செய்யப்படுவேன்.எனக்கு பயம் ஏற்படவில்லை.சுதந்திரம் பறிக்கப்பட்டதான மன உளைச்சல்கள் அதிகரித்தன.அங்கிருந்து வெளியேற விரும்பி பற்குணத்திடம் கதைத்தேன்.அம்மா இறந்துவிட்டதால் நான் தனியே வெளியே போவதை விரும்பவில்லை .
இந்நிலையில் மன்னார் அரச அதிபர் மக்பூல் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.மக்பூல் பற்குணத்தின் நல்ல நண்பர்.இந்த மரணம் அவருக்கு பெரும் கவலையைப் கொடுத்தது.மக்பூல் பற்றி கூறும்போது யாழ் நகரத்தில் தமிழ் முஸ்லிம் தகராறுகளை தடுப்பதில் அவர் பங்கு அதிகம் என்றார்.மக்பூல் தமிழ் பேசினால் பொருளாதாரம் இருக்கும்.பொருளாதாரம் பேசினால் தமிழ் இருக்கும்.என்று கூறினார்.
மக்பூல் இறந்த சில நாட்களின் பின் அன்றைய மன்னார் மாவட்ட அமைச்சரும் மூதூர் எம்.பியுமான மஹ்றூப் கொழும்புக்கு வருமாறு அழைத்தார்.அவரது நோக்கம் இனி மன்னாருக்கு ஒரு இஸ்லாமியரை அரச அதிபராக்குவது சாத்தியம் இல்லை.எனவே தனக்குப் பிடித்த பற்குணத்தை மன்னார் அரச அதிபராக்க சிபார்சு செய்தார்.
பற்குணமும் தானகவே அவர் அழைப்பதால் விரும்பியிருந்தார் .ஆனால் அங்கே நிர்வாக சேவையில் சீனியரான தர்மபாலன் என்பவர் அந்த வெற்றிடத்தை விரும்பியிருந்தார் .அவர் முதலாம் தர நிர்வாக சேவை அதிகாரி.ஏற்கனவே முதல் தர நிர்வாக சேவை அதிகாரியான உதவி அரச அதிபர் முருகவேள் தொடர்பாக பற்குணம் கவலைப்பட்டவர். எனவே அந்த அரச அதிபர் பதவியை அவருக்கே விட்டுக் கொடுத்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
இந்திய இராணுவம் யுத்தம் முடிந்தசூழ்நிலையில் மாகாண அரசு நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு ஆர்வம் காட்டியது.புலிகளும்,புளொட் அமைப்பும் ஒதுங்கிக் கொண்டன.ஈ.பி.ஆர.எல்.எப் மற்றும் ஈ.என்.டி.எல்.எப் ஆகியன அமையப்போகும் மாகாண சபையில் ஆர்வம் காட்டின.
இதே நேரத்தில் எமது ஊரைச் சேர்ந்த உயர்சாதியினர் சிலர் இந்திய ராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினரை விடுவிக்க உதவிகோரி வந்தனர். அவர் புலி உறுப்பினர் என்பதால் உதவ மறுத்துவிட்டார்.
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)