பற்குணம் A.F.C ( பகுதி 103 )

வட கிழக்கு மாகாண சபை தேர்தல் இந்திய இராணுவ உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்டது.இதில் ஈ.பி.ஆர.எல்.எப் உம் ஈ.என்.டி.எல் எப் உம் கூட்டாக வெற்றி பெற்றன.முஸ்லீம் காங்கிரஸ் எதிர்க்கட்சியானது.புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் வாக்களித்தனர்.

ஈ.பி.ஆர்.எல். எப் தலைமையில் மாகாண சபை அமைந்தது.வரதராஜ பெருமாள் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.மாகாண சபையின் செயலாளர்கள் பதவிகள் அனைத்தும் ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.தலைமை செயலக செயலாளராக விக்கினேஸ்வரன் பதவி ஏற்றார்.ஆனால் பற்குணத்தை தவறவிட்டனர்.ஆனால் அதைப் பற்றி பற்குணம் கண்டுகொள்ளவில்லை .முன்னாள் மன்னார் அரச அதிபர் வாமதேவன் அவர்கள்கூட இதை பற்குணத்திடம் விசாரித்தார்.பற்குணம் அது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சொன்னார்.

சில வாரங்களின் பின்பாக மாகாண சபை பற்குணத்தை அழைத்து பிரதி பிரதம செயலாளர் பதவியை வழங்கினார்கள்.ஆனாலும் பற்குணத்தை வரதர் அதிகம் நம்பினார்.

மாகாண சபை திருகோணமலை நகர மண்டபத்தில் செயற்பட்டது.இலங்கை அரசு போதிய வசதிகளை செய்துகொடுக்க முன்வரவில்லை .எனவே அலுவலக அமைப்பு,வாகனங்கள்,தளபாடங்கள் எல்லாவற்றையுமே மாகாண சபையே கவனிக்க வேண்டியதாயிற்று .இதில் பெரும் பொறுப்புக்களை பிரதி ்பிரதம செயலாளர்,என்ற வகையில் பற்குணத்தின் மீதும் விழுந்தன.

இந்த தளபாள கொள்வனவுகளுக்கான இடங்களை என்னை தேடிப்பார்கும்படி கூறுவார்.இதனால் நானும் ஒரு சம்பளமற்ற ஊழியனாக அண்ணனுக்காக மொறட்டுவ,பாணந்துறை என பஸ்சிலும் வெயிலிலும் நடக்க வேண்டியதாயிற்று .தனது வேலைகளை இலகுபடுத்தவும் நேரத்தை சேமிக்கவும் என்னை பயன்படுத்தினார்.எனக்கு பஸ் பயண செலவுதான்.அவரே என்னை வளர்த்தபடியால் எதுவும் கேட்க முடியாது.

அவர் கொழும்பு வந்தால் என்னையும் அழைத்தே செல்வார்.முதலமைச்சரின் செயலாளர் விக்கினேஸ்வரனை பல தடவைகள் ஹோட்டல் தாஜ் சமுத்திராவில் சந்திக்க செல்வார்.அவருக்கு கொழும்பில் வீடிருந்தது.அங்கேயும் ஒரு தடவை போயிருக்கிறேன்.

வரதராஜ பெருமாள் மிக எளிமையான மனிதர், எனக், கூறினார்,எதையும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்.தனது பணிகளுக்கு மிக நல்ல ஒத்துழைப்பு தருவதாக கூறினார்.

இந்த மாகாண சபை நிர்வாகத்தை எப்படியாவது செயற்படுத்த வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக இருந்தார்.அந்த மாகாண சபையிலும் அதிகாரிகள் மத்தியில் பற்குணத்தின் நேர்மைக்கு எதிர்ப்பு இருந்தது.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)