பற்குணம் மறுநாள் மதியம் போல என்னைக் காணவந்தார்.என்ன வரமாட்டேன் என்றாய் இப்போது வந்திருக்கிறீர்கள் என்றேன்.அந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அமிர்தலிங்கத்தையும் அந்த கட்சியினரையும் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.அது சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடத்த வேண்டி இருப்பதால் ரத்து செய்துவிட்டனர் என்றார்.
ஆனால் என்னை இன்றிரவு தன்வீட்டுக்கு அந்த நண்பர் சாப்பிட அழைத்துள்ளார் எனக் கூறினார்.அப்போது நீ வரவேண்டாம்.நான் பஸ்சில் வீட்டுக்கு போகிறேன் என்று கூறிவிட்டேன்.
நான் இரவு வீட்டுக்போய்விட்டேன்.பற்குணம் அந்த நண்பர் வீட்டுக்கு போயிருந்தார்.அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.அவரது குடும்பத்தினரும் பற்குணத்தை அவர் வரும்வரை மறித்துள்ளனர்.ஏறக்குறைய இரவு 12 மணியளவில், அந்த நண்பர் வாகனத்தில் வந்தார்.அவரால் இறங்க முடியவில்லை.அமிர்தலிங்கம் கொல்லப்பட்ட செய்தியை சொல்லி நடுங்கினார்.பற்குணம் அவரை திடப்படுத்தி ஒருவாறாக வாகனத்தால் இறக்கி கொண்டுவந்தார்.
மறுநாள் பற்குணம் என்னிடம் வந்து இந்த விசயத்தை சொன்னார்.நான் இன்று அமிர்தலிங்கம் வீட்டுக்கு போகிறேன்.வரப்போறாயா எனக் கேட்டார்.நான் ஓம் என்று இரவு ஒருஆறு ஏழு மணியளவில் போனேன்.அங்கே யோகசங்கரி,சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நின்றனர்.அவர்களுக்கு என்னை தன் தம்பி என அறிமுகப்படுத்தினார்.அப்போது குறிக்கப்பட்ட விருந்துசம்பவத்தை அவர்களிடம் கூறினார்.அப்போது யோகசங்கரி குறிக்கப்பட்ட நபர் தன்னிடமும் வாகனம் கோரியதாக கூறினார்.அப்போது எனக்கு எதுவும் யோசிக்க வரவில்லை.
யோகசங்கரியும் சுரேசும் அமிர்தலிங்கம் அவர்களு மரணச்சடங்கை வடகிழக்கு மாகாணசபையே நடத்த முடிவு செய்ததாக கதைத்தனர்.இது ஏற்கனவே பற்குணத்துக்கு தெரியும்.மாகாண சபையின் அதிகாரி என்ற முறையில் தான் சிலவேளை அமிர்தலிங்கதிற்கு மரியாதை உரையாற்ற வேண்டி வரலாம் என்பதால் அவர் திருகோணமலை செல்வதை தவிர்த்தார்.
மறுநாள் நானும் பற்குணமும் வடகிழக்கு பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா வீட்டுக்குப் போனோம்.அவர் அங்கே இல்லை. அமிர்தலிங்கத்தின் மரணசடங்கு ஏற்பாடுகள் நடந்ததால் அங்கே போய்விட்டார்.அவரின் மனைவி மூலமாக பிரேமதாசாவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணிய தகவல் கிடைத்தது.
அதுவே எனக்கும் பற்குணத்துக்கும் இடையேயான கடைசி சந்திப்பாக அமைந்தது.அதன் பின் நான் கனடா வந்துவிட்டேன்.
இந்த சம்பவம் என் மனதில் ஒரு பெரிய சந்தேகத்தை பின் கிளறியது.ஏன் பற்குணம் யோகசங்கரி ஆகியோரிடம் அந்த நபர் வாகனம் இரவல் கேட்டார்.புலிகளின் அரசியல் சதிக்கு இவரை பயன்படுத்த முயன்றுள்ளனர்.அமிர்தலிங்கத்தை கடத்தி கொலை செய்து ஈ.பி ஆர் எல் எப் மீது பழிபோட புலிகள் முயற்சித்திருக்கலாம்.அதற்குள் இந்திய தூதரக அதிகாரியின் அழைப்பு அவர்களின் திட்டத்தை குலைத்திருக்கலாம்.அந்த நபர் தன்னைக் காப்பாற்ற எதையும் செய்ய துணிந்தவர்.அந்த கொலைக்கு சில வாரங்கள் முன்பாகவே தன் இருப்பிடத்தை ஒரு பாதுகாப்பான பகுதிக்கு இடம் மாற்றி இருந்தார்.
மேலும் அன்றிரவு தாமதமாக வர காரணம் என்ன?ஏன் பதட்டப்பட்டார்?
புரியாத புதிர்.
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)