பற்குணம் ( பகுதி 113 )

வட கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களின் அழைப்பை ஏற்று பற்குணம் மீண்டும் மாகாண சபைக்குத் திரும்பினார்.பற்குணத்தின் பாதுகாப்புக்கும் அவரே உத்தரவாதம் அளித்தார். பற்குணம் குடியிருந்த வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் புலிகளின் புலனாய்வுத்துறை அள்ளிச் சென்றுவிட்டது.அவருடைய மகளின் சிறுவயது சம்பாசனைகள் பதிவுசெய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்கள் கூட புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டது.எதுவும் மிஞ்சவில்லை.

இதனிடையே மாகாண சபைக்குள் புலிகளின் ஆதரவாளர்கள் அரச ஆதரவுடன் மாகாண சபை நிர்வாகத்திற்குள் நுழைந்தனர்.யாழ்ப்பாண தமிழர்கள் ஆதிக்கம் அங்கே தலைதூக்கியது.இதன் காரணமாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் திருகோணமலையில் யாழ்ப்பாண தமிழர்கள் குடியேறினார்கள்.அந்த பகுதி மக்கள் மறந்திருந்த சாதிவெறி புத்துயிர் பெற தொடங்கியது.இது மாகாண சபை நிர்வாகத்திலும் எதிரொலித்தது.

பற்குணத்துக்கு புலிகளால் அங்கே எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை.ஆனால் மாகாண சபைக்குள் கொஞ்சம் வெறுப்புகள், சாதீய உணர்வுகள் தலையெடுத்தது.பற்குணம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் துணிவும்,மற்றவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் முன்னின்று உதவும் குணம் இவை காரணமாக பற்குணத்தை எதிரிகளே ஓரம்கட்டத் தயங்கினார்கள்.

அவர்கள் எவ்வளவுதான் அரச ஆதரவு ,புலிகள் ஆதரவு இருந்தபோதும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தால் எல்லோருக்கும் விருப்பமில்லாதபோதும் பற்குணம் நம்பிக்கைக்கு உரிய ஆளாகவே இருந்தார்.

1990 மே 29 இல் எங்கள் அய்யா பற்குணத்தின் வீட்டில் இறந்தார்.அன்றைய தினம் திருமதி பற்குணம் மகளுடன் கல்விச் சுற்றுலா சென்றிருந்தார் .பற்குணம் தகவல்களை உரியவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டு அவரின் உடலை எமது கிராமத்துக்கு எடுத்துச் சென்றார்.

மறுநாள் ஈமக்கிரியைகள் முடிந்தன.என் மனைவி மகன் இருவரையும் யாழ் நகரில் உள்ள ஒரு உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்தார்.அங்கே புலிகளின் பாப்பா குழுவினர் இளம்பரிதியின் ஏற்பாட்டின் பெயரில் பற்குணத்தை ஒரு ரைக்டரில் பகிரங்கமாக சோ காட்டி கடத்திச் சென்றனர்.

அங்கே மரணசடங்கு என்பதால் எங்கள் உறவினர்கள் அயலவர்கள் நிறையவே நின்றனர்.சில இளைஞர்கள் புலிகளுக்கே தெரியாமல் புலிகளைத் தொடர்ந்தனர்.அவரகள் சுற்றி வளைத்து சாவகச்சேரி நகரில் உள்ள முகாமுக்குள் கொண்டுவந்து சேர்த்தனர்.

தகவல் உறுதிப்படுத்தப்பட்டதும் முகாம் எமது ஊர் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டது.கேள்விக் கணைகள் எழுந்தன.பற்குணத்தின்மீது எந்தக் குற்றங்களையும் சுமத்த முடியவில்லை.திருகோணமலையில் உள்ள புலிகள் ்அவரை ஏன் கைது செய்யவில்லை.என்ன சாதிவெறியா எனவும் கேள்விகள் எழுந்தன.

இதற்குள் பற்குணமும் பயப்படவில்லை.படுக்க வேண்டும் எனக் கேட்டார்.பாய் கொடுத்தார்கள்.தலையணை வேண்டும் என்றார்.அதற்கு பாப்பா தலையணை இல்லாவிட்டால் அய்யா படுக்க மாட்டீங்களோ என நக்கலாக கேட்டானாம்.ஆனால் அங்குள்ள புலி ஒருவன் வெளியில் உள்ள நிலைமையை அவதானித்த பின் தலையணைக் கொடுத்தான்.பற்குணம் தூங்குவது போல பாசாங்கு செய்து நிலைமையை அவதானித்தார்.எமது ஊர் மக்களின் முற்றுகை புலிகளுக்குப் பய்த்தைக் கொடுத்தது.

அதன் பின் அவர்களை பற்குணம் அழைத்து ஏன் என்னை இங்கே கொண்டுவந்தீர்கள் எனக் கேட்டார்.அதற்கு சரியான விளக்கம் இல்லாததால் மேலிட உத்தரவு என்றனர்.

இதற்கிடையே மக்களின் முகாம் சுற்றிவளைக்கப்பட்ட தகவல் புலிகளின் தலைமையை எட்டியது.நிலைமை மோசமாகவும் என்று கருதிய புலிகளின் மேலிடம் மன்னிப்புக் கேட்டு அவரை விடுவிக்குமாறு பணித்தது.

அவர்கள் விடுவித்தபோது பற்குணம் அவர்களைப் பார்த்து நான் எங்கேயும் ஓடவில்லை,ஒழியவில்லை.ஓடவும் மாட்டேன். நீங்கள் நேரடியாகவே என்னிடம் வரலாம் என்று கூறிவிட்டு வெளியேறினார்.

இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினரை விடுவிக்க பற்குணத்தின் உதவியை சில உயர்சாதியினர் நாடினர்.அவர் உண்மையான புலி உறுப்பினர் என்பதால் தன்னால் உதவ முடியாது என மறுத்ததற்கு பழிவாங்கலே இது என அறிந்தோம்.இதற்கு சாதி முலாம் பூசப்படலாம் என்பதால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாவை புலிகள் ஏவினர்.பாப்பாவுக்கு சமூகம் சம்பந்தமான பார்வையோ அறிவோ இல்லை.ஆனால் பற்குணத்தை விடுவிப்பதற்கு பரமு மூர்த்தியின் அழுத்தமும் இருந்ததாக அறிந்தேன்.

மக்கள் ஒன்றாக இணந்து போராடி புலிகளிடமிருந்து ஒருவரை மீட்ட வரலாறு எமது கிராமத்துக்கு உரியது.அதற்கு பற்குணத்தின் கறைபடியாத வாழ்க்கை ஒரு காரணமாகும்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)