அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். வரும் 9-ம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராக சசிகலா பதவியேற்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அன்றைய இரவே அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா தோழியான சசிகலா கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர்.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவை தேர்வு செய்யும் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து, சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் போயஸ் தோட்டத்துக்கு சசிகலா திரும்பினார்.
சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர் தமிழகத்தின் 21-வது முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா, வரும் 9-ம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடக்கும் என்றும், இதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓபிஎஸ் ராஜினாமா
இந்நிலையில், தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், ”தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்க வேண்டும்” என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் 7-ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார். அதன்பின்னர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோருவார் சசிகலா. அதன்பின் ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
(The Hindu)