இன்று ஊர்காவற் துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வழக்கு நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டது. அதன் போது பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்து கவனயீர்ப்பொன்று ஊர்காவற்துறை நகரத்தில் நீதிமன்றத்திற்கருகில் இடம்பெற்றது. இது முடிந்த பின் வித்தியாவின் தாயாரைச் சந்திக்கச் சென்றோம். இன்றைய தினம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
செல்லும் வழியில் வித்தியாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைச் சென்று பார்த்து எமது அஞ்சலியைச் செலுத்தினோம் , கடற்கரையில் காட்டுப் பூக்களின் காலடியில் அவளின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. ஒரேயொரு சொற்கள் உதிர்ந்த பலகை அவள் தலை மாட்டில் வைக்கப் பட்டிருந்தது , மணல் மேல் புற்கள் முளைத்திருந்தது.
வித்தியாவின் தாயாரிடம் வந்திருந்த சகோதரிகள் உரையாடிய போது அரசு கொடுத்த வீட்டிற்கு அதிகாரிகள் வாடகை கேட்கிறார்கள் என்று சொன்னார். வவுனியாவில் இந்திய வீட்டுத் திட்டத்தில் அவருக்கு ஜனாதிபதியே வந்து வழங்கிய வீட்டுக்கு இப்பொழுது குத்தகை கேட்பதாகச் சொன்னார்.
இன்னும் குற்றவாளிகள் தண்டனை பெறவில்லை. தாய்க்கு யோசித்து யோசித்து தலையில் வருத்தம் வந்து விட்டது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைகிறார்கள். வழக்கு விசாரணைக்கு கூட ஒழுங்காகச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில் வழங்கிய வீடும் வாடகை வீடென்றால். இந்த லட்ஷணத்தில் நீதி எங்கே கிடைக்கப் போகிறது?
பெண்கள் தொடர்ந்தும் வன்முறைக்குள்ளாகிறார்கள். சமுகத்தில் அதற்கான நீதியும் கவனமும் கொஞ்சக் காலத்திலேயே கலைந்து விடுகிறது. இவை தொடர்பில் நாம் இன்னும் இன்னும் அக்கறை காட்ட வேண்டும்.
கொஞ்ச நேரம் அவருடன் இருந்து விட்டு திரும்பும் போது வித்தியாவின் படம் வைக்கப் பட்ட மேசையடிக்குச் சென்றேன். விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது.அவளின் படத்திற்கு தேநீர் வைக்கப் பட்டிருந்தது. அவளது கண்களைப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை.
(Kiri Shanth)