வட மாகாணத்தில் இன்று பிரதான பேசுபொருளாக இருப்பது போதைப் பொருள் பாவனை. அதிரடிப் படையை களம் இறக்கி தேடுதல் வேட்டை முதல் கைதுகள் வரை தொடர்வதும், நீதிமன்றம் கடும் தண்டனைகள் விதிப்பது மூலமாகவும் மட்டும், இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை.காரணம் இது எம் சமூகம் சார்ந்த பிரச்சனை. இதனை செய்பவர்கள் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள். இவர்கள் யார் என்பது இந்த சமூகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். போதைப் பொருள் கடத்துபவரை வேண்டுமானால் ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்திருக்கலாம்.
ஆனால் போதைப் பொருள் பாவிப்பவரை அதற்கு அடிமையானவரை அவர்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நிச்சயம் தெரியும். இருந்தும் அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கவே இவர்கள் விரும்புகிறார்களே தவிர அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்து அவர்களை சமூகத்தில் முந்தி இருக்க செய்யும் செயலை செய்ய முனைவதில்லை. தம் உறவுகள் தவறான பாதையில் செல்வதை அறிந்ததும் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய கடமை தாய், தகப்பன், சகோதரர் என தொடங்கி ஏனைய உறவுகளானா மாமன் மச்சான் நண்பர்கள் என நீள வேண்டும்.
மாறாக அவர்தம் அறிவுரைகள் மீறப்படும் பட்சத்தில் அவர்களின் ஆசிரியர்கள் ஊர் பெரியவர்கள் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியை கோரவேண்டும். அதுகூட பலனளிக்காத பட்சத்தில் அவர்கள் சட்டத்தின் உதவியைத் தான் நாடவேண்டும். ஒரு பொறுப்புள்ள தாய் தந்தையாக மட்டுமல்ல
யுத்த சூழலால் மாசு பட்ட எம் சமூக கட்டமைப்பில், வடக்கு மாகாண பெற்றோர்கள், அதனை தாமே முன்வந்து செய்யவேண்டும். ஒரு சமூக நலன்சார்ந்த சிந்தனை மாற்றத்துக்கான, முதல் பிள்ளையார் சுழியை அவர்கள் தான் போடவேண்டும்.
பூனைக்கு மணி கட்டுவதை விட கடினமான, புலியின் வாலை பிடிக்கும் ஆபத்தான செயல் தான், போதைக்கு அடிமையானவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது. இடையில் தவற விட்டால் புலி மீண்டும் தன் செயலை தொடரும். அது போலவே வெறுமனே புனர்வாழ்வு முகாமில் அனுமதித்தால் அவர்கள் தாம் தப்பிக்க கிடைக்கும் சந்தர்ப்பத்தில், புனர்வாழ்வு முகாமைவிட்டு வெளியேறிவிடுவர். ஆனால் சட்டப்படி கையளித்தால் காவல் நடவடிக்கை அவர்களை கட்டிப்போட்டு குறிப்பிட்ட காலம் முடியும்வரை புனர்வாழ்வு தொடர்ந்து அவர்கள் புது வாழ்வுபெற வழிசமைக்கும்.
இந்த வழி முறையை பலரும் தம் உறவுகளின் மீதுள்ள அதீத பாச பிணைப்பால், அறிந்து கொள்ள விரும்புவதில்லை. குறிப்பாக எம் இன்றைய தாய்மார்.!. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்ற சொல் வழக்கு, வள்ளுவன் காலத்துடன் முடிந்து போன நிகழ்வா என்ற சந்தேகம்
இன்றைய நிகழ்கால தாய்மார்கள் சிலரை பார்க்கும் போது எழுகிறது. அதுவும் போதைக்கு அடிமையான தன் மகனை பொத்திப் பாதுகாக்கும் தாய்மாரை கண்டவுடன் கோபம் எழுகிறது. அதைவிட கேவலமாக அவர்கள் அவனது போதை பழக்கத்தால் ஏற்ப்பட்ட கடனை
தாமே தம் கணவருக்கு தெரியாமல், தாலிக் கொடியை கூட அடகு வைத்து அடைக்கும் செயல் கண்டு சினம் ஏற்ப்படுகிறது. தாய் மனசு சொக்கத் தங்கமானது என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் தன் மகன் தவறான பாதையில் பயணிக்க அனுமதிப்பது
அவள் மனது கலப்புத்தங்கமா என எண்ண வைப்பது தவறா? உண்மையான அன்பு கனிவு. கூடவே கண்டிப்பு. உணவை ஊட்ட கனிவான பேச்சும் தவறை திருத்த கண்டிப்பான செயலும் நிலைமைக்கு ஏற்ப பயன்படும். மாறாக எதிலும் அதீதம் அவர்களை பாதை மாறவே செய்யும்.
வளர்ப்பு சரியில்லை என்ற குற்ற சாட்டு எழும் போதெல்லாம், அதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய முதல் நபர் தாய் மட்டுமே. உழைப்பை தேடி வெளியே செல்லும் தந்தையைவிடக் கூடுதல் நேரம் பிள்ளைகளுடன் இருப்பவள் தாய் மட்டுமே.
நல்லது கெட்டதை சொல்லி கொடுப்பவள், அவன் பாதை மாறும் போதெல்லாம் அதை மறைக்காது, தந்தையின் உதவியையும் நாட வேண்டும். மாறாக மறைத்து நாடகம் ஆடினால், அவனின் மிகுதி காலம் மறியல் வாழ்வாக மாறிவிடும். தேவையா ஒரு தாய்க்கு இந்த நிலை?
இதற்காகவா பத்து மாதம் வலி சுமந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்தீர்கள்? உங்கள் மகன்களை சான்றோன் என கேட்க வேண்டும் என விரும்பினால், சரியான பாதையில் செல்ல மறுப்பவனை உங்களால் சீராக்க முடியாதபோது, சட்டத்தின் உதவியை நாடுங்கள்.
மாறாக காலம் கடந்த பின் கைமீறி சென்ற அவனை மறியல் வாழ்வில் கண்டு, கண்ணீர் விடாதீர்கள், ஓலம் எழுப்பாதீர்கள். சேர்க்கை சரியில்லை அதனால் தான் என்மகன் இன்று சிறையில் என ஒரு தாய், தன் தவறை காலம் கடந்து உணர்ந்து இன்று கண்ணீர் விடுகிறார். http://www.
இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்றால், நீங்களாகவே முன்வந்து உங்களது கைமீறிச் செல்லும் உங்கள் பிள்ளைகளை, எம் சமூகத்தின் இளையவரை சட்டத்தின் துணைகொண்டு புனர்வாழ்வாழித்து, அவர்களை சமூகத்தில் முந்தி இருக்கும் அங்கமாக்க முயலவேண்டும்.
அதனால் மட்டுமே வடக்கில் போதை பொருள் பவனையால் ஏற்ப்படும் சமூக விரோத செயல்களை நாம் கட்டுப்படுத்த முடியும். மாறாக எம் இளையவர் விடும் தவறுகளை உறவுகள் பொத்திப் பொத்தி காக்க நினைத்தால், சீரழிந்த சமூகம் என்ற பெரும் பழியை நாம் அனைவரும் சுமக்கவேண்டிவரும் .
சமூகத்தின் மேம்பாட்டிற்காக நாம் முன் எடுக்கும் நடவடிக்கையில், முதலில் தம் வீட்டில் நடக்கும் தவறுகளை திருத்த முனைபவர் மட்டுமே அடுத்தவர் தவறை சுடிக்காட்டும் தகுதியை பெறுகிறார். அந்த வகையில் தமது பிள்ளைகளின் தவறை திருத்த பெற்றோர் முதலில் முன்வர வேண்டும் .
உன்னை திருத்து உலகம் திருந்தும் என்பது போல, தன் உறவுகளை திருத்தி சமூகத்துக்கு அறிவித்து, நீண்ட நெடிய யுத்த வடுக்களை சுமந்த எம் மண்ணில் பாதை மாறும் இளையவரை முடிந்த வரை திருத்தி, முடியாத பட்சத்தில் சட்டத்தின் உதவியை நாடியாவது நல்ல மனிதராக்குவோம்.
மாறாக தேவையற்ற விடயங்களை விமர்சனமாக்கி. முகநூலில் கழுவி கழுவி ஊத்த விரும்புபவர் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். இன அழிப்புக்கு போதை பொருள் அறிமுகமும் ஒரு ஆயுதமே!. எமது சமூக சீரழிவுக்கு காரணியாக போதை பொருள் பாவனை திட்டமிட்டே பயன்படுத்தப்படுகிறது!.
பொங்கு தமிழ்!, எழுக தமிழ்! நிகழ்வுகள் எல்லாம் சிங்களத்தின் காதில் கேட்கும் போதெல்லாம், மாதகல் கடற்கரையில் கேரளத்து கஞ்சா கரை ஒதுங்கும். அவை பாதுகாப்பாக சேரவேண்டிய இடம் சேரும். அதன் பின் ஆவா குழு களம் இறங்கும். ஆங்காங்கே வாழ் வெட்டு சம்பவங்கள் நடந்தேறும்.
வடக்கின் தந்தையரே! உங்கள் மகன்களை அவயத்து முந்தி இருக்க செய்யும் உத்தேசமா? தாய் மாரே! சான்றோன் என கேட்டு ஈன்ற பொழுதில் பெரிதுவக்க போகிறீர்களா? இல்லை சீரழிந்த மகனை பார்க்க சிறை வாசல்களில் கண்ணீரும் கம்பலையுமாக காத்திருக்கப் போகிறீர்களா?
– ராம் –