3 நிமிடங்களை ஒதுக்கி இந்த பதிவை முழுவதும் படித்து பாருங்கள்..!
உணர்ச்சி வயப்பட்டு அரசியல் முடிவுகளை எடுத்தே பழகிவிட்டவர்கள் நாம்.. சற்றே உங்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு, அறிவுசார் தளத்தில் நின்று கீழே உள்ளவற்றை முழுமையாக வாசியுங்கள்.
ஒரே நாளில் புரட்சியாளராக உங்கள் கண்களுக்கு மாறியிருப்பவர் திரு.பன்னீர் செல்வம் அவர்கள். ஏன், எதற்கு, என்ன காரணம் என்றே தெரியாமல் மிகப்பெரிய வில்லியாக தெரிவார் சசிகலா.
தமிழ்ச் சமூகமே, மனம் திறந்து சிந்தித்துப் பார். தமிழகத்தை கொள்ளையடித்து, ஊழல் செய்து, கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து உங்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட ஜெயலலிதாவை உங்களால் அம்மா என்று கொண்டாட முடிகிறது. ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது, பேருந்து எரிக்கப்பட்டதில் மூன்று அப்பாவி மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதற்குப் பிறகும் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்காத ஜெயலலிதா புனிதராகத் தெரிகிறார்.
குடும்பச் சண்டையில், தினகரன் பத்திரிகை எரிக்கப்பட்டு அப்பாவி ஊழியர்கள் உயிரோடு கருக்கப்பட்ட பின் கண்கள் பணித்தது நெஞ்சம் இனித்தது என்று மீண்டும் சேர்ந்து கொண்ட மாறன் சகோதரர்களும், கருணாநிதி, ஸ்டாலினும் மோசமானவர்களாகத் தெரியவில்லை..
உங்களால் அம்மா என்று கொண்டாடப்படும் ஜெயலலிதா உயிரோடு, சுய நினைவோடு இருந்தபோது கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில், ஜெயலலிதா உத்தரவின் பேரில் நத்தம் விசுவநாதன் வீட்டில் ரெய்டு நடைபெற்றது.
அவரிடம் இருந்த அனைத்து பதவிகளும் பறிக்கபப்பட்டன… அவர் இன்று உத்தமராய் தெரிகிறார், அதே காலகட்டத்தில் சுமார் 100 நாட்கள் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்றே தெரியாமல் பல ஆயிரம் கோடிகள் பணத்தை பாதுகாக்க போராடிக் கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் மிகப்பெரிய புனிதராய் தெரிகிறார்.
தமிழ்ச் சமூகமே..!
ஜெயலலிதா அவர்கள் ஓ.பி.எஸ் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட ஐவர் அணியை கைது செய்யும் அளவிற்கு அவர்கள் பலல்லாயிரம் கோடி ரூபாய்களை சுருட்டி விட்டதாக புலனாய்வு வார இதழ்கள் செய்தி வெளியிட்டனவே நினைவிருக்கிறதா அது…
இறுதியில் ஒரு நாள் போயஸ் தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்ட ஐவர் அணியிடமும் ஜெயலலிதா மிகவும் கடிந்து கொண்டதாகவும் அவர்கள் சுருட்டிய பணத்தை எல்லாம் போயஸ் தோட்டத்தில் ஒப்படைக்குமாறும் கூறியதாக செய்திகள் வந்ததே மறந்து வி்ட்டோமா..
தேர்தல் நேரத்தில் ஆம்புலன்சில் வைத்து பணம் எண்ணும் இயந்திரத்தின் உதவியோடு பல்லாயிரம் கோடிகள் பணத்தை வாரி இறைத்த கரூர் அன்பு நாதன், நத்தம் விசுவநாதனின் பினாமி என்பதும், நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு வந்த நேரத்தில் ரிசர்வ் வங்கியில் இருந்து நேரடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு செல்வாக்குடன் இருந்த சேகர் ரெட்டி ஓ.பி.எஸ் அவர்களின் பினாமி என்பதும் ஏன் உங்களுக்கு மறந்து போயிற்று…
அன்று இதே ஓ.பி.எஸ் சையும், நத்தம் விசுவநாதனையும் கடுமையாக விமர்சித்த தி.மு.க. இன்று ஓ.பி.எஸ் சை ஆதரிக்கிறேன் என்று சட்டப்பேரவையிலேயே பேச வேண்டிய தேவை என
எல்லாமே பணத்திற்காகவும், பதவிக்காகவும்தான். ஆனால், நாம் ஜெயலலிதாவின் ஊழல்கள், அடாவடித்தனங்களை ஏற்றுக் கொள்வோம். தி.மு.க., மற்றும் ஓ.பி.எஸ் உள்ளிட்டோரின் அடாவடித்தனத்தை ஏற்றுக் கொள்வோம். சசிகலாவை மட்டும் ஏற்க மாட்டோம்…காரணம்….சொல்லத் தெரியாது…ஏற்க மாட்டோம்.
இன்றைக்கு ஜெயலலிதா மிகப்பெரிய தலைவி. எம்.ஜி.ஆர் மரணமடைந்த பின் ஜெயலலிதாவை மிகக் கேவலமாக அவமானப்படுத்திய போதும், அவர் உயிருக்கே ஆபத்து வந்த போதும் அவரோடு இருந்த அவரைக் காப்பாற்றியது, இன்றைக்கு மன்னார்குடி மாபியா என்று உங்களளால் அழைக்கப்படும் சசிகலா குடும்பத்தினர்தான்.
இன்று ஓ.பி.எஸ் பக்கம் நின்று சசிகலாவை விமர்சிக்கும் பி.ஹெச் பாண்டியன் அன்று ஜெயலலிதாவைப் பற்றி பேசிய வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாதவை. அவ்வளவு அநாகரீகமானவை.
ஜெயலலிதா புனிதர் எனில், சசிகலா மிக மிகப் புனிதர். சசிகலா மோசமானவர் எனில் ஜெயலலிதாவும், மிக மிக மோசமானவாரகவே இருக்க முடியும்.
35 ஆண்டு காலம் ஜெயலலிதா உடன் இருந்தவர் என்பதைத் தாண்டி நேரடி அரசியலில் எந்த இடத்திலும் தலையிடாத நேரடியாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் வைப்பதற்கு வாய்ப்பிலல்லாத சசிகலாவை வெறுப்போம். ஆனால் பல லட்சம் கோடிகளை ஊழல் செய்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன், தி.மு.க. உள்ளிட்டோரை ஏற்றுக் கொள்வோம்.
நீங்கள் கேட்கலாம், சசிகலா புனிதரா என்று…நிச்சயம் இல்லை. ஆனால் சசிகலா மீதுள்ள வெறுப்பில் இவர்கள் எல்லோரையும் நீங்கள் புனிதர் ஆக்கிவிடாதீர்கள். இப்போது நடக்கும் பிரச்னைகளுக்கு யார் காரணம்…சசியா, ஓ.பி.எஸ்.சா…நிச்சயம் இல்லை…ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும், பார்பணீயமுமே காரணம்.
கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பாருங்கள். தீபாவளிக்கு முன் தினம் இரவில் காஞ்சி ஜெயேந்திரர் கைது செய்யப்படுகிறார். அந்த கைது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பணீயத்திற்கு எத்தனை கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். அந்த கைதை வலியுறுத்தியது சசிகலாதான் என்பது பார்ப்பணக் கூட்டத்தின் எண்ணம். ஜெயலலிதா என்ற ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்வரை வைத்தே சங்கராச்சாரியாரை கைது செய்ய வைத்து விட்டாரே என்ற வன்மம்.
அது இன்று வரை நீடிக்கிறது. அதற்கான பழி வாங்கும் நடவடிக்கைகளை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள். ஓ.பி.எஸ் ஏன் முதல்வராக நீடிக்கக்கூடாது என்று கேட்பவர்களுக்கு, ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும் போது அவர் தலைமைச் செயலலகத்திற்குள் இருக்கும் போது தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் ரெய்டு நடக்கிறது. தலைமைச் செயலாளர் மாற்றப்படுகிறார். கிரிஜா வைத்தியநாதன் அந்த இடத்திற்கு வருகிறார். இவர் பார்ப்பணர். எஸ்.வி.சேகரின் உறவினர்.
அடுத்து தமிழகத்தில் சல்லிக்கட்டிற்கான மாபெரும் எழுச்சி மிகுந்த மாணவர் போராட்டம் நடக்கிறது. அது மத்திய அரசிற்கும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பீட்டாவில் பெரும்பாலும் இடம் பெற்றுள்ள ராதா ராஜன் உள்ளிட்ட பார்ப்பணர்களுக்கும் எதிராக வலுக்கிறது. இதை எதிர்பார்த்திராத மத்திய அரசு உடனடியாக ஓ.பி.எஸ் சுக்கு உத்தரவிடுகிறது மாணவர் போராட்டத்தை கலைக்கும் படி. அதுவரை அமைதியாக நடைபெற்ற மாணவர் போராட்டம் காவல்துறையால் வன்முறையாக மாற்றப்படுகிறது.
மீனவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுகிறது. மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சில நாட்களிலேயே ஆர்.எஸ்.எஸ் பேரணி சென்னையில் நடைபெறுகிறது. அதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை.
செல்வி.ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்துள்து.
ஆனால் ஓ.பி.எஸ். ஆர் எஸ் எஸ் பேரணியை அனுமதிக்கிறார்..
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.விற்கான ஊழியனாக ஓ.பி..எஸ் மாறுகிறார். அதன் உச்சகட்டமாக, சட்டப்பேரவையிலேயே, ஒசாமா பின்லேடன் படத்தைக் காட்டி பயங்கரவாதிகள் மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவியதாகக் கூறுகிறார்.
இது தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயல். இந்த நேரத்தில்தான் அவரிடம் இருந்த பதவி பறிக்கப்படுகிறது. அவரும் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ராஜினாமா கடிதத்தை ஆளுனருக்கு அனுப்பிய அடுத்த நாள் பிரதமருக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் எழுதுகிறார் ஓ.பி.எஸ். ஆக, அவர் அந்த நிமிடம் வரை சசியை எதிர்க்கும் மன நிலையில் இல்லை.
அதன் பிறகு சசிகலா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பிற்கான பணிகள் நடைபெறுகின்றன. புதிய அமைச்சரவை பட்டியலில் ஓ.பி.எஸ் பெயர் இல்லை என்ற செய்தி ஒ.பி.எஸ் காதுகளை எட்டுகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் மத்திய பா.ஜ.க.அரசை நாடுகிறார். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம் எதிர்பார்த்திருந்தால் ஒ.பி.எஸ்.சின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்போது ராஜினாமாவை சட்ட ரீதியில் திரும்பப் பெற முடியாது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில்தான் ஒ.பி.எஸ், தனது அடுத்த கட்ட நாடகத்தை ஜெயலலிதா சமாதியில் தொடங்குகிறார்.
45 நிமிட மவுன அஞ்சலி ஊடகங்கள், பொதுமக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவே. அதன் பிறகு பார்ப்பண பத்திரிகைகளும், அதிகார வர்க்கமும் அவருக்கு பக்க பலமாய் நிற்கத் தொடங்குகின்றன. அவரோடு இருப்பவர்களை பார்த்தாலே இது புரியும். மைத்ரேயன், கிரிஜா வைத்தியநாதன், எஸ்.வி.சேகர், குருமூர்த்தி என்று ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் இதை பயன்படுத்தி சசிகலாவை பழி வாங்கத் துடிக்கிறது.
அவர்களுக்கு நன்றாகத் தெரியும் சசிகலா ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை ஏற்றால் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளால் தமிழகத்தில் காலூன்றவே முடியாது என்பது. நீங்கள் உடனே ஏதோ சசிகலா பெரியாரின் கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு நடக்கும் பெரியாரியவாதி, என்றெல்லாம் கற்பனை செய்து விடாதீர்கள். ஒப்பீட்டளவில் ஓ.பி.எஸ். போன்றவர்களை இயக்குவது போல் சசிகலாவை ஆர்.எஸ்.எஸ் ஆல் இயக்க முடியாது அவ்வளவுதான்.
கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ், தி.மு.க.போன்றவர்களை ஏற்றுக் கொள்ளும் தமிழ்ச் சமூகம் ஏதோ சசிகலா மட்டும்தான் ஊழல் வாதி போல் வெறுப்பது விநோதமான ஒன்று. மீண்டும் சொல்கிறேன். சசிகலா புனிதர் அல்லர். மாற்று அரசியல் என்பது சசிகலாவிற்கு மாற்றாக பன்னீர் என்பதோ, பன்னீருக்கு மாற்று தி.மு.க.என்பதோ அல்ல. மாற்று என்பது கொள்கை மாற்றாக இருக்க வேண்டும். ஒரு புதிய நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது. நாம் அதை நோக்கித் தான் நகர வேண்டுமே தவிர, இந்த பன்னீர் செல்வம் போன்றோரின் பின்னால் அல்ல என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு விடியல் கிட்டும்.