இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பதவிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ள ஒரு விடயத்தைப் பார்க்கும் போது, 1987ஆம் ஆண்டில் இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படும் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது, நாட்டில் தென் பகுதிகளில், அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன. சுமார் 140 பேர், அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் பிரதமர் ஆர்.பிரேமதாச உள்ளிட்ட சிலர், அதனை எதிர்த்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் ஆளும் கட்சிக்கு இருந்த போதிலும், அந்த ஒப்பந்தத்தின் படி, மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்கான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபைகள் சட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என, ஜனாதிபதி ஜயவர்தன சந்தேகித்தார்.

எனவே, அவர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பஸ்களில் ஏற்றி, கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களை மரியாதையுடன் சிறைவைத்தார்.

இரண்டு சட்டங்களுக்கும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் வரை, அவர்கள் ஏனையவர்களின் துண்டுதல்களுக்கு உள்ளாவதைத் தடுப்பதும் அவர்கள் மனதில் பீதியைத் திணித்து, தமது கட்டுப்பாட்டுக்குள் அவர்களை தொடர்ந்தும் வைத்திருப்பதும், ஜயவர்தனவின் நோக்கமாகியது.

இன்று தமிழகத்தில் சசிகலா செய்திருப்பதும் அதுவே. முதலமைச்சராகத் தம்மை நியமிக்கும் சட்டமன்ற வாக்குப் பதிவு நடைபெறும் வரை, அவரும் சட்டமன்ற உறுப்பினர்களை ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்க (தடுப்புக் காவலில்) வைத்துள்ளார்.

மத்திய அரசாங்கம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடைசெய்ததை அடுத்து, மாநில மக்கள் பெரும் போராட்டம் நடத்தி அவ்விளையாட்டுக்கான அனுமதியைப் பெற்றனர். இப்போது மாநிலத்தில் அரசியல் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா, நோயுற்று கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி, அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதற்கு முன்னர் இரண்டு முறை அவருக்காகப் பதில் முதலமைச்சராகக் கடமையாற்றியிருந்த பன்னீர்ச்செல்வம் அவரது சிபார்சின் பேரில் மீண்டும் பதில் முதலமைச்சரானார்.

ஜனவரி ஐந்தாம் திகதி ஜெயலலிதா உயிரிழந்தார். அத்துடன் ஜெயலலிதாவினால் ஒதுக்கித் தள்ளிய தமது உறவினர்களுடன் அவரது நெருங்கிய தோழியான சசிகலா ஜெயலலிதாவின் உத்தியோகபூர்வ இல்லமான போயஸ் தோட்டத்தினைக் கைப்பற்றிக் கொண்டனர்.

அவரது செல்வாக்கு எவ்வளவு என்றால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜெயலலிதாவின் மறைவுக்கான தமது அனுதாபத்தைத் தமிழக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தலைவரான முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்துக்கு தெரிவிக்காது சசிகலாவுக்கே தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

கச்சத்தீவில் புதிய ஆலயக் கட்டடத் திறப்பு விழாவுக்குத் தமிழகத்தில் இருந்து 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்த நிலையில் 100 பேருக்கு அனுமதி வழங்குமாறு ஒரு பதவியையும் வகிக்காத சசிகலா அனுப்பிய கடிதத்தை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால அந்த அனுமதியையும் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில்; சசிகலா பல வழிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைத் தம்பக்கம் வளைத்துக் கொண்டு கட்சியின் பலம் வாய்ந்த பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்.

முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அப்போது வெறும் பார்வையாளராக இருந்துவிட்டார். பின்னர், கடந்த ஐந்தாம் திகதி பன்னீர்ச்செல்வம் முதலமைச்சர் பதவியையும் இராஜினாமாச் செய்து, சசிகலாவுக்கு முதலமைச்சராவதற்கான வழியை திறந்துவிட்டார்.

தம்மை, முதலமைச்சராக்குமாறு சசிகலா மாநில ஆளுநரிடம் கேட்கவிருந்தார். ஆனால், ஆளுநர் மாநிலத்தில் இருக்கவில்லை.

அதற்கிடையே “சசிகலாவின் ஆட்கள் வற்புறுத்தி வலுக்கட்டாயமாகத் தம்மை முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைத்தார்கள்” என்று, கடந்த ஐந்தாம் திகதி முதல் காபந்து முதல்வராகவிருக்கும் பன்னீர்ச்செல்வம் ஏழாம் திகதி கூறினார்.

அதையடுத்து, சசிகலா தமது முதலமைச்சர் கனவு நனவாகுமா என்று அச்சத்தில் உள்ளார். எனவே, அவரும் ஜயவர்தன பாணியில் சட்டமன்ற உறுப்பினர்களைச் சிறைப் பிடித்து அவர்களின் வாக்குப் பலத்தால் காரியம் சாதிக்க முனைந்துள்ளார்.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியருகே 45 நிமிடங்கள் தியானத்தில் இருந்துவிட்டு ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே பன்னீர்ச்செல்வம் முதல் முறையாகத் தாம் வற்புறுத்தலினாலேயே இராஜினாமாச் செய்ததாகக் கூறினார்.

இது பெரும்பாலும் உண்மையாக இருக்கக்கூடிய கருத்தாகும். அதனை அடுத்து, சசிகலா ஓரிருவரைத் தவிர்ந்த அ.தி.மு.க எம்எல்ஏக்கள் சகலரையும் கூவத்தூரில் கோல்டன் பே ஹோட்டலில் தங்கவைத்து (அடைத்து வைத்து) அவர்களுக்கு வெளியுலகுடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளார்.

தமிழகச் செய்திகளின்படி, அவர்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. பத்திரிகை வாசிக்கவோ, தொலைக்காட்சியைப் பார்க்வோ அனுமதியில்லை. குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நிலைமை எவ்வளவு பாரதூரமாகவும் கேவலமானதுமாக இருக்கிறது என்றால் ஐந்து
அ.தி.மு.க எம்எல்ஏக்களுக்காக அவர்களது குடும்பத்தினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்து, அதன் பிரகாரம் அவர்களைத் தேடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜே.ஆர்.ஜயவர்தன எம்.பிக்களை அடைத்து வைத்து, அவர்களது வாக்குகளைப் பெறத் திட்டமிட்டபோது, இங்கு பலர் கேட்டதைப் போல் இது என்ன கேவலமான அரசியல் என்று இப்போது தமிழகத்தைப் பார்த்து கேட்க வேண்டியுள்ளது.

சசிகலா இந்த எம்எல்ஏக்களை குண்டர்கள் மூலம் பிடித்து அடைக்கவில்லை. அவர்கள் தாமாகவே சசிகலாவின் கட்டளைக்கு பணிந்துள்ளனர். அவர்கள் ஏன் அடிமைகளைப் போல் அவ்வாறு கீழ்ப்பட வேண்டும்?

ஒரோயொரு பதில்தான் அதற்கு இருக்கிறது. பதவிஆசை என்பதே அப்பதிலாகும். பன்னீர்ச்செல்வம் தொடர்ந்தும் விடடுக் கொடுத்துக் கொண்டே போனதால், சசிகலாவின் கையோங்கும் என்று நினைத்த எம்எல்ஏக்கள் தாமாகவே அவருக்கு அடிமையாகியுள்ளனர்.

இங்கும் மஹிந்த ராஜபக்ஷவோடு இணைந்து, மைத்திரியைப் புலிகளின் ஏஜன்டு எனக் கூறிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலர், தேர்தலின் பின்னர் மைத்திரியுடன் சேர்ந்து இருப்பதும் பதவி ஆசைக்கே.

2015 ஆம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை மைத்திரி பிரதமராக நியமிக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காரர்கள் அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வராமல் இருந்ததும் பதவி ஆசையினாலும் பயத்தினாலுமேயாகும்.

பன்னீர்ச்செல்வமும் ஒரு கோழை என்றே கூற வேண்டும். ஜெயலலிதா எவ்வளவு பெரிய ஊழல் பேர்வழியாக இருந்தாலும், அவர் அதனை அறிந்தே ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்.அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. வெறும் தேநீர்க் கடை நடத்தி வந்த பன்னீர்ச்செல்வத்தை செல்வந்தராக்கி, முதலமைச்சராக்கியவர் ஜெயலலிதாவே.

ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெறும் அரசியல்வாதிகளிடம் செல்வம் வருவது எவ்வாறு என்பது உலகம் அறிந்த இரகசியம்.
இலங்கையிலும் மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்தவர்கள், இன்று கொடி கட்டி பறக்கிறார்கள்.

ஒரு கட்சித் தலைவருக்கு சாரதியாக வந்த ஒருவர், தாமும் அரசியலில் குதித்து, இன்று யானைகளையும் வைத்திருக்கிறார். எனவே, பன்னீர்ச்செல்வம் தம்மை வளர்த்துவிட்ட ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

ஆனால் ஜெயலலிதாவின் மரணததின் பின்னர் அவர் ஏன் சசிகலாவுக்கு பணிந்து நடக்க வேண்டும்? ஜெயலலிதா மரணிக்கும் போது, அவர்தான் முதலமைச்சர். அவர் மாநிலத்தில் எவருக்கும் பணிந்து நடக்கத் தேவையில்லை.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, சசிகலா எப்போதும் அவருடன் இருந்தார். எனவே, அப்போது சசிகலாவுக்குப் பணிந்து ஜெயலலிதாவின் விசுவாசத்தை மேலும் பெற, பன்னீர்ச்செல்வம் செயற்பட்டு இருக்கலாம்.

ஜெயலலிதா மரணித்தபோது, உடனடியாகச் சசிகலாவுக்குப் பணிந்து நடப்பதை அவரால் நிறுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது போலும். இறுதியில் இந்தக் கோழைத்தனத்தால் அவர் அவரது கழுத்திலேயே சுருக்கிட்டுக் கொண்டார்.

கட்சியில் பெரும் அதிகாரமுள்ள பொதுச் செயலாளர் பதவியை முதலில் பறிகொடுத்தார். அவரே சசிகலாவின் பெயரை அப்பதவிக்கு முன்மொழிந்துள்ளார்.

அதனை அடுத்து முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டுப் பின்னர் திடீரென விழித்துக் கொள்கிறார்.
இப்போது, அவர் காட்டும் துணிவை ஜெயலலிதா மரணித்தவுடன் காட்டியிருந்தால் சசிகலாவால் எதனையும் செய்துவிட முடியாது.

தமக்குப் பதவி ஆசையில்லை எனப் பன்னீர்ச்செல்வம் கூறினாலும், அது உண்மையல்ல; கோழைத்தனத்தில் சசிகலாவுக்கு பிடி கொடுத்துவிட்டு, பின்னர் வருவது வரட்டும் என இப்போது துணிவை வரவழைத்துக் கொண்டுள்ளார்.

அவரது கோழைத் தனத்தினாலேயே ஜெயலலிதா அவரை மூன்று முறை தமக்காக பதில் முதலமைச்சராகக் கடமையாற்ற இடமளித்தார். ஏனென்றால் இவரிடம் கொடுத்தால் பதவி பறிபோகாது என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்திருந்தார்.

இதைத்தான் இலங்கையில் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாசவும் மஹிந்த ராஜபக்ஷவும் செய்தனர்.

இலங்கையில் சில சமயங்களில் பிரதமர் பதில் ஜனாதிபதியாகக் கடமையாற்ற வேண்டி வரும். எனவே, பிரேமதாசவும் மஹிந்தவும் தமக்கு எந்த வகையிலும் சவால் விடும் ஆற்றலோ தைரியமோ இல்லாதவர்களையே பிரதமர்களாக நியமித்தனர். பிரேமதாச, டி.பி. விஜேதுங்கவை நியமித்தார். மஹிந்த, ரத்னசிறி விக்கிரமநாயக்கவையும்
டி.எம். ஜயரத்னவையும் நியமித்தார்.

விஜேதுங்க எந்தளவு பிரேமதாசவுக்கு பணிவானவர் என்றால், இரண்டும் இருண்டும் எத்தனை எனப் பிரேமதாச கேட்டால், “ஐயா சொல்லுற கணக்குத் தான்” என விஜேதுங்க கூறுவார் என்பார்கள்.

ஜெயலலிதாவுக்கு பன்னீர்ச்செல்வமும் அவ்வாறுதான். அவரும் வேறு பலரைப் போல் ஜெயலலிதாவின் காலைத் தொட்டு கும்பிட்டவர்.இப்போது, சசிகலா தம்மை முதலமைச்சராக நியமிக்குமாறு ஆளுநர் வித்தியாசாகர் ராவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் ஆளுநர் அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை.

அதேவேளை அவர் பன்னீர்ச்செல்வத்தை ஆதரிப்பதாகவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர் நிச்சமாக யாரோ ஒருவர் பக்கம் இருக்கிறார். அனேகமாக அது பன்னீர்ச்செல்வம் பக்கமாக இருக்கலாம். ஆனால், சட்டப்படி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமது சட்டமன்றத் தலைவியாகச் சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சட்டப்படி அதற்கு எவரும் சவால் விடுக்காத பட்சத்தில், அவரை முதலமைச்சராக நியமிப்பது ஆளுநரின் கடமையாகும். ஆனால், தமிழக மக்கள் அதனை ஆதரிக்கவில்லை என்று ஆளுநருக்குத் தெரியும்.

அவரும் அதனை ஆதரிக்கவில்லைப் போல்தான் தெரிகிறது. இது அவருக்குன திரிசங்கு நிலையை உருவாக்கியிருக்கிறது என்றே கூற வேண்டும். இது போன்றதோர் நிலைமை 1994 ஆம் ஆண்டு இலங்கையில் மாகாண ஆளுநர் ஒருவருக்கு ஏற்பட்டது.

அந்த ஆண்டு நடைபெற்ற தென் மாகாண தேர்தலில், அதுவரை பதவியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி ஓர் ஆசன வித்தியாசத்தால் தோல்வியடைந்தது. அப்போது தென் மாகாண சபையின் ஆளுநராக எம்.ஏ. பாக்கீர் மாக்காரே இருந்தார்.

அவர் ஐதேககாரர். வித்தியாசாகர்ராவைப் போலவே அவரும் தாம் விரும்பாதததைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர் ஒருவருக்கும் தெரியாமல் மாகாணத்தில் இருந்து வெளியேறி ஒரிரு நாட்கள் தலைமறைவானார். பின்னர் அவர் ஸ்ரீலயசுக உறுப்பினர் அமரசிறி தொடங்கொடவை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

சசிகலா, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த போதிலும், இதற்கு முன்னர் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதாகவோ கட்சியின் கிளையொன்றில் கடமையாற்றியதாகவோ தெரியவில்லை.

இது இலங்கையில் மற்றொரு சம்பவத்தை, அதாவது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மறைவை அடுத்து, அவரது மனைவி கட்சித் தலைவியாவதற்கு எடுத்த முயற்சியை ஞாபகப்படுத்துகிறது.

அஷ்ரபின் மனைவியாக பெய்ரியல் இருந்த போதும் மு.காவின் உறுப்பினராக ஒருபோதும் இருக்கவில்லை.
ஆனால், 2000 ஆவது ஆண்டு செப்டெம்பர் மாதம் ஹெலிகொப்டர் விபத்தொன்றில அஷ்ரப் கொல்லப்பட்டவுடன் அவர் கட்சித் தலைவியாக முயற்சித்தார்.

அதனால் மு.கா பிளவுபட்டது. அ.தி.மு.கவும் அது போன்றதோர் பிளவை நோக்கி நகர்வதாகவே பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சசிகலாதான் முதலமைச்சராக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்ச்சைக்குரிய அரசியல்வாதி சுப்பிரமணியம் சுவாமி கூறுகிறார்.

அவர், அதற்காக ஆளுநர் மீது நெருக்குவாரத்தைப் பாவிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. சுவாமி வேறு கட்சியைச் சேர்ந்வராக இருந்த போதிலும், சாதாரண பிரஜை என்ற வகையில் தம்மை ஆள வேண்டியவர் யார் என்ற விடயத்தில் கருத்துத் தெரிவிக்க அவருக்கும் உரிமை இருப்பது உண்மைதான்.

ஆனால், ஓர் அரசியல்வாதி என்பதால் அவர் ஒரு வகையில் மற்றொரு கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையை இழக்கிறார்.

இதனையும் இலங்கையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர்கள் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு கொண்டு வர முயற்சிப்பதைப் போன்ற அரசியல் நோக்கம் கொண்ட செய்லாகும். அதில் இருப்பதே சுயநலம் தான்.

இங்கு தனித்துப் போட்டியிட்டால் ஓர் ஆசனத்தையேனும் பெற முடியாத தமது கட்சியின் இருப்பைப் மஹிந்தவின் மீது தொற்றி பாதுகாத்துக் கொள்வதே விமல் போன்றோர்களின் நோக்கமாக இருக்கிறது.

அங்கு சசிகலாவுக்காக பரிந்து பேசி அதி.மு.க உட்கட்சிப் பூசலை மேலும் வளர்த்து அக்கட்சியைப் பிளவுபடச் செய்தால் பா.ஜ.கவுக்கே சாதகமாக அமையும். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அரசியல், மக்கள் நலன் சார்ந்தது அல்ல என்பதையே தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் மேலும் வலியுறுத்துகின்றன.

குறிப்பு: நேற்று (14.02.2017), இந்திய உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஊழல்களுக்கு எதிரான தீர்ப்புக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை இது

(எம்எஸ்எம்ஐயூப்)