தாழும் கப்பல் கரைசேராது

(கே.எல்.ரி.யுதாஜித்)
“யுத்தம் என்பது, அழிவில்லாமல் நடைபெறுவதொன்றல்ல. நாட்டில் இடம்பெற்ற  ஜே.வி.பி கிளர்ச்சியின்போது, 80 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் அவர்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே, காலத்தின் தேவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், இறுதி யுத்தகாலத்தில், அமெரிக்கா வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அதேபோல்தான், த.தே.கூ.வினர் இப்போது, பிரிட்டன் வரும், ஜெனீவா  காப்பாற்றும், வேறு நாடு வரும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறாது” என, கருணா அம்மான் எனப்படும் வி.முரளிதரன் தெரிவித்தார்.

‘தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்ற புதிய கட்சியை மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ள, விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியாக இருந்து, பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து, 10 வருட காலமாக அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனான நேர்காணலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்மிரருக்காக அவர் வழங்கிய விசேட செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப-தலைவர்களில் ஒருவரான நீங்கள், அங்கட்சியிலிருந்து நீங்கிவிட்டீர்களா?
ஒரு கட்சியில் இருந்துகொண்டு வேறொரு கட்சியை ஏற்படுத்துவது முடியாத காரியம். அந்த வகையில், சு.க.விலிருந்து முழுமையாக வெளியேறியதன் பின்னரே, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை ஆரம்பித்துள்ளேன்.
கேசு.கவினரால், உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளனவா?

ப: அவ்வாறு எதுவுமில்லை. கடந்த பத்து வருடங்களாக, சு.கவின் உப தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்திருக்கிறேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவேளை, சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கமைவாக நானும் வாக்களித்திருக்கிறேன். அதன் பின்னரான விடயங்களிலும் பங்கு கொண்டிருக்கிறேன்.

தமிழ் மக்களுக்கான கட்சியின் தேவை கருதியே தற்போதைய முடிவினை எடுத்திருக்கிறேன். எமது கட்சி, வடக்கு -கிழக்கினை மையமாகக்கொண்டே, ஆரம்பத்தில் செயற்படும்.

கே: பிரச்சினை இல்லாவிடின், புதுக் கட்சியை ஆரம்பித்தமைக்கான பிரதான நோக்கம் என்ன?

ப: புதிய ஆட்சியிலாவது, தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே, கடந்த தேர்தலின் போது, புதிய அரசாங்கத்துக்குச் சார்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால், 100 நாட்களுக்குள் அரசியல் சாசனம் எழுதப்படும், தீர்வு வரும் என்றார்கள். ஒன்றும் நடக்கவில்லை. 2016க்குள் என்றார்கள்.

அதற்குள்ளும் ஒன்றும் நடக்கவில்லை. 2 வருடங்கள் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்திவிட்டது. அதன் பிற்பாடுகூட, எதுவித முன்னேற்பாடுகளும் இல்லை. அதேநேரத்தில், தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியும் இல்லை. தீர்வும் இல்லை.

அண்மையில், த.தே.கூவினரால் வடபகுதியில் நடத்தப்பட்ட கூட்டங்களின் போது, மக்கள் காரசாரமான வாதங்களில் ஈடுபட்டனர். இது இவ்வாறிருக்க, கிழக்கில் வேறு விதமான சூழல் நிலவுகிறது. அரசியல் அதிகாரம் எதுவுமற்றவர்களாகவே, த.தே.கூவினர் இருக்கின்றனர்.

முஸ்லிம் தலைவர்கள், அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வேறு விதமான பிரச்சினைகளை எதிர் கொள்கிறோம். இந்த ஒரு வெற்றிடமான சூழ்நிலையில் தான், ஒரு திடமான அரசியல் கட்சியினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

த.தே.கூவினர், தாங்கள் தான் தமிழர்களின் தனிப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், த.தே.கூ என்பது, ஒரு தனிக் கட்சியே அல்ல. அது பதிவு செய்யப்படவே இல்லை.

அது விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதற்கு, நானும் ஒரு காரணகர்த்தாவாவேன். ஊடகவியலாளர் சிவராம் இருக்கும் காலத்திலேயே, நாங்கள் அதனை உருவாக்கினோம். ஒரு கூட்டுக் கட்சியாக இருந்துகொண்டே, அக்கட்சி செயற்படுகின்றது. கூட்டுக்கட்சியாக இருந்துகொண்டு, த.தே.கூ தான் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறமுடியாது.

அதேநேரத்தில், வடக்கு முதல்வர் ஒரு பாதையிலும் சம்பந்தன் ஐயா வேறு ஒரு பாதையிலும், அதற்குள் இருக்கும் எம்.பிக்களின் விமர்சனங்கள் வேறு விதமாகவும், மாகாணசபை உறுப்பினர்கள் இன்னுமொரு பாதையிலுமெனப் பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பார்க்கையில் ஓர் ஆணித்தனமான தலைமைத்துவத்தினையுடைய கட்சி ஒன்றின் தேவை உணரப்படுகிறது. அதற்கான கடமை எனக்கிருக்கிறது.

கடந்த 30 வருடங்களாக, தமிழ் மக்களுக்காகப் போராடியிருக்கிறோம். அக்காலத்தில், உலகம் முழுவதும் சென்று பேச்சுகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

அதேபோல, இயக்கத்திலிருந்து பிரிந்த பின்னர், சு.கவில் 10 வருடம், நாடாளுமன்றத்தில் 10 வருடம் என இருந்திருக்கிறேன். இதன் ஊடாக, சிங்களத் தலைவர்களின் உறவு பலமாக இருக்கிறது. எந்த நிலைகள் வந்தாலும், அதனை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல், எங்கள் கட்சிக்கு இருக்கிறது. என்னுடைய தலைமைத்துவத்தின் ஊடாக அதனை வழங்க இருக்கிறேன்.

த.தே.கூவுக்கு எதிராக, இந்தக் கட்சியைத் தொடங்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு, ஒரு கட்சி தேவைப்படுகிறது. எனவே, ஒரு தனிக்கட்சியாக அறிவித்திருக்கிறோம். அதற்கு, எல்லோருடைய ஆதரவும் எங்களுக்குத் தேவை.

கே: த.தே.கூவை உருவாக்குவதில் பாரிய பங்குண்டு என்று கூறுகிறீர்கள். அவ்வாறாயின், அக்கட்சியுடன் ஏன் நீங்கள் இணையவில்லை?

ப: இப்போது, தனிக்கட்சியாக அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில், எந்தக் கட்சியுடனும் பேசத் தயாராக இருக்கிறோம். எதிர்ப்பதற்குத் தயாரில்லை.

ஆனால், த.தே.கூ ஒரு தனிக்கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருக்குமானால், இந்தக்கட்சியை ஆரம்பித்திருக்க மாட்டேன். அதனைப்பதிவதற்குக்கூட அவர்கள் தயாரில்லை.

அவர்கள், தமிழரசுக் கட்சியின் சின்னத்தை வைத்துக்கொண்டு, தங்களுடைய தலைமைகளைத் தக்கவைப்பதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அதிலுள்ள மற்றைய கட்சிகளையும் சேர்த்து ஒரு கட்சியாக ஆக்குவதற்கான நோக்கம் இல்லை. அதற்குக்கூடத் தயாரில்லாமல் இருக்கையில், ஒரு தாழும் கப்பலில் ஏறுவதற்கு நாங்கள் தயாரில்லை.

கே: ஏனைய தமிழ் கட்சிகளுடன் உறவுகள், தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளீர்களா?

ப: அனைத்துக் கட்சிகளுடனும் உறவுகள் இருக்கின்றன. எதிர்காலத்தில், தனித்தனியாகப் பேசுவோம், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனும் எங்களது கட்சியினைப் பதிவு செய்வதற்கான தஸ்தாவேஜுக்களைக் கையளித்த பின்னர், உரிய முறையில் கலந்துரையாடுவதற்கு இருக்கிறோம்.

கே: கட்சியின் சின்னம் மற்றும் கட்சியைப் பதிவு செய்தல் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

ப: தற்போதைய நிலையில், செயலாளரை மட்டுமே தெரிவு செய்திருக்கிறோம். பிரஜைகள் குழுவினுடைய வ.கமலதாஸ், செயலாளராகச் செயற்படுகிறார். கட்சியின் யாப்பினை எழுதிக்கொண்டிருக்கிறோம். முதற்கட்ட நடவடிக்கையாக, தேர்தல் ஆணையகத்தினைத் தொடர்புகொண்ட பொழுது, விண்ணப்பத்தினை தரும்படி கூறியிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கெனவே அரசியல் கட்சிகள் பதிவு செய்வதாக இருந்தால், விவரங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறார். அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த வாரம் அல்லது எதிர்வரும் வாரத்தில், அதற்கான ஆவணங்களைக் கையளிப்போம்.

அதே நேரத்தில், கரைச்சிப் பிரதேச சபை தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதால், பதிவு தாமதமாகலாம். கட்சியாக நாங்கள் செயற்படலாம். பதிவு தாமதித்து வரலாம்.

கே: தேர்தலில் போட்டியிடும் நோக்கம் ஏதாவது உண்டா?

ப: கண்டிப்பாக, வடகிழக்கில் பரந்துபட்ட அடிப்படையில் போட்டியிடுவோம். தற்போது எங்களது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்துகொண்டிருக்கிறோம். சிறந்த புத்திஜீவிகள், கல்விமான்கள் முன்வந்திருக்கிறார்கள். எங்களது மத்திய குழு, சிறந்ததொரு புத்திஜீவிகளைக் கெண்டதொரு அமைப்பாக இருக்கும்.

அதற்கு அடுத்தபடியாக செயற்குழுவும் தெரிவு செய்யப்படும். அதில் வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பார்கள். அதன் பிற்பாடு, எங்களது கட்சியின் கொள்கைகளை வெளியிடுவோம். அதன் பின்னர், பரந்துபட்ட அடிப்படையில், செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நிச்சயமாக, வருகிற பிரதேச சபைத் தேர்தலை எதிர்கொள்வோம்.

கே: தனித்தா அல்லது ஏதாவது கூட்டணியின் இணைந்துகொண்டா போட்டியிடுவீர்கள்?

ப: தனிப்பெரும் கட்சியாகவே உருவாக்குகிறோம். அந்தச் சூழலைக் கொண்டுதான் முடிவு செய்யப்படும். சிலநேரம் த.தே.கூவில் இருக்கும் கட்சிகள், எங்களுடன் இணைந்து கொள்ளலாம்.

அல்லது த.தே.கூ எங்களை இணையச் சொல்லலாம். மத்திய அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் அழைக்கலாம். அந்த முடிவுகள் தேர்தல் நெருங்கிவரும் சூழலைப் பொறுத்து அறிவிக்கப்படும். பிரதேச சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் தமிழ்க் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவதனையே விரும்புகிறோம்.

கே: த.ம.வி.பு கட்சியின் ஆரம்பத்துக்குக் காரணமாக இருந்தவர் நீங்கள். அந்தக் கட்சி தொடர்பில், எவ்வாறான கையாளுதல் இருக்கும்?

ப: த.ம.வி.பு கட்சியில், நான் அங்கத்தவன் அல்ல. உருவாக்கத்தில் என்று பார்த்தாலும், அந்தக் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பிரிந்து சென்ற பிற்பாடு நேரடியாக சு.கவுடன் தான் என்னை அங்கத்தவனாக்கிக் கொண்டேன். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தலைவராகப் பிள்ளையான் இருக்கிறார். செயலாளர் மற்றையவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் எங்களது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு வரவேற்கிறோம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கே: ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான புதிய கட்சியில் இணையுமாறு அழைப்பு கிடைத்துள்ளதா?

ப: சிங்களக் கட்சிகளுடன், பதிவின் பின்னர் பேசவிருக்கிறோம். உண்மையில், தனிப்பெரும் தமிழ்க் கட்சியாகச் செயற்படவே விரும்புகிறோம். எதிர்காலத்தில் கிழக்கில் தமிழ் முதலமைச்சரை உருவாக்குவதற்கான தீவிர செயற்பாடுகளில் ஈடுபடுவோம். வடக்கில் பிரச்சினை வரப்போவதில்லை.

கே: இவ்வளவு காலத்துக்கு, தனிக் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏன் இருக்கவில்லை?

ப: யுத்தம் முடிவடைந்தவுடன், பாதுகாப்புத் தான் தேவைப்பட்டது. பாதுகாப்புத் தேவையை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், அதிகாரம் தேவை. அதற்காகத்தான், மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்துகொண்டேன்.

அமைச்சு அதிகாரத்தினையும் பெற்றேன். அதனூடாக, பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். மக்கள் அனைவரையும் அவர்களது வதிவிடங்களுக்கு அனுப்பி வைத்தோம். முற்றுமுழுதான மீள்குடியேற்றம் இல்லாவிட்டாலும், முடியுமானவரை மக்களை மீள்குடியேற்றினோம், கிழக்கில் இருந்த இராணுவக் கெடுபிடிகளைக் குறைத்தோம்.

ஆனால் வடக்கில், தொடர்ந்தும் பிரச்சினைகள் உள்ளன. அங்குள்ள அரசியல் தலைவர்கள், முரண்பட்ட அரசியலை முன்னெடுக்கின்றமையினால், இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ இராணுவுத்தை இணைத்துக்கொண்டு செயற்படுவதற்கோ வாய்ப்பில்லை. அதனால்தான், கேப்பாப்புலவில் பிரச்சினை நீடிக்கிறது.

கேப்பாப்புலவு என்பது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணியாகும். அது ஒரு மீன்பிடிக் கிராமம். இராணுவத்தை அகற்றும்படி நான் சொல்லவில்லை.

அதேநேரத்தில், இராணுவத்தை வைத்திருக்க வேண்டுமாக இருந்தால், அரச காணிகளுக்குள் நிலைநிறுத்தலாம். கேப்பாப்புலவு 50 மீற்றர் வீதியைக் கடந்தால் அரச காணி. இங்கிருக்கும் முகாமை அகற்றி, அங்கே அமையுங்கள்.

மக்களது இடங்களில் முகாம்களை வைத்திருப்பதை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், இப்போது யுத்தம் இல்லை. இதுபோன்ற பிரச்சினைகளைக் குறைப்பதற்கு அங்குள்ள தலைமைகள் தவறுகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களைச் செய்து கொடுப்போம்.

கே: முன்னாள் போராளிகளின் கைது மீண்டும் தொடர்கிறதே?

ப: இதற்கும் த.தே.கூ தான் காரணம். போராளிகள் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்கள். அதனை வரவேற்க வேண்டும். ஆயுதப் போராட்டத்தில் இருந்தவர்கள், ஒரு கட்சியை உருவாக்கி வருகிறார்கள் என்றால், அவர்களை அரசியலுக்குள் விட்டு வாதப்பிரதிவாதங்களை முன்வைக்க வாய்ப்புக்கொடுக்க வேண்டும்.

த.தே.கூவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துப் பேசச் சென்றவேளை, அவர்களுக்கு இடமளிக்கவில்லை.
இப்போது, சுமந்திரன் எம்.பியை அவர்கள் சுட வந்தார்கள் என்று புதிதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது வெறும் பொய். சுமந்திரன் எம்.பியைக் கொல்வதற்கு, அவர்களுக்கு ஒரு நோக்கமும் இல்லை.

அவருடைய பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே, இவ்வாறான புரளியொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நடந்திருக்கிறது? 6 போராளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மஹிந்த அரசாங்கம் இருக்கையில், 12ஆயிரம் போராளிகளையும் புனர்வாழ்வளித்து வெளியே விட்டோம். அத்தனை போராளிகளும் இன்று கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது, சுமந்திரனைப் போன்றவர்களின் புரளிகளால், போராளிகளுக்குப் பிரச்சினை வந்திருக்கிறது.

அவர்களை முன்நிறுத்தி, அவர்களுக்கு, அரசியலில் நல்ல வாய்ப்பினைக் கொடுக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் இருக்கும் ஜே.வி.பியினரும் த.தே.கூ.வினரும், போராட்டத்தில் களமிறங்கியவர்கள் தான். அவ்வாறிருக்கையில், இவர்களை மாத்திரம் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்.

கே: இன்னமும் விடுவிக்கப்படாதிருக்கும் அரசியல் கைதிகள் குறித்து?

ப: அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேநேரத்தில், நீதித்துறையினை மதிக்க வேண்டும். நானும் கைது செய்யப்பட்டேன். ஆனால் நீதிமன்றத்தினை மீறி வரமுடியாது. பாரிய குற்றச்சாட்டுகள் என்கிற ரீதியில், கொஞ்சக் கைதிகள் தான் இருக்கிறார்கள். எதுவித தொடர்புமில்லாது ஆதரவாளர்களாக இருந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும்.

கே: காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் இலங்கையில் பூதாகாரமாக இருக்கிறது. அது தொடர்பிலான நடவடிக்கைகள் பற்றி?

ப: தனிப்பட்ட முறையில் கூறுவதென்றால், காணாமற்போனோர் விடயத்துக்கு, அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்று கூறவேண்டும்.

கே: முகாம்களில் இருப்பதாகச் சொல்லப்படுவது பொய்யா?

ப: சில அரசியல்வாதிகள், ஹம்பாந்தோட்டையில் 2000 பேருடன் முகாம் இருக்கிறது, அநுராதபுரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது, முற்றிலும் தவறான தகவல்.

கே: அரசியல் தீர்வு விடயத்தில், உங்களது கட்சியின் நிலைப்பாடு?

ப: கொள்கை ரீதியாகப் பார்க்கையில், வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில், அது சிறந்த முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. காலம் கூட இருந்தாலும், 13ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றங்களைச் செய்து, அதனை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் தான் எங்களது கொள்கைப் பிரகடனம் இருக்கும்.

ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில், 13க்கு மேலும் கொடுப்பேன் என்று, பலமுறை பேசியிருக்கிறார். அதனை த.தே.கூ தவற விட்டுவிட்டது. அண்மையில் சம்பந்தன் ஐயா, 70 வருடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷ உதவி செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

இப்போது இதனை உணர்ந்து கொண்ட அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும் போது, ஏன் அதைக் கேட்கவில்லை. அதனை அன்று கேட்டு, மஹிந்த அரசாங்கத்துடன் கைகோர்த்திருந்தால், சிறந்ததொரு தீர்வைப் பெற்றிருக்கலாம். இப்போது, குழம்பிய குட்டை போல நாடாளுமன்றம் இருக்கிறது.

கே: ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம், நீர்த்துப்போவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றனவே?

ப: ஐ.நா, இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான உதவியையும் செய்யப்போவதில்லை. ஏனென்றால், ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக, 58 கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தன.

அது ஒரு சமிக்ஞை. அதில், இலங்கை அரசாங்கம் வெல்ல வேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கொடுத்தாக வேண்டும். அதன்மூலமாகவே, சர்வதேசத்தினை வெல்லக்கூடியதாக இருக்கும். இல்லாதுபோனால், உள்ளேயே தீர்க்கவேண்டும். இல்லையேல், தொடர்ந்தும் ஐ.நா எதிராகவே இருக்கும்.

அடுத்தது, சர்வதேச விசாரணை. இது ஒரு சிக்கலான விடயம். சர்வதேச விசாரணையினைக் கொண்டுவரும்படி, எல்லோரும் சொல்கிறார்கள். அதன்மூலம் என்ன நடக்கப்போகிறது என்பதனை, நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். என்ன நடக்கப்போகிறது? இதில், யார் குற்றவாளி? இறைமையுள்ள ஓர் அரசாங்கம், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் போரிட்டிருக்கிறது.

அவர்களை, பயங்கரவாத இயக்கமாக உலகம் அறிவித்திருக்கிறது. இரண்டு பக்கமும் போர்க்குற்றம் இருக்கிறது என்று ஜெனீவா அறிவித்திருக்கிறது என்று பார்க்கும் நேரத்தில், ஒரு சிக்கலை உருவாக்கலாம். இப்போது இந்த நாட்டுக்குத் தேவையானது, தேசிய நல்லிணக்கமாகும்.

இந்தத் தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் தான் நாம் கவனம் எடுக்க வேண்டும். அதற்கான சூழல் ஏற்படாத வகையில், பிரச்சினைகளைக் கொண்டு வருவதன் மூலம், இனக்குரோதம் வளர வாய்ப்பு உருவாகும். என்னைப் பொறுத்தவரையில், அழிந்தது அழிந்ததுதான், ஆனால், மீண்டும் ஓர் அழிவு வராமல் பார்க்கவேண்டிய பொறுப்பு, எங்களது அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.