21 பெப்ரவரி.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சியின் குறியீடான “மல்கம் எக்ஸ்” இன் நினைவு தினம்.
*
கடைசிக் காலத்தில் சதா தொலைபேசி மிரட்லுடன் தனது மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மல்கம் எக்ஸ் இதே நாளில் (1965) மேடையில் வைத்து கொடுரமான முறையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரது மூன்று குழந்தைகள், மனைவி முன்னிலையில் அவர் மரணமானார். 40 வயதை எட்டிப்பிடிக்கும் காலத்தில் அவர் வாழ்வு பறிக்கப்பட்டது. 22000 பேர் அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தினர். 21 வயதில் பூச்சியத்திலிருந்து தொடங்கிய அவரது இனவொதுக்கலுக்கு எதிரான அரசியல் முப்பத்தொன்பது வயதில் இந்தளவு அபரிதமான வளர்ச்சியைக் கண்டது வியப்பூட்டுகிறது. வீதிகள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஒலித்த அந்த கலகக் குரலை மரணம் அடக்கியது.அவர் இன்னும் கொஞ்சக் காலமாவது வாழ்ந்திருக்கக்கூடாதா என கறுப்பின மக்கள் ஒவ்வொருவரும் ஏங்கினர். கதறி அழுதனர்.
நாம் காந்தியை தெரிந்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சுபாஸ் சந்திரபோஸினை தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. வெள்ளையர்களுடன் சமவுரிமைக்காக குடியுரிமைக்காக அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கினை அறிந்திருக்குமளவிற்கு வெள்ளைக் கருத்தியலின் எதிர்மறுப்பாளனாக கலகக்காரனாக வெளிக்கிளம்பிய மல்கம் எக்ஸ் இனை நாம் தெரிந்துவைத்திருக்கவில்லை.
எப்போதுமே ஒரு தலைவன் ஒரு இயக்கம் என்ற பரிமாணத்துள் -அதன் பக்க பலங்களை புறந்தள்ளி- விளக்க முயலும் மனோபாவமும், தீவிர அரசியலின் போக்கை நிறுத்த மிதவாத அரசியலை முன்நிறுத்தியவர்களை அங்கீகரிக்க வைக்கும் முதலாளிய சூழ்ச்சியும் எமது புரிதல்களை மட்டுப்படுத்திவிடுகிறது. அவலம் என்னவெனில் இந்த மிதவாதத் தலைவர்கள்கூட அதிகார சக்திகளின் நலன்களுக்கு ஏற்பவே எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டு பிம்பமாக இருத்தப்பட்டிருப்பதுதான். காந்தி குறித்தும் மார்ட்டின் லூதர் கிங் குறித்தும் இதுவே நடந்தது. அவர்களை அதிகாரசக்திகள் தாமே எம்மை விடவும் கொண்டாடுகிறதான செற் அப்பில் வைத்திருக்கிறார்கள்.
ஒரு தலைமுறைக் காலம்வரை கறுப்பு அடிமைப் பெண்களை அவர்களுடைய வெள்ளை எசமானர்கள் பாலியல் அடிமைகளாக நடத்தியதில் தமது சொந்த குடும்பப் பெயர்கள் என்னவென்று தெரியாத – மூளைச்சலவை செய்யப்பட்ட- சந்ததி உருவாகியது. இந்தக் கலப்பினத்தின்மீது வெள்ளையர்கள் தங்கள் குடும்பப் பெயர்களைத் திணித்தார்கள். இதனால் ‘லிற்றிள்’ (Little) என்ற தனது “குடும்பப் பெயரை” எக்ஸ் (X) என்று மாற்றிக்கொண்டு மல்கம் எக்ஸ் ஆனவர். தங்களால் அறிந்துகொள்ள முடியாத தங்களுடைய ஆபிரிக்கக் குடும்பப் பெயராக எக்ஸ் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.
கறுப்பின மக்களுக்கென சேரிகளை உருவாக்கி பெரிய பெரிய விசயங்கள்மீது அவர்கள் ஆசைகொள்ள முடியாத அளவிற்கு ஒரு நிர்ப்பந்தமான சூழலில் வெள்ளையர்கள் அம் மக்களை வைத்திருந்தார்கள். ஒவ்வொருநாளும் உயிர்வாழ்வதே அரிதான விசயமாக இருக்கும் ஒரு சமூகத்தில் பிழைத்திருப்பதே மதிக்கப்பட வேண்டிய விசயமாக இருந்தது என்ற மல்கத்தின் கூற்று கறுப்பின சேரிகளை படம்பிடிப்பதாகும்.
இவ்வாறான ஒரு சேரிப்புற சூழலுள் நிறவெறியை தனிநபர் மனநிலையிலும் வாழ்வதற்கான போராட்டமாகவும் ஒவ்வொரு கறுப்பு மனிதஜீவியும் கடக்க வேண்டியிருந்தது. தமது வாழ்வாதாரத்தை பெற களவு, அடிதடி போன்ற கிரிமினல் வேலையில் ஈடுபடவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். தம்மீதான இழிவுபடுத்தல்களின் கோபம் வெளிக்கிளம்புகிற கொந்தளிப்பான முரட்டு மனிதர்களாகவும் அவர்கள் வாழவேண்டியிருந்தது. இதன் ஒரு வகைமாதிரியாகவே மல்கம் உம் இருந்தார். அவர் சமூகம் குறித்த எந்தக் கூட்டுப் பிரக்ஞையோ நிறவெறி குறித்து கோட்பாட்டுப் புரிதலோ அற்றவராகவே இருந்தார்.
கிரிமினல் நடவடிக்கைக்காக அவர் 17 வயதில் சிறைவாழ்க்கையை அனுபவித்தார். அடுத்த நான்கு வருடத்துள் சிறைவாழ்க்கையில் அவரது வாழ்க்கைப் பாதையில் ஒரு முறிவு (தீவிர மாற்றம்) ஏற்பட்டது. சிறையில் “நேசன் ஒப் இஸ்லாம்” அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது. நிறவெறி குறித்தான மல்கத்தின் பார்வை முகிழ்க்கிறது. புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறார். இந்த குறுகிய நான்கு வருடங்களில் மல்கத்துக்குள் உறங்கியிருந்த ஆற்றல் வெளிக்கிளம்பத் தொடங்குகிறது. ஒரு தலைமைக்குரிய ஆளுமையோடு அவரது நிறவெறிக்கெதிரான பயணம் தொடங்குகிறது.
தலைவர்கள் என்றால் சிறுவயதிலேயே ஞானம் கொண்டவர்களாக, அசாதாரண பிறவிகளாக, ஒழுக்க விழுமியங்களை சிரமேல்கொண்டு வளர்ந்தவர்களாக உருவகிக்கப்படும் வரலாறுகளை நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். நடுத்தர வர்க்கங்களிலிருந்து உருவாக்கப்பட்ட தலைவர்களின் வரலாறுகளைப் படித்து உணர்ந்த மனநிலையில் மல்கம் எக்ஸ் இனைப் புரிந்துகொள்வதில் பல இடர்ப்பாடுகள் வந்து சேரும். 17 வயதுவரையான அவரது “பொறுக்கி” வாழ்வு கற்றுத் தரப்பட்ட எமது ஒழுக்கமதிப்பீடுகளுக்குக் குறுக்கே வருவன. அதேபோல் அவரது முஸ்லீம் மதமாற்றம் அல்லது மதநம்பிக்கை சோசலிச புரட்சி மதிப்பீடுகளுக்குக் குறுக்கே வருவன. (வெள்ளைக் கருத்தியலின் ஓர் எதிர்மறுப்பாகவும் மனிதர்களை மதிக்கிற சகோதரத்துவ கோட்பாட்டின் மீதான ஈர்ப்பிலும் அவர் முஸ்லிம் மதத்தில் சேர்ந்தார்.)
சேரியில் வாழும் கறுப்பன் வெள்ளை அதிகார அமைப்பிற்கு மரியாதை காட்டுவதில்லை. சேரி அடியாள் மனத்தளவில் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனுக்கு மதம் இல்லை. ஒழுக்கவிழுமியங்கள் குறித்து எந்தக் கருத்தும் அவனிடம் இல்லை. குடியுரிமை சார்ந்த பொறுப்புணர்வும் அவனிடம் இல்லை. அச்சம் இல்லை. எதுவும் இல்லை. அன்றாடம் வாழ வேண்டும் என்பதற்காக மற்றவர்களை ஏமாற்றியபடி அலைந்து திரிவான். மனித பலவீனங்களை ஒரு வேட்டைநாய் போல நுணுக்கமாக மோப்பமிடுகிறான். எந்தநேரத்திலும் வெறுப்பிலும் பதற்றத்திலும் ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்ற கவலையிலுமே இருக்கிறான். எதைச்செய்தாலும் அதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறான்… என மால்கம் இச் சூழலை விரித்துக் காட்டினார்.
அவரின் ஆரம்பகால வாழ்க்கையும் இதற்குள் சுழன்றதுதான். இதற்குள்ளிருந்துதான் ஒரு கொந்தளிப்பான மனிதனாக மல்கம் எக்ஸ் உருவானார். மல்கம் சிறுவயதாக இருக்கும்போது, கிறிஸ்தவ மதபோதகரான அவருடைய தந்தை வெள்ளை நிறவெறி அமைப்பான Ku Klux Klan இனால் படுகொலை செய்யப்பட்டவர்.
அமெரிக்காவிலேயே மிகக் கோபக்கார நீக்ரோ என்று வர்ணிக்கப்பட்ட மல்கம் தான் வன்முறையைத் தூண்டுபன் என்ற குற்றச்சாட்டை மறுக்கும்போது கூறுகிறார் “சேரிகளின்மீது திணிக்கப்பட்டுள்ள வாழ்நிலை (வேலையின்மை, மோசமான இருப்பிடங்கள், குறைவான கல்வி, அடையாளமின்மை… என்பன) ஒரு அபாயகரமான கிரிமினல் சூழல். இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு யாரும் நெருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னுள்ளிருந்து தானே தன்னியல்பாக எரியும் என்றார். அப்படி பற்றிப்பிடித்த ஒரு தீப்பொறியாக மல்கம் எக்ஸினை நாம் காண்கிறோம்.
எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த மால்கம் ஒரு பதினெட்டு வருட நிறவெறி எதிர்ப்பு அரசியலில் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றார். அடியாள் உலகுக்குத் தேவையான தன்மானம், துணிச்சல் என்ற பண்புகளையெல்லாம் தனது நிறவெறிக்கெதிரான குரலுடன் திசைதிருப்பினார். பத்திரிகையாளர்கள் அவரது பதில்கள் வெடிகுண்டுகளாக எதிர்க்கேள்விகளாக வந்துவிழுவதை எதிர்கொள்ளும் பதட்டத்துடனேயே இருப்பர். ஒரு கலவரத்தைத் தூண்டும் வல்லமையும் அதேபோல் ஒரு கலவரத்தை நிறுத்தும் வல்லமையும் கொண்ட ஒரேயொரு தலைவர் மல்கம் என்று பத்திரிகைகள் எழுதுமளவிற்கு நெருப்பாய் நடமாடினார்.
பத்துக் கோடிக்கும் அதிகமான கறுப்பின மக்கள் (அதாவது 1930 இன் அமெரிக்க சனத்தொகைக்கு சமமானவர்கள்) அடிமை வியாபாரத்தின்போது கொல்லப்பட்டார்கள். அதாவது பத்துக் கோடி கறுப்பர்களை பலி கொடுத்து ஒன்றரைக்கோடி கறுப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தார்கள். 60 களில் நிலவிய இனவொதுக்கல் முறையில்கூட கல்வி வேலைவாய்ப்பு என்பவற்றில் முன்னுக்கு வராதபடி தடுக்கப்பட்டிருந்தனர். பஸ்களில் வெள்ளையர்கள் ஏறும்போது கறுப்பர்கள் எழுந்து இடம்கொடுக்க வேண்டும். இது சட்டத்தில் ஏற்கப்பட்டுமிருந்தது. வெள்ளையர்களின் வீதிகளில் அனுமதியின்றி நடமாட தடுக்கப்பட்டிருந்தார்கள்.
தானே உருவாக்கிக்கொண்ட வீண் தற்புகழ்ச்சிகளை தனக்குப் பலியானவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை என்பதைக் கண்டுகொள்ளும்போது அதிர்ச்சியில் தள்ளாடும் அளவிற்கு வெள்ளையன் தன்மீது தானே தீவிரமாக அன்பு செலுத்தி வந்தான். மறுபுறத்தில் கறுப்பின மக்கள் தாழ்வுச் சிக்கலில் அகப்பட்டுப்போய் இருந்தார்கள். இந்த இரு எதிரும் புதிருமான உளவியல் தளங்களை அடித்து நொருக்குவதில் மல்கம் தீவிரமாகச் செயற்பட்டார். இதன் சிதைவிலேயே மார்ட்ன் லூதர் கிங் முன்வைத்த சகோதரத்துவம், ஒன்றிணைவு என்பன சாத்தியப்படவும் அர்த்தப்படவும் முடியும்.
ஓர் ஒடுக்குமுறையானது அதன் சகல பரிமாணங்களோடும் செயற்படுவதற்கு ஒடுக்குமுறையாளர்களின் கருத்தியலை ஒடுக்கப்படுவோர் ஏற்றுக் கொள்ளச் செய்வது முன்நிபந்தனையாகிறது. இது பெண் ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, நிறவாத ஒடுக்குமுறை, காலனிய ஒடுக்குமுறை எதுவானாலும் இந்த பொறிமுறை சூழ்ச்சிகரமாக ஆதிக்க அல்லது அதிகார சக்திகளின் புத்திசீவிகளால் நுழைக்கப்படுகிறது. இந்தப் பாதையின் குறுக்கே ஒடுக்கப்படுவோர் தடைகளை ஏற்படுத்தும் போது -இன்னொரு வகையில் சொன்னால்- இதுகுறித்து கேள்வியெழுப்பும்போது, அடங்க மறுக்கும்போது, முஸ்டியை உயர்த்தும்போது அங்கு அதிகார சக்திகளால் வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு வன்முறை உக்கிரம் கொள்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஆதிக்க சக்திகளினது கருத்தியில் தகர்வு ஏற்படுகிறது என்பதே அர்த்தமாகும்.
இதை அமெரிக்காவில் கறுப்பின மக்களும் எதிர்கொண்டார்கள். மார்ட்டின் லூதர் கிங் அகிம்சை வழியில் முன்னெடுத்த போராட்டங்கள் எல்லாமும் ஆட்சியாளர்களின் வன்முறையை எதிர்கொண்டன. கொலைகள், கைதுகள், சித்திரவதைகள், அவமானப்படுத்தல்கள் என எல்லாமும் பேயாட்டம் ஆடின.
“சிந்தனை மீதும் சமூகங்கள் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நான் கடுமையாக எதிர்க்கிறேன். தன்னுடைய அறிவால் உணரும் எந்தவொரு விசயமும் அறிவுபூர்வமானது என்று நம்புவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு என்பதை நான் மதிக்கிறேன். இதேபோன்ற உரிமையை என் விசயத்திலும் ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும்.” என்றார் மல்கம்.
இக் காலப் பகுதியில் வியட்நாமின் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை தீவிரமாக எதிர்த்தார். வியட்நாம் போரை எதிர்த்த முதல் தலைவர் மல்கம் எக்ஸ். அதுமட்டுமல்ல உள்நாட்டில் கறுப்பின மக்களை இனவொதுக்கிக் கொண்டு இராணுவத்தில் கறுப்பினத்தவரையும் சேர்த்து – அமெரிக்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவது என்ற பெயரில்- தொடுத்த இந்த யுத்தத்தை அம்மணமாக்கிக் காட்டினார்.
நேசன் ஒப் இஸ்லாம் அமைப்பிலிருந்து வெளியேறியபின் “முஸ்லிம் மசூதிகள் கூட்டமைப்பு” என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் “ஆபிரிக்க அமெரிக்கர்களின் ஒற்றுமை அமைப்பு” (ஓ.ஏ.ஏ.யூ) என்ற அமைப்பை மதச்சார்பற்றதாக உருவாக்கினார். இது மனித உரிமைகளை அடைவதற்காக ஆக்கபூர்வமான திட்டத்தின்கீழ் ஆபிரிக்க அமெரிக்கர்களை ஒன்றுதிரட்டுகின்ற குறுகிய கண்ணோட்டம் இல்லாத ஓர் அமைப்பாகும் என்று அறிவித்தார்.
இந்த மாற்றங்கள் அவரது அனுபவங்களிலிருந்தும் கோட்பாட்டு புரிதல்களிலிருந்தும் நிகழ்கிறது. மதத்தின் தளையிலிருந்து அவர் விடுபடுகிறார். விமர்சிக்கிறார்.கறுப்பின மக்களது அதிகாரத்தைக் கட்டமைத்தல், கறுப்பின மக்களின் சுயமரியாதை, பொருளாராத மேம்பாடு, அரசியல் ரீதியலான அணிதிரளல்.. இவற்றுக்குக் கீழ் எல்லா அமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்று விரும்பினார்.
இந்தப் போக்கு “நேசன் ஒப் இஸ்லாம்” அமைப்பின் பகையுணர்வைச் சந்தித்தது என்பதற்கு மல்கத்தின் கொலை சம்பந்தமாக -அதன் வழிகாட்டி- எலிஜா முகமது சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்து சாட்சியமளிப்பதோடு, மனிதாபிமான அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட முடியாததும் ஆகும். அத்தோடு இந்தக் கூற்றானது கொலையில் நேசன் ஒப் இஸ்லாமையும் சந்தேகிக்க வைத்ததில் வியப்பில்லை.
“அவருடைய முட்டாள்தனமான போதனையே அவருக்கு மரணத்தைக் கொண்டுவந்தது. எனக்கும் உங்களுக்கும் அல்லா அனுப்பிவைத்த நல்ல விசயங்களை பைத்தியக்காரர்கள் நாசம் செய்வதை நான் அனுமதிக்கப் போவதில்லை.” என்பதே அக் கூற்று.
கைதேர்ந்த கொலைகளை செய்வதன் மூலம் அரசியல் போக்குகளைக் கட்டுப்படுத்தும் CIA, FBI என்பனதான் இதைச் செய்தது அல்லது சூத்திரதாரியானது என்று கூறப்படுகிறது. “கறுப்பின மீட்பரின் எழுச்சியை உடனடியாக நாம் நிறுத்தவேண்டும்” என FBI உயரதிகாரி எட்கார் கூவர் தனது கீழதிகாரி ஒருவருக்கு கடிதம் எழுதியிருந்தார் என பின்னாளில் தெரியவந்தது. மல்கம் எக்ஸ் இனைப் பற்றி எப்.பி.ஐ உளவுதெரிந்து வைத்திருந்த ஆவணங்கள் 44 ஆயிரம் பக்கங்களைக் கொண்டது. அவரது கொலையுடன்தான் இந்த ஆவணம் பூர்த்திசெய்யப்பட்டது.
ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்த சிஐஏ யோ, நேசன் ஒப் இஸ்லாம் அமைப்போ தத்தமக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மல்கத்தின் இருப்பை விரும்பியிருக்கவில்லை. இந்த நிலைமை மல்கத்தின் கொலைச் சூத்திரதாரிகளை இன்றுவரை அடையாளம் காண முடியாதபடி மங்கலாகவே விட்டுவைத்திருக்கிறது.
லண்டன் பத்திரிகையாளர் கூட்டத்தில் மல்கத்தின் மரணம் கறுப்பர் இயக்கத்திற்கு ஒரு பின்னடைவு என்று சொன்ன -எழுத்தாளரும் நாடகாசிரியருமான- ஜேம்ஸ் பால்ட்வின் வெள்ளையினப் பத்திரிகையாளர்களைச் சுட்டிக்காட்டி “நீங்கள்தான் இதற்குக் காரணம்…யார் இதைச் செய்திருந்தாலும் இது உருவானது மேற்குலகின் உலைக்களமான அமெரிக்கக் குடியரசில்தான். ஆபிரிக்காவை ஐரோப்பா ‘கற்பழித்ததால்தான்’ இனச்சிக்கல்கள் உருவாயின. மல்கத்தின் முடிவு அங்குதான் தொடங்கியது.” என்றார். ஆம், மனிதகுலம் இருக்கும்வரை இந்தக் குரலுக்கு அர்த்தம் இருந்துகொண்டே இருக்கும்.
வரலாறுகள் தனிமனிதர்களால் அல்லது தனி அமைப்புகளால் வடிவமைக்கப்படுவதில்லை. கறுப்பின மக்கள் மத்தியில் அங்கும் இங்குமாக பல அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. மார்ட்டின் லூதர் கிங் இன் போராட்டங்களும் முனைப்பாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான் மல்கம் எக்ஸ் உம் களத்தில் இருந்தார். இருவருக்கும் இடையில் கொள்கையளவில் உடன்பாடு இருக்கவில்லை. ஆனாலும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் நிலையிலும் இல்லை. மார்ட்டின் லுதார் கிங் அகிம்சாவாதி. கத்தோலிக்க மதபோதகராக இருந்தவர். அத்தோடு வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்த Black Panther என்றஅமைப்பும் இன்னொரு போராட்ட சக்தியாக இருந்தது. மல்கம் எக்ஸ் இன் எதிர்மறுப்புகளால் ஆதர்சமடைந்த இளைஞ்களின் ஒரு பகுதி இவ் அமைப்புக்குள் சேர்ந்துகொண்டு செயற்பட்டனர்.கறுப்பின கலைஞர்கள் இசையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களை விழிப்புறச் செய்தனர். வாழ்வின் மீதான நம்பிக்கைகளையும் உந்துதலையும் ஏற்படுத்தினர்.
மார்ட்டின் லூதர் கிங் வெள்ளையினத்தவரோடான சகோதரத்துவத்தைக் கோரினார். சமவுரிமையைக் கோரினார். குடியுரிமையைக் கோரினார். மல்கம் இவைகளைச் சாத்தியப்படுத்தக்கூடிய நுண் அரசியலுக்குள் ஒரு கலகக்காரனாக செயற்பட்டார். நீக்ரோக்களின் உருவாக்கம், கறுப்பு-வெள்ளை என்பதன் அரசியல், மூலமனிதன் பற்றிய ஆய்வுகளை முன்நிறுத்தியமை, சிந்தனையின் வெள்ளை மயமாக்கலை அடையாளம் காட்டியமை, நிறவாத மொழியுருவாக்கங்களை அடையாளம் காட்டி எதிர்த்தமை (black day, blackmail,black money…etc.)போன்றவை அடிமை மனோபாவத்தினை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த கறுப்பின மக்களை தன்நம்பிக்கை கொண்டவர்களாகவும் சுயமரியாதை கொண்டவர்களாகவும் நிமிர்த்தியது. உரிமையைக் கேட்டுப் பெறுவது என்ற நிலையிலிருந்து அதை தாமாகவே எடுத்துக் கொள்வதற்கான போர்க்குணத்தை வழங்கியது.
வெள்ளையர்களோடு சமவுரிமை பற்றிப் பேசுவதற்கு, முதலில் கறுப்பினத்தவர் தம்மை அந்த மேசையில் சமமாக உட்கார்ந்து பேசுவதற்கான உளவியல் சமநிலையை தம்மளவில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மல்கம். அதனடிப்படையில் செயற்பட்டார். கிங் சமவுரிமைக்கான அரசியல் தளத்தில் பேச்சுவார்த்தைகளையும் அதை நிர்ப்பந்திக்கிற வகையிலான போராட்டங்களையும் செய்தார். இந்த இரு ஆளுமைகளின் செயற்பாடும் ஒன்றிணைந்து செயற்பட்டதால் அதன் அறுவடை கறுப்பின மக்களை -இந்தளவுக்காகவாவது- விடுதலை செய்தது. முக்கியம் என்னவென்றால் இருவருமே வெவ்வேறான பாதைகளில் பயணித்தபோதும் இரு பாதைகளும் ஒத்திசைய நடந்துகொண்டதுதான். கொந்தளிப்பான நிலையில் இருந்த கறுப்பின மக்களின் மனநிலை தீப்பற்றிக் கொள்கிற மனநிலையில் இருந்தபோதும் அதை அவர்கள் ஓர் கட்டுக்குள் வைத்தபடி, அதை துஸ்பிரயோகம் செய்யாதபடி பயணித்தனர். தலைமைக்குரிய ஆளுமை இங்கும் அவர்களிடம் வெளிப்பட்டது.
மல்கம் எக்ஸ் இன் இறுதிக்கால அரசியல் போக்கு இந்த போர்க்குணங்களை உள்வாங்கி இன்னொரு பரிமாணத்தை வழங்கிவிடக்கூடிய “ஆபத்தை” அமெரிக்க உளவுப்படை சரியாகவே கணித்தது. சம காலத்தில் நேசன் ஒப் இஸ்லாம் அமைப்பின் பகையையும் மல்கம் சம்பாதித்திருந்தார். மல்கம் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறினார் மார்ட்டின் லூதர் கிங். அவரும் மூன்று ஆண்டுகளின்பின் கொலைசெய்யப்பட்டார். மல்கம் கணித்திருந்ததுபோல எதிர்பார்த்ததுபோல மல்கத்தின் மரணம் முந்திக்கொண்டது.
எடுத்த எடுப்பிலேயே அதிவேகமாக பிஸ்ரலை உருவி குறிதவறாமல் சுடுகிற ஒரு ‘பொறுக்கி” மனிதனாக இருந்த இளைஞன் மல்கம் , கடைசியில் – மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும்- ஓர் அரசியல் ஆளுமை கொண்ட தலைவனாக இடுப்பில் துப்பாக்கி எதுவுமற்ற நிலையில் அமைதியாக குண்டுகளை எதிர்கொண்டு மரணமானார்.
குறுகிய காலத்தில் மிக வேகமான சிந்தனை மாற்றங்களை காட்டிபடி முன்னேறிக்கொண்டிருந்த ஓர் ஆளுமை மிக்க மனிதனின் மரணம் கறுப்பின மக்களை மட்டுமல்ல நிறவெறிக்கெதிராக நிற்கிற எல்லா சக்திகளையும் இன்றுவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியபடிதான் இருக்கிறது.
– ravindran pa
(முன்னர் (2015) எழுதிய குறிப்பினை சில திருத்தங்களுடன் இங்கு பதிவிட்டுள்ளேன்.)