சர்வதேச பெண்கள் தினம்

(சாகரன்)
பிறப்பிற்கு முன்பு தன் குழந்தையை கற்பத்திற்குள் சுமப்பவள் பெண். இதனால் தாயாக மதிக்கப்படுகின்றாள். இதன் தொடர்சியாக குழந்தையின் வளர்சிக்காக பிறப்பிற்கு பின்பும் சுமக்கின்றார் தான் பெற்ற பிள்ளைகளை. இந்த பிறப்பிற்கு சரிபாதி காரணமாக இருக்கும் ஆண் பிறப்பிற்கு பின்பு தன் குழந்தைகளை பெண் அளவிற்கு சுமப்பதில்லை. இதனை உலகம் பொது நியதியாக்கி பெண் மீதான மேலாதிக்கத்திற்கு அத்திவாரம் இடுகின்றது. தொடர்ந்து வரும் வாழ்க்கை பயணத்திலும் குடும்ப சுமையை சுமக்கும் உயிரினமாக மாற்றப்பட்டு சுதந்திரத்தை சமூகம் மறுக்கின்றது. இந்த ஆண் மேலாதிக்க சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பயணிப்பவள் தனது தேடலுக்காக புறப்பட எத்தனிக்கும் போது ஏளனமாகப் பார்க்கப்படுகின்றார். மேலும் இந்தப் பார்வை பெண் குழந்தையாக இருக்கும் போதே ஆணை விடக் கீழானவள் என்ற கருத்தியலையும் ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் உரித்தானது என்று சமூக கட்டுப்பாடு, மதக்கட்டுப்பாடு என்றும் தடை போட்டு நியாயப்படுத்த முயலுகின்றது.

பொருளாதார சமத்துவம் இல்லாத வேலை வழங்கலும் பெண்களுக்கு தொடர்ந்து உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி குடும்பத்திற்கான தலமைத்துவத்தையும் நிறுவனங்களுக்கான நிர்வாகப் பொறுப்புக்களையும், நாட்டிற்கான அரசியல் தலமைகளையும் இருபாலரிலும் தாம் சிறந்த செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்ற நிறுவல்களை பெண்கள் செய்தே வருகின்றனர்.

ஆண் மேலாதிக்க மனநிலை மாற்றமும் சமதர்ம உலக ஒழுங்கும் ஏற்படுத்தாத வரைக்கும் பெண்களுக்கான முழு சுதந்திரம் கிடைக்கப் போவதில்லை. இதற்கு இருபாலரும் இணைந்துதான் மாற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபடவேண்டும். குழந்தையை அடையாளப்படுத்தும் பெயர் சூட்டலில் தாயின் பெயரும் இணைந்திருத்தலே சரியானதாகும்.
போரிற்கு பிந்திய ஈழத்து தமிழ் சூழலில் போராட்ட குழுவில் இருந்தவர்கள் என்பதற்காக தள்ளி வைத்துப் பார்க்கும் மனநிலையும் தமது ஆண்களை இழந்த குடும்பத்து பெண்கள் தனித்தே குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய போராடவேண்டி சூழலும் போர் விட்டுச் சென்ற அவலங்கள். கூடவே தமது ஆசாபாசங்களை விலைக்கு வாங்க முற்படும் ‘உதவி’ களும் கழுகுப் பார்வைகளும் எமது சமூகத்தால் உணரப்படவேண்டிய விடயங்கள்.

இதில் தமிழ், சிங்களம் முஸ்லீம் ஏன் மலையகம் என்ற வேறுபாடுகள் இன்றி பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்பது நிதர்சன உண்மை. கேப்பாபுலவில் பெண்கள் முன்னிலையில் நின்று போராடியதும் இதில் மலையத்து அடியினைக் கொண்ட மக்களே அதிகம் அவலத்திற்குள் உள்ளாகியிருக்கின்றார்கள் என்பதும் புள்ளிவிபரம்? கூறும் உண்மை. போராட்டத்தின் தலமைத்துவம், உறுதியான செயற்பாடு, அரச இயந்திரத்தை ஆட வைத்த செயற்பாட்டிற்குமான வெற்றிகளை வேறு எவரையும் விட பெண்களே கொண்டாடத் தகுதியானவர்கள். இதனை எற்கும் மனைநிலையில் பல ஆண்களும் செயற்பட்டனர் என்பது ஒரு ஆரோக்கியமான நலமையே.

எனவே பெண்களுக்கான சுமைகளை நாம் புரிந்து கொள்ளல் என்பதிலிருந்து நாம் ஆரம்பிப்போம் இன்றைய சர்வதேச பெண்கள் தினத்தை.