“அப்படி விசாரிக்கும் போது, தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அவரது ஆட்சேபனை எதுவும் இல்லாமல், “தமிழ் துரோகிகளுக்கு இயற்கை மரணம் கிடையாது” என்று பேசிய அன்றைய தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர்களின் (மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் அன்றைய பிரபல தலைவர்கள்) உரைகள், எப்படி புலிகளின் மிக மோசமான அராஜகம் வரை இட்டுச் சென்றது என்பதை வரலாறு பதிவு செய்வதுடன், சுமந்திரன் இன்று அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்.
ஏனெனில், தமிழ் மக்களை வகைதொகையில்லாமல் கொன்று குவித்த அந்தப் புலிகளைத்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என திரும்பத்திரும்பப் பிரகடனப்படுத்தி வந்துள்ளது. அந்தக் கொலைகாரர்களை அங்கீகரித்து நியாயப்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எவ்வாறு தம்மைவிடக் குறைவான குற்றங்களைப் புரிந்த கருணாவையோ, பிள்ளையானையோ நோக்கி விரலை நீட்டுவதற்குத் தார்மீக உரிமை இருக்க முடியும். அதுவும் அவர்கள் புலிகளை ஆதரித்த காலத்தில்தான் அதிகமான அராஜகங்களைப் புலிகள் செய்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிந்த பிறகு.
அதுமாத்திரமல்ல, ஜோசப் பரராசசிங்கத்தைக் கொலை செய்தவர்கள் பற்றிய விபரங்களை முன்னைய அரசாங்கத்திடம் கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பொழுது கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அப்படியானால் அவர்களது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான தங்கத்துரை. நிமலன் சௌந்தரநாயகம், கிங்ஸ்லி இராசநாயகம் ஆகியோரைக் கொலை செய்தவர்களைக் கைதுசெய்யும்படி இவர்கள் ஏன் கோரவில்லை. இவர்களில் ஒருவர் தேர்தலில் தோல்வியடைந்த ஜோசப் பரசாசாசிங்கத்தை பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்காகத்தான் கொலை செய்யப்பட்டார் என மக்கள் பேசிக்கொண்டார்களே? புலிகள் அவர்களைக் கொலை செய்தபடியால்தான் கூட்டமைப்பு அவர்கள் கொலை பற்றி வாய் திறக்கவில்லையா?
எனவே, குற்றவாளிக் கூண்டில் முதலில் ஏற்றப்பட வேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. ஆனால் அவர்கள் தாமே கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு மற்றவர்களை நோக்கி கல் வீசுவதுதான் வேடிக்கையானதாக இருக்கின்றது. அவர்களது இந்தச் செய்கை தவறானது மட்டுமல்ல, தற்கொலைக்கு ஒப்பானதும் கூட.”
(“Thursday, 29 October 2015
கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்! – சேதுபதி
ஒக்ரோபர் 26, 2015)