(ரவிக்குமார்)
மார்ச் 2ஆம் தேதி இரவு எட்டு மணி. கோபாலபுரம் – திமுக தலைவர் கலைஞரின் இல்லம். நானும் எமது கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களும் அங்கு போவது முதன்முறையல்ல. திமுக கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றிருந்தபோது அடிக்கடி அங்கு சென்று தலைவர் கலைஞரைச் சந்தித்து எத்தனையோ செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். எங்களை தமது உடன்பிறப்புகளாகவே கருதி திமுக-வின் உள்கட்சிப் பிரச்னைகளைக்கூட அவர் எங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொருமுறை அவரை சந்தித்துத் திரும்பும்போதும் ஏதாவது ஒரு புதிய செய்தியை, ஒரு அனுபவத்தை நாங்கள் உள்வாங்கி வந்திருக்கிறோம். இன்று, கோபாலபுரம் இல்லத்தில் நுழையும்போது தலைவர் கலைஞரை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியைவிட, அவர் எப்படி இருக்கிறாரோ என்ற தவிப்புதான் என் உள்ளத்தில் மேலோங்கியிருந்தது.
தலைவர் கலைஞர் உடல் நலிவுற்று, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நாங்கள் அவரை பார்க்கப் போயிருந்தோம். அவர் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை அங்கிருந்த திமுக மூத்த தலைவர்களும், கனிமொழி அவர்களும் தெரிவித்தார்கள். அவரது துணைவியார் திருமதி ராஜாத்தியம்மாள் அவர்களுடன் நீண்டநேரம் பேசியிருந்துவிட்டுத் திரும்பினோம். நாங்கள் கேட்டிருந்தால் அன்றைய தினமேகூட தலைவர் கலைஞர் அவர்களைப் பார்ப்பதற்கு எங்களை அனுமதித்திருந்திருப்பார்கள். ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரைப் பார்ப்பது மருத்துவரீதியாக சரியல்ல என்பதால் நாங்கள் நலம் விசாரித்ததோடு திரும்பிவிட்டோம். கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் எனது மகன் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுப்பதற்கு நான் மட்டும் வந்திருந்தேன். அப்போது நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். அதன்பின்னர், இப்போதுதான் அவரை சந்திக்கச் செல்கிறோம். எனக்கு உள்ளமெங்கும் ஒருவித படபடப்பு. இது வழக்கமான சந்திப்பு அல்ல என்ற உள்ளுணர்வு.
மார்ச் 1ஆம் தேதி இரவு திமுக செயல்தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தநேரத்தில் தலைவர் கலைஞரைப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவரிடம் முன்வைத்தோம். ‘அதற்கென்ன நாளைக்கே பாருங்கள்’ என்று அவரும் அனுமதி வழங்கினார்.
மாடிப் படிகளில் ஏறி கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, வழக்கமாக எப்போதும் அவர் அமர்ந்திருக்கும் இடத்தில்தான் அன்றும் அவர் அமர்ந்திருந்தார். மேல் சட்டை அணியாமல் கைவைத்த மெல்லிய பருத்தி ஆடையும், வேட்டியும் அணிந்திருந்தார். தோற்றத்தில் பெரிதாக வேறுபாடு எதுவும் தெரியவில்லை. கொஞ்சம் மெலிந்திருந்தார் என்பது அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது. தொண்டைக்குழியில் குழாய் ஒன்று பொருத்தப்பட்டிருப்பது கவனித்துப் பார்த்ததால்தான் கண்ணுக்குப் புலப்பட்டது. எங்களை அழைத்துச்சென்ற திரு. மு.க.தமிழரசு அவர்கள், “அப்பா, யார் வந்திருக்கிறாங்க பாருங்க, திருமாவளவன் வந்திருக்கிறாரு, ரவிக்குமார் வந்திருக்கிறாரு” என்று அவரது தோளைத்தொட்டு கூறினார். பாதி உறக்கமும், பாதி விழிப்புமாக இருந்த தலைவர் கலைஞரின் தலை சட்டென்று திரும்பியது. நாங்கள் நின்றிருந்த பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். ‘‘அவர்களைத் தெரிகிறதா?” என்று திரு. தமிழரசு கேட்டதும், சட்டென்று அவரது முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. எங்களிடம் ஏதோ சொல்ல முற்படுவதைப்போல அவரது வாய் துடித்தது. தொண்டையில் குழாய் பதித்திருந்ததால் குரல் வெளிவரவில்லை. அவரது கையைப் பற்றியபடி நாங்கள் நின்றிருந்தோம். தலைவர் கலைஞரின் உதவியாளர் திரு. சண்முகநாதன் அவர்கள், ”ரெண்டு மூணு தரம் பாக்கணும்னு கேட்டாங்க. இன்னைக்குத்தான் வரச் சொன்னோம்” என்று அவரை நோக்கிச் சொன்னார். அப்போது அவரது முகம் குரல்வந்த திசை நோக்கித் திரும்பியது. சுமார் 15 நிமிடங்கள் தலைவர் கலைஞரோடு நாங்கள் இருந்தோம். அதன்பின்னர், அவரை ஓய்வெடுக்க விட்டுவிட்டு கீழே இறங்கிவந்தோம்.
கீழே அறையில் திருமதி. தயாளு அம்மாள் அமர்ந்திருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் சட்டென்று ‘திருமாவளவன்’ என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். “அய்யாவை போய் பார்த்தீங்களா? பேசினாரா?” என்று விசாரித்தார்கள். அவரிடம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தோம். “டிபன் சாப்பிட்டுட்டுப் போங்க” என்று வற்புறுத்தினார்கள். “பரவாயில்லை அம்மா” என்று எழுச்சித் தமிழர் சொன்னார். “காப்பியாவது குடிச்சுட்டுப் போங்க” என்று வற்புறுத்தி காப்பி கொண்டுவரச் சொன்னார்கள். காப்பி அருந்திவிட்டு எல்லோரிடமும் விடைபெற்று அங்கேயிருந்து வெளியேறும்போது சுமார் ஒரு மணிநேரம் ஆகிவிட்டிருந்தது.
திரும்பும் வழி நெடுக தலைவர் கலைஞர் அமர்ந்திருந்த தோற்றமே என் மனக்கண்ணில் ஓடியது. அந்த நாற்காலியில் அமர்ந்துதான் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்தார். அங்கே அமர்ந்தபடிதான் தமிழக அரசியலை மட்டுமின்றி, இந்திய அரசியலையே அவர் ஆட்டுவித்தார். அங்குதான் தமிழக மக்களுக்கான எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டன; அவசர நிலையை எதிர்ப்பதென்ற முடிவும், தமிழக நலன்களுக்கான உரிமைக் குரல்களும் அங்கிருந்துதான் எழுந்தன; இந்திய அரசியலில் கூட்டாட்சித் தத்துவம் வலுப்பெறுவதற்கு வழிவகுத்த ‘மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கம் வெடித்ததும் அங்குதான். இந்திய அரசியல் தலைவர்கள் எவரும் செய்திராத சாதனையாக இலக்கியம், அரசியல் என பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்ததும் அந்த நாற்காலியில் அமர்ந்தபடிதான். எதிரிகளும் வியக்கும் அந்த தன்னிகரில்லாத ஆளுமை இன்று முதுமையால் நிலைகுலைந்து நிற்கிறது.
தலைவர் கலைஞரின் உடல்நிலையில் பெரிய அளவு சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் சில நாட்களில் அவரது தொண்டையில் பதிக்கப்பட்டிருக்கும் குழாய் அகற்றப்பட்டால் பேசுவதிலும் அவருக்குத் தடை இருக்காது. மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதிலோ, நபர்களை அடையாளம் காண்பதிலோ அவருக்குக் குறையொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை சந்தித்தபோது மீண்டும் அவரது குரலைக் கேட்க முடியும்; அவரிடமிருந்து வரும் கூர்மையான அரசியல் விமர்சனங்களை மீண்டும் படித்து ரசிக்க முடியும் என்ற நம்பிக்கைதான் எனக்கு ஏற்பட்டது.
தலைவர் கலைஞர் எத்தனையோபேரின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். அதைவிடவும் அதிகமானவர்களால் பாராட்டப்பட்டிருக்கிறார். சுமார் 80 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அவர் காணாத ஏற்ற, இறக்கங்கள் இல்லை. கேட்காத வசைகளும், வாழ்த்துகளும் இல்லை. அப்படியானதொரு ஆளுமை முதலமைச்சராக இருந்தபோது அவர் பொருட்படுத்தும் அளவுக்கு கோரிக்கைகளை வைத்து, அந்தக் கோரிக்கைகள் அரசாங்கத்தின் செயல் திட்டங்களாக மாறியதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாது.
2006-11இல் நடைபெற்ற திமுக ஆட்சி பல்வேறுவிதமான விமர்சனங்களுக்கு ஆளானது. ஈழப் பிரச்னை தமிழகத்தை புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த காலம் அது. அப்போது மாநில ஆட்சியில் மட்டுமின்றி, மத்தியிலிருந்த ஆட்சியிலும் பங்கேற்றிருந்த காரணத்தால் மிக அதிகமான பழிகளை அவர் சுமக்க நேரிட்டது. திமுக-வின் அரசியல் பயணத்தையே நிலைகுலையச் செய்த ‘2ஜி’ ஊழல் குற்றச்சாட்டுகள் அப்போதுதான் எழுந்தன. இவை எல்லாவற்றையும் தாண்டி அவர், அடித்தள மக்களுக்காக ஆற்றிய சில அரும்பணிகள் எனக்கு முக்கியமாகப்படுகின்றன.
நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மற்றவர்கள் கவனிக்காத சில பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும், அவற்றில் ஒன்றிரண்டிலாவது வெற்றி கிடைத்தால் அதுவே மிகப்பெரிய சாதனைதான் என்று நினைத்துக் கொண்டேன். பேரவையில் நான் ஆற்றிய கன்னி உரையிலேயே சில பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். இந்தியாவிலேயே குடிசைகள் அதிகம் இருக்கிற மாநிலமாக தமிழ்நாடுதான் விளங்குகிறது என்பதை எடுத்துச்சொல்லி, குடிசையில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அகதி முகாம்களில் கைதிகளைப்போல கொடுமைப்படுத்தப்படும் ஈழத் தமிழர்களின் நிலையை எடுத்துச்சொல்லி அவர்களுக்கு உதவ முன்வரவேண்டுமென அரசை வற்புறுத்தினேன்.
ஈழத் தமிழ் அகதிகள் பிரச்னையில் எளிதாக தலைவர் கலைஞரின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. நான் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு அகதி முகாம்களைப் பார்வையிட்டு அறிக்கை ஒன்றைக் கொடுக்கும்படி கேட்டார். நான் அளித்த அறிக்கையில் முன்வைத்திருந்த பரிந்துரைகள் பெரும்பாலானவற்றை உடனடியாகவே நிறைவேற்றித் தந்தார். அதன் விளைவாகத்தான் ஈழத் தமிழ் அகதிகளின் பணக்கொடை இரு மடங்காக உயர்த்தப்பட்டது. திருமண உதவித் திட்டம், கருவுற்ற தாய்மார்கள் உதவித் திட்டம், முதியோர் உதவித் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் என அனைத்துவிதமான சமூக நலத் திட்டங்களும் ஈழத் தமிழ் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. அவர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டித்தருவதற்காக நூறு கோடி ரூபாயை தலைவர் கலைஞர் ஒதுக்கினார்.
குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கை மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்படுகிற ஒன்று என்பதால், அதை நடைமுறைப்படுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அந்தத் திட்டத்தை இடம்பெறச் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அந்த வாக்குறுதியை உடனடியாகவே நிறைவேற்றிட அவருக்கு ஊக்கம் அளித்தது. தமிழ்நாடெங்கும் இருந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக 21 இலட்சம் குடிசை வீடுகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறின. அவற்றை ‘கான்கிரீட்’ வீடுகளாக மாற்றி கட்டித்தருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ் முதல் வீட்டுக்கு நான் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட காட்டுமன்னார்கோயில் தொகுதியைச் சார்ந்த வல்லம்படுகை என்ற கிராமத்தில்தான் அடிக்கல் நாட்டப்பட்து. அப்போது துணை முதல்வராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து அங்கு அடிக்கல் நாட்டினார். ஒருசில மாதங்களிலேயே அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு அந்த திட்டத்தின்கீழ் முதல் வீடாக தலைவர் கலைஞர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த நிலையிலும் அதைத் திறந்து வைப்பதற்காகவே காரில் அவ்வளவு தூரம் பயணம் செய்து அந்த கிராமத்துக்கு வந்தார். முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் வந்த ஒரு சாமானியனான எனது கோரிக்கையை ஏற்றது மட்டுமின்றி, அந்த கோரிக்கையை எழுப்பிய எனக்கும் மதிப்புத் தரவேண்டும் என அவர் நினைத்தது சாதாரண விஷயமல்ல. தலைவர் கலைஞரே நேரில் வந்து அந்த வீட்டை திறந்துவைத்தது எனக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது.
2011ஆம் ஆண்டு, திமுக ஆட்சி முடிவடைவதற்கு முன்பு அந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் ஐந்து இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இப்போதும் தமிழ்நாட்டில் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே அந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகளை நான் பார்க்கிறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பயன்தரும்வகையில் பணியாற்றுவதற்கு தலைவர் கலைஞர் எனக்களித்த வாய்ப்பை எண்ணிப் பெருமிதம்கொள்கிறேன்.
நான் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஆறு நல வாரியங்களை அவர் உருவாக்கினார். அவற்றால் இலட்சக்கணக்கானோர் இப்போதும் பயனடைந்து வருகின்றனர். கட்சிக்காரர்களின் வாழ்த்து அவரைக் காக்கிறதோ – இல்லையோ, அவரது திட்டங்களால் பயன்பெற்ற ஏழை,எளிய மக்கள் மனம் குளிர்ந்து சொல்லும் வாழ்த்து அவரைக் காக்கும். அவர் 100 ஆவது பிறந்த நாளையும் ஆரோக்கியமாகக் கொண்டாடுவார்.
கட்டுரையாளர் குறிப்பு
ரவிக்குமார் – கவிஞர், மொழிபெயர்ப்பாளர், அரசியல், இலக்கிய விமர்சகர். ‘மணற்கேணி’ ஆய்விதழின் ஆசிரியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்.