தென் கொரிய நாட்டின் அதிபராக முதன்முதலாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் பார்க் கியுன் ஹை (வயது 65). பெண்ணான இவருக்கு சோய் சூன் சில் என்ற தனது நெருங்கிய தோழியின் வாயிலாக வினை தேடி வந்தது. இந்த சோய் சூன் சில், அதிபர் பார்க்கிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது அறக்கட்டளைகளுக்கு பல கோடி டாலரை முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழலில் பார்க் கியுன் ஹைக்கு நேரடி தொடர்பு இருந்தது; அதிலும் குறிப்பாக அவர் தனது அலுவலகத்தில் ஏற்கத்தகாத வகையில் தோழிக்கு சகல உரிமைகளையும் வழங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது.
பாராளுமன்றத்தில் தீர்மானம் இது தொடர்பாக அவரது பதவியை பறிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதிபர் பதவியின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அதிபர் பொறுப்பை நாட்டின் பிரதமர் ஹவாங் கியோ ஆன் தற்காலிகமாக ஏற்றார். இருப்பினும் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. பார்க் கியுன் ஹை பதவியை பறிக்கும் தீர்மானத்தின் மீது அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு விசாரணை நடத்தி வந்தது. அதிரடி தீர்ப்பு விசாரணை முடிந்த நிலையில், அரசியல் சாசன கோர்ட்டின் 8 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
பார்க் கியுன் ஹையின் பதவியை பறிக்க பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது செல்லும் என அந்த அதிரடி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டது. மேலும், “நாட்டின் விவகாரங்களில் பார்க் கியுன் ஹை தனது நெருங்கிய தோழி சோய் சூன் சில்லை அனுமதித்ததின் மூலம் சட்டத்தை மீறி உள்ளார். எண்ணற்ற ஆவணங்களை கசிய விட்டு, அரசாங்க ரகசியங்களை காப்பதற்கான விதிமுறைகளை மீறி உள்ளார். அவரது செயல்கள் ஜனநாயக உணர்வையும்,சட்டத்தின் ஆட்சியையும் பலவீனப்படுத்துவதாக அமைந்துள்ளது” என நீதிபதிகள் கூறி உள்ளனர்.
அது மட்டுமின்றி, “நாட்டின் விவகாரங்களில் தோழியின் குறுக்கீடுகளை பார்க் மறைத்து விட்டார்” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 60 நாளில் தேர்தல் இந்த தீர்ப்பினால் நாட்டின் அடுத்த அதிபரை தேர்ந் தெடுப்பதற்கு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தீர்ப்பை தொடர்ந்து பார்க் கியுன் ஹைக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடந்தன.
அரசியல் சாசன கோர்ட்டுக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பான சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர். தீர்ப்பை கேட்டு, அவரது ஆதரவாளர்கள் சிலர் அழுதனர். இன்னொருபுறம் பார்க் கியுன் ஹை பதவி நீக்கத்துக்கு ஆதரவாக மக்களில் ஒரு பிரிவினர் வீதிகளில் திரண்டு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிரிமினல் நடவடிக்கை இந்த தீர்ப்பினால், அதிபர் பதவி மூலம் கிடைத்து வந்த விலக்கு உரிமையை பார்க் கியுன் ஹை இழந்து விட்டார். அவர் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழி பிறந்துள்ளது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரே ஊழல் குற்றச்சாட்டுகளில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தென் கொரிய ஜனநாயகத்துக்கு கரும்புள்ளியாக அமைந்து விட்டது.