ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் நடந்தது. அந்த மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவான தேசியப் பிரச்சினை என்று ஏதும் இல்லை. அந்த ஐந்தில் ஒன்று உத்தர பிரதேசம் எனும்போது, இனி 2019 மக்களவைப் பொதுத் தேர்தல் எப்படி இருக்கும் என்ற விவாதம் தொடர்வது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட பெரிய மாநிலம் என்பதுடன் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது உத்தர பிரதேசம். இங்கு கிடைத்துள்ள வெற்றி பாஜக ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற இருதரப்புக்குமே மலைப்பாக இருக்கிறது.
பாஜக 312, அதன் தோழமைக் கட்சிகள் அப்னா தள் 9, சுஹால்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 4 என்று மொத்தம் 325 தொகுதிகளை வென்று, பேரவையில் நான்கில் மூன்று பங்கு இடங்களை வென்றுவிட்டன. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, இம்மாநிலத்தில் அரசியல் ஆதரவு அதிகம் மாறிவிடவில்லை என்பது தெரிகிறது. 2014-ல் மோடிக்கு ஆதரவு உச்சத்தில் இருந்தாலும், போகப்போகச் சரிந்துவிடும் என்று பலர் நினைத்ததைப் போல நடக்கவில்லை. 2014-ல் கிடைத்த வாக்குகள் உ.பி.யில் 43.6%-லிருந்து 41.4% ஆகவும் உத்தராகண்டில் 55.9%-லிருந்து 46.5% ஆகவும் குறைந்திருக்கிறது. 2015-ல் முக்கிய எதிர்க்கட்சிகள் பிஹாரில் பெரிய கூட்டணி அமைத்ததைப் போல இங்கே அமைக்கத் தவறியதால், பாஜக எளிதாக வெற்றி பெற்றிருக்கிறது. சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி, சமாஜ்வாதி கட்சிக்குள் நிகழ்ந்த குடும்பச் சண்டையால் பலன் தராமல் போய்விட்டது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2014-ஐ விட 2017-ல் 2.4% வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. 22.2% வாக்குகளும் 19 தொகுதிகளும் அதற்குக் கிடைத்துள்ளன.
ஆட்சியில் இருப்பதால் மக்களுக்கு ஏற்படக்கூடிய அதிருப்தி யிலிருந்து விடுபட கட்சியின் மூத்த தலைவர்களிடமிருந்து விலகினார் அகிலேஷ் யாதவ். கட்சி உடைந்ததால் ஆதரவு மேலும் குறைந்தது. சட்டம் – ஒழுங்கு நிலைமை மோசமானதற்குக் கட்சியின் மூத்த தலைமுறைதான் காரணம் என்ற அகிலேஷின் சமாதானத்தை மக்கள் ஏற்கவில்லை. தானும் ராகுல் காந்தியும்தான் இளம் தலைமுறையினரின் சரியான பிரதிநிதிகள் என அவர் சொன்னதும் எடுபடவில்லை.
பிஹாரைப் போன்ற மெகா கூட்டணி உருவாக வேண்டும் என்றால், அதில் பகுஜன் சமாஜ் கட்சியையும் இணைத்திருக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் தனக்கு ஆர்வம் இல்லை, தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் பார்க்கலாம் என்ற மாயாவதியின் நிலை அவருக்கே பெருத்த இழப்பை ஏற்படுத்திவிட்டது. சமாஜ்வாதியுடனும் பாரதிய ஜனதாவுடனும் வெவ்வேறு தருணங்களில் கூட்டணி வைத்த மாயாவதி, தலித்துகளுக்கும் அப்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளத் தன்னுடைய உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும். மொத்த வேட்பாளர்களில் நான்கில் ஒரு பகுதியினரை முஸ்லிம்களாக நிறுத்தியும்கூட, முஸ்லிம்களைத் தன் பக்கம் ஈர்க்க மாயாவதியால் முடியவில்லை.
பஞ்சாப் வாக்காளர்கள் வித்தியாசமாக வாக்களித்துள்ளனர். சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணியில் பாஜக சிறிய பங்காளிதான். 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால், மாநில அரசு மீது இயல்பாகவே மக்களுக்கு அதிருப்தியும் அசுவாரசியமும் ஏற்பட்டது. பாஜகவைவிட காங்கிரஸுக்கு பஞ்சாப் முக்கியமான மாநிலம். காரணம், அங்கே மாற்று சக்தியாக வர ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக முயன்றது. ஆஆகவிடம் காங்கிரஸ் தோற்றிருந்தால் அதன் விளைவு தேசிய அளவில் வேறு விதமாக இருந்திருக்கும்.
ஒரு காலத்தில் வலுவான தேசியத் தலைவர்களை அதிகமாகவும் வலுவற்ற மாநிலத் தலைவர்களையும் கொண்டிருந்தது காங்கிரஸ். இந்த நிலையைத் தலைகீழாக அது மாற்றியாக வேண்டும். தேசிய அளவில் ராகுல் காந்திக்கு ஈர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறது. மாநில அளவில் வலுவான தலைவர்கள் உருவானால்தான் வாக்குகளை ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும். பிற மாநிலங்களிலும் வெற்றிபெற, அமரீந்தர் சிங்கிடம் பாடம் படிக்க வேண்டும். பாஜகவில் அதிகாரமெல்லாம் ஒரேயொருவரிடம் குவிந்து கிடக்கிறது. இது மிகவும் ஆபத்தானது, விரும்பத்தகாதது. காங்கிரஸ் இதற்கு நேர்மாறாக நடந்துகொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தன்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாலும் சரி, மக்களிடையே இப்போது தேசியக் கட்சி என்றால் பாஜகதான் நினைவுக்கு வருகிறது. எனவே, பாஜகவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். கட்சி, ஆட்சி நிர்வாகத்தில் நல்ல அனுபவம் பெற்றுள்ள மோடிக்கு எதிராக மீண்டும் மீண்டும் ராகுலைக் கொண்டுபோய் நிறுத்தக் கூடாது.
மணிப்பூரில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீண்டும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியது. கோவாவில் பாஜகவுக்கும் அதே கதிதான். அத்துடன் முதல்வராக இருந்த பர்சேகரும் தோற்றார். மணிப்பூரில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைத்திருப்பது, வட கிழக்கு மாநிலங்களிலும் அரசியல் சூழல் மாறும் என்பதைக் காட்டுகிறது. கோவாவில் 5 ஆண்டுகள் பதவியிலிருந்த பிறகு, அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது என் ஏன்று பாஜக தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை மக்கள் ஏற்பதில்லை. பெரும்பான்மையைப் பெறாமல் இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்க பாஜக முயற்சிப்பது தார்மிக அடிப்படையில் தவறானது.
ஒட்டுமொத்தமாக இந்த முடிவுகளை ஆராயும்போது 2014-ல் மோடிக்குக் கிடைத்த ஆதரவு அதிர்ஷ்டகரமானது அல்ல என்று தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்வதுடன், பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்தும் செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(The Hindu)