எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆர். மனைவி என்றாலும், எம்.ஜி.ஆருக்குப் பின் அவரைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தோற்கடிக்கப்பட்டார். ஜெயலலிதா 21 தொகுதிகளில் வெற்றிபெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல்வர் ஆனார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.
அதன் பின் எனக்கு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார் ஜானகி. கட்சி ஜெயலலிதா வசம் போனபோது, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னமும் திரும்பக் கிடைத்தது. 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த அனுதாப அலை காரணமாக அதிமுக கூட்டணி மிகப் பெரும்பான்மையைப் பெற்றது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால், ராஜீவ் ரத்தம் எனக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை. என் செல்வாக்குதான் காரணம் என்றார் ஜெயலலிதா.
சாலையில் தடுப்புகள், போக்குவரத்து நிறுத்தம் என்று பகட்டு அரசியலை ஜெயலலிதா நடத்தினார். அவரது வளர்ப்பு மகன் திருமணம் எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவின் ஆட்சியில் முதல் கரும்புள்ளி. பெரும் ஊழல்கள், சசிகலா குடும்பத்தினரின் மிரட்டல்கள் என்று ஜெயலலிதாவின் ஆட்சி மிகப் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஊழல் வழக்குகளுக்காக மூன்று முறை சிறை சென்றவர் ஜெயலலிதா. எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணம் எம்.ஜி.ஆர். எப்படி ஆட்சி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா.
2016 தேர்தலில் திமுக கூட்டணிக் கோளாறுதான் இந்த முறை ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. ஆட்சி வாய்ப்பை திமுக இழந்தது. ஸ்டாலினை கருணாநிதி முழுவதும் நம்பினார். ஆவரது தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி கணிப்பு தவறாகப் போனது. இது மக்கள் விரும்பிய ஆட்சி அல்ல. இன்றைக்கு ஜெயலலிதாவின் மரணம் பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஜெயலலிதாவால் சிறிது காலம் ஒதுக்கி வைக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்ததே நான்தான் என்கிறார். நான் சொல்லித்தான் யாருடன் கூட்டணி என்று ஜெயலலிதா முடிவுசெய்தார். பல முக்கிய அரசியல் முடிவுகளை நான் சொல்லித்தான் எடுத்தார் என்றும் சசிகலா சொல்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை சசிகலாவை நெருங்கிய வட்டாரம் மட்டுமே அறியும். உள்கட்சி விவகாரத்தில் சசிகலா தலையீடு இருந்தது உண்மை. ஏனெனில், ஜெயலலிதாவைச் சந்திக்க வேண்டும் என்றாலோ அவருக்குத் தகவல் தர வேண்டும் என்றாலோ சசிகலாவைத் தாண்டித்தான் அல்லது சசிகலா மூலமாகத்தான் செல்ல வேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள் இருந்ததை நாம் அறிவோம்.
ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட தொண்டர்கள்கூட, நமக்கும் ஒரு நாள் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்று வாய்ப்பு தருவார் என்றே எதிர்பார்த்தனர். ஜெயலலிதாவின் பலம் அதுதான். கட்சியின் கிளைக் கழகச் செயலாளர், ஊராட்சி உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்கள். எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசு ஜெயலலிதா என்று அறிவிக்கவில்லை. ஆனால், கோடிட்டுக் காட்டினார். முதலில் சத்துணவு ஆலோசகர், பின் கொள்கைப் பரப்புச் செயலாளர், பிறகு மாநிலங்களவை உறுப்பினர் என்று கட்சியில் ஒரு முக்கிய சக்தியாக ஜெயலலிதாவை முன்னிறுத்தினார்.
ஜெயலலிதா அப்படி யாரையும் தனக்குப் பிறகு என்று அடையாளம் காட்டவில்லை. இப்போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என்று ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்லி அதிமுகவைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். சசிகலா மீது அடிமட்டத் தொண்டனுக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. உண்மையோ பொய்யோ ஜெயலலிதா மரணத்தையும் சசிகலாவையும் சம்பந்தப்படுத்தி வரும் செய்திகளைத் தொண்டர்கள் நம்புகிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவி பறிபோய் சிறை சென்றபோதெல்லாம் பன்னீர்செல்வத்தைத் தான் முதல்வராக்கினார். எம்.ஜி.ஆர். காலத்துப் பிரமுகர்கள் இப்போது சிலர் இருந்தாலும் அவர்களை யெல்லாம் நம்பாமல் பன்னீர்செல்வத்துக்கே வாய்ப்பு தந்தார்.
சசிகலாவின் ஆதரவு, பன்னீர்செல்வத்துக்கு அப்போது இருந்ததும் உண்மை. அதேபோல், சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வார்த்தைக்கு வார்த்தை ‘மாண்புமிகு சின்னம்மா’ என்று சொன்னார் பன்னீர்செல்வம். இப்போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்வது அவரது அரசியல் தற்காப்புதானே தவிர, வேறொன்றும் இல்லை. இன்னொரு உண்மையையும் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.
ஜெயலலிதாவின் முடிவையே மாற்றும் அதிகாரம் உள்ள சக்தியாக சசிகலா இருந்தார் என்பதும் உண்மை. பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க வேண்டாம் என்று சசிகலா தீர்மானித்திருந்தால், பன்னீர்செல்வத்துக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைத்திருக்காது. தீபாவைப் பொறுத்தவரை அவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அவ்வளவே. மக்களிடம் செல்வாக்கைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து முதல்வராக இருந்தார்.
ஜெயலலிதா அப்படி இருக்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, அரசு அலுவலகங்களில் அவர் படம் வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பாரத ரத்னா கிடைக்காது. சமாதிக்கான செலவை அரசு ஏற்கக் கூடாது என்றெல்லாம் பேச்சு எழுகிறது. இவையெல்லாம் எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவின் இருண்ட பக்கங்கள். இரட்டை இலை உதிரத் தொடங்கிவிட்டது.
(ஜாசன், மூத்த பத்திரிகையாளர்)