(இந்தக் கட்டுரை எமக்கும் பொருந்துகின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான ஈழத்தின் தமிழ் பகுதிகளுக்கும்) எனவே இதனை பிரசுரம் செய்கின்றோம் – ஆர்)
(அ.சாதிக் பாட்சா)
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சியைச் சேர்ந்த நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து அங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீரமைத்து வருவது குறித்து ‘தி இந்து’வில் ‘நீர்நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்று செய்தி வெளியாகியிருந்தது.
சீமைக் கருவேல மரக்காடாக காணப்பட்ட புதுக்குறிச்சி ஏரி இன்று நீர்சூழ காட்சியளிப்பதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்கிற புதுக்குறிச்சி இளைஞர்களின் முயற்சிக்கு ஊக்க மளிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏரியை சீரமைத்துக்கொள்ள கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இளைஞர்களும், ஊர் மக்களும் சேர்ந்து உத்வேகத் துடன் ஏரியைச் சீரமைத்தனர். ஏரி முழுவதும் இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. ஏரியின் ஒரு பகுதியில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து ஊர் மக்கள் சிலர் விவசாயத்துக்குப் பயன்படுத்தினர். ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களைத் தூர்வாரி சீரமைத்தனர்.
வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் ஏரி நிறைந்துவிடும் என நினைத்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி பருவ மழை பெய்யவில்லை. எனினும், ஏரியைச் சீரமைத்த இளைஞர்கள் கடமையை செய்துவிட்டு நம்பிக் கையுடன் இருந்தனர்.
இந்நிலையில், நீண்ட நாட் களுக்குப் பிறகு மார்ச் 10-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், புதுக் குறிச்சி ஏரியில் கணிசமான அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரியில் தண்ணீரைப் பார்த்த அப்பகுதி முதியவர்கள், ஏரியைச் சீரமைத்த இளைஞர்களை வெகுவாகப் பாராட்டினர். புதுக்குறிச்சி ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ள தகவல் அறிந்து பல்வேறு பகுதி மக்கள் அங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
“ஏரிக்கரையைப் பலப்படுத்தும் விதமாக கரை பகுதிகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பனை மரங்களை நடவு செய்துள்ளோம். வண்டல் மண் எடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தினால், மேலும் பல நீர்நிலைகளைச் சீரமைக்க மக்கள் தயாராக உள்ளனர்” என்கின்றனர் நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள்.
புதுக்குறிச்சி ஏரியைச் சீரமைக் கும் பணியின் பின்னணியில் இருந்து வழிகாட்டிய சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ்
கருப்பையா கூறும்போது, “அனைவருக்கும் பொதுவான தண்ணீரைச் சேமிக்கவும், பயன்படுத்தவும் நமது முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றின் மகத்துவம் புரியாமல் நாம் நீர்நிலைகளைக் காப்பாற்றத் தவறியதால், தற் போது, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறோம்.
நாம் நமது கடமையை செய் தால் இயற்கை அதன் கடமையை சற்று காலம் தாழ்த்தியாவது செய்யும் என்பதை புதுக்குறிச்சி ஏரி புனரமைப்பு நிகழ்வு நிரூபித் துள்ளது. இளைஞர்களின் முயற் சிக்கு இயற்கை தனது கொடையை சற்று தாமதமாக மழையாகப் பொழிந்து அளித்துள்ளது.
அரசு நிர்வாகம் நீர்நிலைகளைத் தூர் வாரும், புனரமைக்கும் என எதிர் பார்த்துக் காத்திராமல், அவரவர் பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் புனரமைக்க அந்தந்த பகுதி மக்கள் முன்வர வேண்டும். மக்களுக்கு தண்ணீரின் தேவையை கருத்தில் கொண்டு நீர்நிலைகளைத் தூர் வார, புனரமைக்க கூடுதல் நிதியை அரசு ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.