ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு: உணவக உரிமையாளரின் உன்னத சேவை

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பவர்ஹவுஸ் சாலையில் உள்ள, ‘ஏஎம்வி ஹோம்லி மெஸ்’ முன்பாக காலை, மதியம், மாலை என 3 நேரங்களிலும் வாடிய முகத்துடன் வரும் நோயாளிகளின் உறவினர்கள், மலர்ந்த முகத்துடன் மருத்துவமனைக்குத் திரும்புகின்றனர். ஒருவேளை உணவுக்கு ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படும் தரமான உணவுதான் இந்த மலர்ச்சிக்குக் காரணம்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்தசேவையை செய்து வரும் உணவகத்தின் உரிமையாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன் உணவகம் தொடங்கிய போது மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுக்கான தொகையில் 20%குறைவாக பெற்று வந்தோம். எங்களது உணவகம் அரசு மருத்துவ மனைக்கு அருகே இருப்பதால், அங்கு உள்நோயாளிகளாக தங்கி இருக்கும் பலர் உணவகத்தில் சாப்பிட வருவர்.

ஒருமுறை தனது கணவரை மருத்துவமனையில் சேர்த்திருந்த ஒரு மூதாட்டி, உணவகத்தில் இட்லி இல்லை என்றதும் திரும்

பிச் சென்றார். ஏனென்று விசாரித்த போது விலை குறைவான இட்லி வாங்கினால் இருவரும் சாப்பிட முடியும் என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் உள்

நோயாளியாக சிகிச்சை பெறுபவர் களுடன் தங்கியிருப்போர் பலர் வறுமை காரணமாக உணவுக்குச் சிரமப்படுவதை உணர்ந்தேன்.

அடுத்த நாள் காலை முதல் அரசு மருத்துவமனைக்குச் சென்று உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் ஏழைகள் 20 பேருக்கு மதியஉணவுக்கான டோக்கன் கொடுத்தேன். மதியம் அதனைக் கொண்டு வருபவர்களிடம் உணவுக்கு ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு முழு சாப்பாடு கொடுக்கத் தொடங்கினேன். இது தற்போது காலை 15 பேர், மதியம் 30 பேர், இரவு 15 பேர் என வளர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் அதிகநாட்கள் தொடர்ந்து உள்நோயாளி யாக தங்கி சிகிச்சை பெறுவோருக்கு இந்த உணவுத் திட்டம் பெரும் உதவியாக இருக்கிறது. அவர்கள்சிகிச்சை முடிந்து சென்றதும், அருகில் உள்ள அடுத்த நோயாளி இதன்மூலம் பலனடைகிறார். இல வசம் என்றால் வாங்க தயங்குவர் என்பதால், உணவுக்காக ஒரு ரூபாயை பெற்றுக்கொள்கிறோம். வசதி குறைவான அத்தனைப் பேருக்கும் உதவ முடியாவிட்டாலும் முடிந்தவரை உணவு வழங்கி மனநிறைவுடன் வாழ்கிறேன் என்றார்.

இதை அறிந்த அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது பிறந்த நாள், திருமண நாட்களில் கூடுதல் நோயாளிகளுக்கு உணவு வழங்கக் கோரி அதற்கான பணத்தைக் கொடுத்து வருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டும்…

ஏழை நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் வெங்கட்ராமனுக்கு முகம் தெரியாத பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் மாதம் 50 ரூபாயை கடந்த 7 ஆண்டுகளாக உணவு உதவிக்காக மணி ஆர்டர் மூலம் அனுப்பி வருகிறார். ஈரோடு ஹூண்டாய் கார் நிறுவன முகவர்கள் ஓர் ஆண்டு முழுவதும் 40 பேருக்கு உணவு வழங்குவதற்கான தொகையை மாதாமாதம் கொடுத்து உதவியுள்ளனர்.

வெங்கட்ராமனின் மனைவி ராஜலட்சுமி, மகள்கள் மோனிகா, ரம்யா ஆகியோரும் அவரது இந்த சேவைக்கு உதவி வருகின்றனர்.

(எஸ்.கோவிந்தராஜ்)