கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்று அமைந்திருந்த மாடிக் கட்டடம் ஒன்றில் முழுக்க முழுக்க தமிழ்ப் பெண்களால் நிறுவப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய சந்ததிக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பொசிபிள் கிறீன் (Possible Green Ltd) என்ற அந்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் இன்று இலங்கை முழுவதும் மட்டுமன்றி உலகம் முழுவதும் தனது உற்பத்திகளை விற்பனை செய்கின்றது. ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் மட்டுமன்றி சில ஆபிரிக்க நாடுகளிலும் தனது விற்பனையை ஆரம்பித்துள்ள இந்த நிறுவனத்தின் இயக்குனர், முன்னை நாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளியான திருமதி.கோகிலவாணி. 20 இற்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குனராக சுரபி என்ற முன்னை நாள் போராளியும், உற்பத்தி முகாமையளராக கிருசாந்தி என்ற இளம் பெண்ணும் பணியாற்றுகின்றனர்.
15 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேனீர் வகைகளே நிறுவனத்தின் பிரதான உற்பத்திப் பொருட்கள். துளசி, நாவல் பழம், குறிஞ்சா, இஞ்சி, ஏலம், கராம்பு, மாவிலை, செம்பரத்தம் பூ, முருங்கை இலை போன்ற அரும் மூலைகைகளை கொண்டு தேனீர் தயாரிக்கப்படும் முன்பதாக நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு முழுமையான தரப்படுத்தலுக்கு உள்ளாக்கும் பொறுப்பை குமுதா என்ற பெண் பொறுப்பேற்றுள்ளார்.
நீழிவு நோய், இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு, இருதய நோய் போன்றவற்றிற்கு இயற்கை நிவாரணிகள் எனக் கருதப்படும் இயற்கையின் கொடைகளான மூலிகைப் பொருட்களினால் தயாரிக்கப்படும் தேனீர் வகைகள் ஐரோப்பாவில் ஈ பே போன்ற விற்பனைத் தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சிலரின் மிகக் குறைந்த மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று தேனிர் தயாரிப்பதற்குரிய இயந்திரங்களையும், ஆய்வு மையத்தையும் சந்தப்படுத்தல் பிரிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இங்கு பொருட்களின் வினியோக வேலைகளைக் கூட பெண்களே கவனித்துக்கொள்கின்றனர்.
பெண்களால் தேசிய உற்பத்திக்குப் பங்களிக்க முடியும் என்பதை இங்குள்ள பெண்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.