(கே.கே.மகேஷ்)
யானைக் காதில் எறும்பை விடத் துடிக்கிறது திமுக
இன்னொரு இடைத்தேர்தலுக்குத் தயாராகிவிட்டது ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, இதை மற்றுமோர் தேர்தலாக அல்லாமல், தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. ஜெயலலிதாவின் தொகுதியில் போட்டியிட்டு வெல்வதன் மூலம், ‘நாங்களே உண்மையான அதிமுக’ என்று பறைசாற்றிக்கொள்ளும் வாய்ப்பாகவே அதிமுகவுக்கு உரிமை கோரும் மூன்று அணிகளும் கருதுகின்றன.
அதிமுகவைப் பொறுத்த அளவில், ஆர்.கே. நகர் அவர்களுடைய கோட்டை. பூங்கா நகர் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு, 1977-ல் இத்தொகுதி உருவான முதல் தேர்தலிலேயே அங்கு அதிமுக வென்றது. 1980, 1984 தேர்தல்களில் சென்னையைத் தன் கோட்டையாக வைத்திருந்த திமுகவால், இந்த ஆர்.கே. நகர் ஓட்டையை மட்டும் சரிசெய்யவே முடியவில்லை. அதிமுக பிளவுபட்ட 1989, ஜெயலலிதா ஆட்சியின் ‘இருண்ட கால’ முடிவில் நடந்த 1996 தேர்தல்களில் மட்டுமே இங்கே அதிமுக தோற்றிருக்கிறது. ஏற்கெனவே, ஜெயலலிதா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி இது. ஆகையால், ஒரு லட்சம் வாக்குகள் குறைந்தாலும் வென்றுவிடலாம் என்று நம்புகிறது தினகரன் அணி. இதுவே பன்னீர்செல்வம் அணி, தீபா அணியின் கணக்கும்!
தினகரன் கணக்கு
தமிழகம் முழுக்க எதிர்ப்பு அலை வீசுகிறபோது, ‘குற்றவாளியின் பினாமி ஆட்சி நடக்கிறது’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறபோது, துணிச் சலாக வேட்பாளராக இறங்கியிருக்கிறார் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். எடுத்த எடுப்பிலேயே பலரும் அவர் தோற்றுவிடுவார் என்று சமூக வலைதளங் களில் எழுதியவண்ணம் இருக்கின்றனர். ஆனால், அது அவரைக் குறைத்து மதிப்பிடுவதாகும். ஸ்டாலினின் வேட்பாளர் தேர்வும்கூட இதையே ஆமோதிக்கிறது.
அதிமுகவில் முன்பு செல்வாக்காக இருந்த போது, ஜெயலலிதாவை இயக்கிய மூளைகளில் ஒருவராக இருந்தவர் தினகரன். கட்சியின் ‘கருவூலம்’ ஆகவும் ஒருகாலத்தில் இருந்தவர். இடையில், கட்சியின் வெளிப்படையான பொருளாளராகவும் இருந்திருக்கிறார். ‘ஜெயா டிவி’யின் தொடக்கம் முதல் – சசிகலா குடும்பம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாடகம் வரை (1999 – 2011) அதன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் தினகரனின் மனைவி அனுராதா என்பதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். கட்சியில் திறன்மிக்கவர்களை அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்ளும் திறன் தினகர னிடம் உண்டு. அப்படி அவரால் கண்டெடுக்கப் பட்டவர்களில் ஒருவர்தான் பன்னீர்செல்வம்.
தென் மாவட்டத்துக்காரன் என்ற முறையில் தினகரனின் ‘முந்தைய தேர்தல் சாதனைகள்’ சிலவற்றை இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன். 1999 மக்களவைத் தேர்தல் வேட்பாளராக வந்தார் ‘வள்ளல்’ தினகரன். தமிழகத்தில் ஒரு வட்டாரத்தில் உள்ள அத்தனை சிறுதெய்வக் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது என்றால், அது இவர் பெரியகுளத்தில் இருந்த காலத்தில்தான். எந்த சாதிக்காரர்களின் கோயிலாக இருந்தாலும், திருப்பணிக் குழுத் தலைவரானார் தினகரன். ‘தாலிக்குத் தங்கம்’ திட்டம் வரும் முன்பே, அழைப்பிதழுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியவர் தினகரன். யார் வீட்டுத் திருமணம் என்றாலும், இவரது பெயரும் படமும் போட்டே அழைப்பிதழ்கள் அச்சாகின. குறைந்தது ரூ.5,000 மொய்யும் உறுதி. ஒரு சாதாரண மக்களவைத் தேர்தலையே அப்படி அணுகியவர் ‘நாளைய அதிமுக யார் பக்கம்?’ என்பதற்கான கருத்துக்கேட்பு வாக்கெடுப்பு போன்று நடக்கும் இந்தத் தேர்தலை எப்படி அணுகுவார் என்பதை விவரிக்க வேண்டியதில்லை.
தேர்தல் வெற்றி கடினம் என்றாலும், ஒருவேளை வென்றால், கட்சியைத் தங்கள் கைக்குள் வைத்திருக்க இத்தேர்தல் முடிவை ஒரு சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதே தினகரனின் கணக்கு. எனவேதான், அவர் துணிந்து இறங்கியிருக்கிறார்.
பன்னீர்செல்வம் கணக்கு
கட்சியும் சின்னமும் தங்களுக்கே என்று முழக்கமிடும் பன்னீர்செல்வம், தேர்தல் தொடர்பில் ஓரளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கிறார் என்றால், அதற்கு ஒரு வலுவான காரணம் உண்டு. அது, மதுசூதனன். அவர் பல்லாண்டுகளாக வசிப்பது இத்தொகுதியில்தான். கட்சியில் சேரும் முன்பே அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக இருந்தவர். பிறகு, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அதிமுக செயலாளர், கொள்கைபரப்புச் செயலாளர், அவைத் தலைவர் என்று வளர்ந்தவர். இடையில், இதே ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஆக, பன்னீர்செல்வம் அணியைப் பொறுத்த அளவில் மதுசூதனன் ஒரு வலுவான ஆயுதம்.
மேலும், எதைச் சொன்னால் அதிமுகவினரின் வாக்குகளைத் தினகரனுக்கு எதிராகத் திருப்ப முடியும் என்றும் அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். செய்தியாளர் சந்திப்பின்போது, “எங்கள் வேட்பாளர் தொகுதியில்தான் இருக்கிறார். அவர் ஒன்றும் சிங்கப்பூரிலிருந்து வந்தவரல்ல” என்று மாஃபா பாண்டியராஜன் சொன்னது பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் வியூகத்தைப் பறைசாற்றுவது. “ஃபெரா வழக்கு இருப்பதால், டி.டி.வி.தினகரனின் மனுவைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்” என்று வேட்புமனு தாக்கலுக்கு முன்பே குரல் கொடுத்திருக்கிறார் பன்னீர்செல்வம்.
சசிகலா முதல்வர் பதவிக்கு வர முயற்சிக்கிறார் என்று தகவல்கள் வெளியானதும், தமிழகம் முழுவதும் – குறிப்பாக, பெண்கள் மத்தியில் – எழுந்த ஆத்திர அலையை நாடறியும். இப்போது, சசிகலாவின் குடும்ப உறுப்பினரான தினகரன், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது முதல்வர் பதவியைக் குறிவைத்துதான் என்பது பச்சைக் குழந்தையும் பேசும் அரசியல்.
அப்படியிருக்க… என்னதான் தொகுதி வாக்காளர்களைக் குளிப்பாட்டினாலும், பெண் வாக்காளர்கள் தினகரனை ஆதரிப்பார்களா என்பது அவருக்கு உள்ள மிகப் பெரிய சவால். அதைத்தான், ஓ.பி. அணி மலையாக எண்ணியிருக்கிறது.
தீபா கணக்கு
தீபாவைப் பொறுத்த அளவில் இது அவருக்கு அவரே நடத்திக்கொள்கிற சோதனை. அரசியல் அவருக்குச் சரிப்பட்டு வருமா என்பதை இந்தத் தேர்தல் முடிவு அவருக்குத் தெரிவித்துவிடும். ஒருவேளை அவர் ஜெயித்தால், ‘ஜெயலலிதாவின் வாரிசு’ என்ற அவருடைய முழக்கம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும். தோற்றால், அநேகமாக அவருடைய அரசியல் கனவு முடிவுக்கு வந்துவிடக்கூடும்.
ஸ்டாலின் கணக்கு
திமுகவின் வேட்பாளர் தேர்வு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. “தினகரனுக்கு இணையான பணபலமும், அதிகார பலமும் கொண்ட டி.ஆர்.பாலு மாதிரியான ஆட்களைக் களமிறக்காமல், சாதாரண பகுதிச் செயலாளரைக் களமிறக்கியிருக்கிறார்” என்கிறார்கள் விமர்சிப்பவர்கள். ஆனால், ஸ்டாலின் நுட்பமாகவே காய் நகர்த்தியிருப்பதாகத் தோன்று கிறது. ஏனென்றால், ‘யார் உண்மையான அதிமுக?’ எனும் கோதாவில் இந்தத் தேர்தல் அதிமுகவின் பிரதான இரு அணிகளுக்கு இடையிலான தேர்தலாக மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, ஆளும் தரப்பு தினகரனை ஜெயிக்கவைக்க என்ன முயற்சியிலும் இறங்கும்.
திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கட்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. வலுவான ஒரு வேட்பாளரைக் களமிறக்கி அவர் தோற்றுவிட்டால், “அதிமுக இவ்வளவு பலவீனமாக இருக்கும் சூழலிலும் திமுகவை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை” என்பது பேச்சாகிவிடும். ஆகையால், தேர்தலுக்குப் பெரிய முக்கியத்துவம் தராதது போன்ற பாவனையில் தேர்தலை அணுகுவது; வென்றால், ‘அதிமுகவின் துணை பொதுச்செயலாளரை வீழ்த்த எங்களது பகுதிச் செயலாளரே போதும்’ என்று சொல்வது, தோற்றால், ‘பண பலம் அரசு பலத்தைக் கொண்டு ஒரு சாதாரண வேட்பாளரை அநீதியாக ஜெயித்தார்கள்’ என்று சொல்வது எனும் உத்தியைக் கையில் எடுத்திருக்கிறாரோ ஸ்டாலின் என்று தோன்றுகிறது.
இன்னொரு பேச்சும் திமுகவுக்குள் அடிபடுகிறது. பொதுவாக, திமுக நேர்காணலில் கேட்கப்படுகிற முதல் கேள்வியே “நீ எத்தனை கோடி செலவழிக்க முடியும்?” என்பதாகச் சொல்வார்கள். இம்முறை அந்த நடைமுறையை மாற்றி, பாரம்பரியமான திமுக குடும்பத்திலிருந்து சாதாரணமான ஒருவரை வேட்பாளராக அறிவித்திருப்பதன் மூலம், கட்சியினருக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறார் ஸ்டாலின். மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் சொல்கிற ஆட்களுக்குத்தான் வாய்ப்பு என்ற நடைமுறையை மாற்றி, சாதாரண ஆட்களையும் பதவிகள் தேடிவரும் என்ற ஜெயலலிதா பாணி அரசியலுக்குக் கட்சி மாறுவதைச் சுட்டிக்காட்டும் சமிக்ஞை இது என்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி ’இரட்டை இலை’ என்னாகும், யாருக்குப் போகும் என்பதை அ.தி.மு.க. அணிகளைவிட கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது ’உதயசூரியன்’!
மக்கள் கணக்கு
ஆக, ஆளுக்கு ஒரு எதிர்காலக் கனவைக் கொண்டிருக்கும் நான்கு தரப்புகள் எதிர்கொள்ளும் தேர்தல் இது. இந்தத் தேர்தல் வெற்றி – தோல்வியைத் தாண்டி மநகூ, தேமுதிக, பாஜகவுக்கும் சில திட்டங்கள், கணக்குகள் இருக்கின்றன. ஆனால், மக்களிடம் ஒரு கணக்கு இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுக்குப் பின்னராவது தமிழக அரசியலில் நிலைத்தன்மை வர வேண்டும்; மக்கள் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடக்க வேண்டும்; அதற்கு ஆளும் கட்சிக்குள் இருக்கும் குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதே தமிழகத்திலுள்ள ஏனைய எல்லாத் தொகுதி மக்களின் கணக்கும். முடிவு, ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் கைகளில் இருக்கிறது!
(The Hindu)