“1972 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் தம்மிடம் இல்லை” என, அரசாங்கம், நாடாளுமன்றில் நேற்று (23) அறிவித்தது. அத்துடன், அரசாங்கப் பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்த 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் காலை 10.30 மணிக்கு நாடாளுன்றம் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எம்.பி, எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, அரசாங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தது.
1972 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், பயங்கரவாதம் காரணமாக மரணமடைந்த மற்றும் காயமடைந்த முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் எண்ணிக்கையினை வெவ்வேறாக சமர்ப்பியுங்கள்’ என கம்மன்பில எம்.பி, பிரதமரிடம் கேட்டிருந்தார்.
அவரது கேள்விக்கு, ஆளும் கட்சிப் பிரதம கொறாடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக பதிலளித்தார்.
அமைச்சர் கயந்த கருணாதிலக தொடர்ந்து பதிலளிக்கையில், “1972-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் 23ஆயிரத்து 661 பேர் மரணமடைந்துள்ளதுடன், 37ஆயிரத்து 957 பேர் காயமடைந்துள்ளனர். கடற்படையில் 714 பேர் மரணமடைந்துள்ளதுடன், 472 பேர் காயமடைந்துள்ளனர். விமானப்படையில் 443 பேர் மரணமடைந்துள்ளதுடன். 234 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், சிவில் பாதுகாப்புப் படையில் 545 பேர் மரணமடைந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளர். யுத்தத்தின்போது, காயமடைந்தவர்களது சரியான தகவல்கள் கணக்கொடுக்கப்படவில்லை. சேவையில் இருக்கும்போது பல தடவைகள், பல்வேறான சந்தர்ப்பங்களில் காயமடைந்துள்ளனர்.
யுத்தத்தின்போது, மரணமடைந்த மற்றும் காயமடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்குப் பதில் தெரியாது” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட உதய கம்மன்பில எம்.பி., “சாதாரணமாக பயங்கரவாத செயற்பாடுகளுக்கும், தாக்குதல்களுக்கும் எதிராக போரிடும்போது அதில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கிராமங்களுக்குள் நுழைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின்போது உயிரிழந்த, காயமடைந்த சாதாரண பொதுமக்கள் தொடர்பில் பொலிஸாரிடம் தரவுகள் இல்லையா?” என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இக்கேள்விக்குப் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியுள்ளமையால், அதனுடன் தொடர்புடைய அமைச்சுக்கு கேள்வியை அனுப்பி வைக்கின்றேன்” என்றார்.