மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.?

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக பதிவேறுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தம்மோடு வாழ்ந்து மறைந்தவரை  நினைவு கூரல் மனித பண்புமட்டுமல்ல, அது நாலுகால் நன்றி உள்ள பிராணிக்கும் பொருந்தியதால் தான், ஹிஸ் மாஸ்டர்ஸ் வொயிஸ் HMV (His Masters Voice) என்ற இசைத்தட்டு குறியீடே உருவானது.

தன் எஜமானனின் குரல் ஒலிக்கும் போதெல்லாம் கண்ணீர் உதிர்த்த, அந்த நன்றி உள்ள ஜீவன் போலவே, ஈழப் போராட்டம் என்ற களத்தில், நண்பனாய், சகோதரனாய், தோழனாய் நின்றவர் நினைவு நிலைத்து நீடிக்கும். அது காலத்தால் அழியாது. காரணம் அது சுயநலம் அற்ற கூட்டு. மரணத்தின் வாசலை வலிந்து மிதித்த தியாகம். எமக்கு கிடைப்பது எம்மக்களுக்கான விடுதலை என்ற இனப்பற்று.

அவ்வாறான இழப்புகளை நினைவுகூரல் என்பது, எமது மன ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக மட்டுமே அமையவேண்டும். அதற்கு மாறாக அந்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர் மீது வசை பாடுவதாக அமைந்தால், கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிந்தவர் நிலைக்கு, முகம் கொடுக்க வேண்டிவரும். முன்பு புலிகள் தவி ர்ந்த ஏனைய அமைப்புகளை ஒட்டுக்குழுக்கள் என எழுதும் பத்திரிக்கை தர்மம் இருந்தது.

அதே புலிகள் பிரேமதாசாவுடன் உறவாடியபோதும், மகிந்தவை வெல்லவைக்க கோடிகளை வாங்கியபோதும், அது தந்திரோபாயம் என சங்கூதியது. அடுத்தவரை துரோகி என பறை அடித்தவரே மாத்தையா துரோகி, கருணா துரோகி என முத்திரை குத்தினர். பிரபாகரன் மறைவிற்கு பின்னர் தமிழினியின் கூர்வாளின் நிழல் பற்றி பேசுவோரும், ஐயர் முதல் பலரின் பதிவுகளை அலசுபவரும், இதே பத்திரிகா தர்மம் அறிந்த ஜாம்பவான்களே.

எத்தனையோ தவறுகள், தப்புகள் தலைமகளுக்கு தெரிந்தும் தெரியாமலும் எல்லா அமைப்புகளிலும் நடந்தேறின. சிலதலைமைகள் தண்டித்தன. சில தலைமைகள் கண்டித்தன. சில தலைமைகள் கண்டும் காணாமல் விட்டன. ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவ கட்டுப்பாட்டு அமைப்பில் கூட, ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்தத் தான் மில்றி பொலிஸ் உள்ளது. மார்ஸல் கோட் முறையும் உள்ளது.

அரச படைகளிலேயே அவ்வாறு என்றால், எங்கும் தவறு நடக்கலாம், எவரும் தவறு இழைக்கலாம் என்பதற்கான ஏற்பாடே, அந்த கட்டமைப்பு. இங்கு இயக்கங்கள் தோன்றிய விதம் பற்றி நான் விளக்க வேண்டிய தேவை எல்லை. முதலில் உணர்ச்சி, பின் உணர்வு, பின்பு தெளிவு அதன் பின் செயல் என்ற ஒழுங்கு முறை வருமுன்பே அனைவரின் கையிலும் ஆயுதம், அவர் தம் சொல்ப்படி இயங்கியது.

முடிவு மட்டுமே தலைமைக்கு புனைதலுடன் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆயுததாரிக்கு பின்னாலும், அதன் தலைமைத்துவம் தன் கழுகு பார்வையை செலுத்தும் சூழ்நிலை ஈழ விடுதலை போராட்ட காலத்தில் இருக்கவில்லை. அந்த பகுதி பொறுப்பாளரின் அறிக்கை, அவர் செய்த செயலை நியாயப்படுத்தி இயக்க தலைமையை தலையாட்ட செய்த சம்பவங்கள் நிறையவே உண்டு. இது சகல அமைப்புகளுக்கும் பொருந்தும்.

எனவே இன்று திகதி மாதம் தவறாமல், தம்முடன் இணைந்து போராடிய காலத்தில் மரணித்த உறவுகளை நினைவு கூரும் எவரும், அதில் சம்மந்தப்பட்ட எதிர்த்தரப்பை பாசிச வாதிகள், இரத்தவெறியர் என அர்ச்சனை செய்வதை விடுத்து, இந்த சம்பவம் இந்த அமைப்பால் நடந்தது என்ற விடயத்தை பதிந்து விட்டு நீங்கள் நேசித்தவரின் நினைவாக அவர் தம் சாதனைகளை பதிவிடுங்கள். மாறாக பழையதை கிளறினால் உங்கள் பக்கத்து புதைகுழிகளும் தோண்டப்படும்.

அதில் இருந்து சுந்தரம், இறைகுமாரன், உமைகுமாரன், அமீன், ரேகன், கந்தன்கருணை, மட்டுமல்ல, தர்மலிங்கம், ஆலாலசுந்தரம், TRRO கந்தசாமி, பாதிரியார் சந்திரா பெர்னாண்டோ, வைத்தியர் ஞானி, கல்லூரி மாணவன் அகிலன், ஜோசப் பரராஜாசிங்கம் என ஆயுதம் ஏந்தாது வீழ்ந்து பட்டவரின் பெயர் பட்டியலும் நீண்டு கொண்டே போகும். வரலாற்றை பதிகிறோம் என்ற பெயரில் வன்மத்தை விதைத்தால் மனிதம் மரத்துவிடும்.

எம் இளையவரின் எதிர்கால துளிர்ப்பு என்பது நாம் விதைத்ததை அவர்களை கொண்டு அறுப்பதல்ல. நாம் தவறாக தெரிவு செய்ததை சுயம் கொண்டு தெரிவித்து அவர்களின் சிந்தனையை தூண்டுவது மட்டுமே. தெரிவிப்பது நாங்களாகவும் தீர்மானிப்பது அவர்களாகவும் நிலைமை மாற வேண்டும். மாறாக நாம் கடந்து வந்த கசப்பான அனுபவங்களை கொண்டு அவர்களையும் அணிகளாக பிரிக்கும் செயலை செய்வதால் எந்த விடியலும் எம் இனத்துக்கு என்றும் சாத்தியம் இல்லை.

(ராம்)