அம்பாறை, இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,005ஆக உயர்வடைந்துள்ளது என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாங்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரி வைபவத்தையிட்டு, கடந்த புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்போது, உணவு ஒவ்வாமையால் 950 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர், வைத்தியசாலைகளில் சனிக்கிழமை (8) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர், அம்பாறை பொது வைத்தியசாலையிலும் இன்னுமொரு பகுதியினர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், அம்பாறை பொது வைத்தியசாலையில் 18 பேரும், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் 25 பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 27 பேருமென 105 பேர் மட்டுமே, தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, கந்தூரிக்காக சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களில் சமையற்காரர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டனர்.