பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா 2012 ம் தலிபான்களினால் தலையில் சுடப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் அவசர அவசரமாக விமானத்தில் இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டு சத்திர சிகிச்சை பெற்றுக் குணமானதன் பின்னர் இங்கிலாந்திலேயே தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார். இஸ்லாமியப் பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்ற கோஷத்துடன் போராடிய மலாலா தனக்கெதிரான தலிபான்களின் தாக்குதலின் பின்னர் தனது போராட்டத்தை இங்கிலாந்திலிருந்தபடியே முன்னெடுத்தார்.
மலாலாவின் துணிச்சல் மிக்க போராட்டத்துக்கு உலகமெங்கினுமிருந்து ஆதரவும் பாராட்டுகளும் கிடைத்தன. ஐக்கிய நாடுகள் சபையில் அவர் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இதன் மூலம் மிக்க குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் கல்வி கற்று வரும் பத்தொன்பது வயதான மலாலா யூசுப் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இந்த நியமனத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட மலாலா, இதன் மூலம் பெண்களின் கல்வி விடயத்தில் இன்னும் கூடுதலாகத் தன்னால் பணியாற்ற முடியுமென்று கூறியுள்ளார்.
(எஸ். ஹமீத்)