எதிர்கால உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்தவன் வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஒருவனே. மனிதர்கள் தம் அறிவைக் கொண்டோ, கற்பனையைக் கொண்டோ கணித்துக் கூறுபவை நூற்றுக்கு நூறு வீதம் சரியாக அமைந்து விடுவதில்லை. ‘நாளைக்கு மழை பெய்யும்.’ என்று மனிதன் கணிப்பது பொய்யாகி வெயிலடிக்கும். அவ்வாறே, ‘ அடுத்த வருடம் உலகம் அழிந்துவிடும்’ என்ற மனிதனின் கணிப்பைத் தாண்டி உலகம் பல ஆண்டுகள் வழமை போல இயங்கிக் கொண்டிருக்கும்.
தற்போது வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலைமையை மையமாக வைத்துப் பல கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தக் கணிப்புகள் பல நூறு வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தப்பட்டவையென்றும் கூறப்படுகின்றன. அவ்வாறு வெளிப்படுத்தியவர்களில் நாஸ்ட்ரடாமஸ் முக்கியமானவர் என்று சிலர் கூறுகின்றனர். ஏறத்தாழ 500 வருடங்களுக்கு முன்னம் வாழ்ந்த இந்த நாஸ்ட்ரடாமஸ் கணித்தவைகளிற் பெரும்பாலானவை உலகில் நடந்திருப்பதாகவும் பலர் கதையளந்து வருகின்றனர்.
இந்த நாஸ்ட்ரடாமஸ்தான் 2017-ம் ஆண்டு தொடங்கி மூன்றாம் உலகப்போர் உலகை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் எனக் கணித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் கணிப்பை வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்போது எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலைக்குள் முடிச்சுப் போடுவதற்காகத் தூசுதட்டித் துடைத்து எடுத்திருக்கிறார்கள் இறை நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள்.
நாஸ்டரடாமஸைத் தொடர்ந்து பாபா வாங்கா என்ற மூதாட்டியம் மூன்றாம் உலகப்போர் 2016 முதலே தொடங்கி விடும் என கணித்துக் கூறியுள்ளாராம். பாபா வாங்காவின் பல கணிப்புகள் இதுவரை சரியாகவே இருந்துள்ளதாம்.
தற்போது க்ளேர்வாயோன் ஹொரசியோ வில்லேகாஸ் என்பவர் நாஸ்டரடாமஸ் மற்றும் பாபா வாங்கா ஆகியோரின் கருத்துக்களை உண்மை எனக் கூறியுள்ளார். அத்தோடு தனது கணிப்புகளையும் கூறியிருக்கிறார். அவற்றிற் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
2017-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும்.
அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சிரியா மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் இந்த மூன்றாம் உலகப்போரில் பங்கேற்கும்.
இந்த மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு டொனால்ட் டிரம்ப் தான் காரணமாக இருப்பார்.
மே 13 முதல் அக்டோபர் 13ம் தேதிக்குள் மூன்றாம் உலகப்போரின் காரணமாக உலகம் பேரழிவை சந்திக்கும்.
இந்த யுத்தத்தில் சிரியா அதிபர் ஆசாத் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்படுவார்.
மூன்றாம் உலகப்போருக்கு பின்னர் ‘பேரழிவின் மன்னர்’ என டொனால்ட் டிரம்ப் அழைக்கப்படுவார்..
இவ்வாறு ஹொரசியோ கணித்திருக்கிறார். ம்….பொறுத்திருந்து பார்ப்போம்!
(எஸ். ஹமீத்)