குடும்பத்தில் நிலவிய பயங்கர வறுமையில் அவரது தாயார் புல்லுக்கடகம் சுமந்து அதை விற்று தன் பிள்ளைகளை படிக்கவைத்தார் ,மூத்தவரான தோழர் முருகநேசன் படிப்பை முடித்து வேலையில் தன்னைப் பொருத்திக்கொண்டிருக்கும்போதில் தமது வறுமை ஓரளவு தணிந்தும் ஏனைய சகோதரர்கள் மேலும் படித்து முன்னேறிவிடலாம் என அவர்கள் குடும்பம் நம்பிக்கைகொண்டிருந்தது .தனது குடும்ப வறுமையையும் சூழலையும் விலத்தி விடுதலைப்போராட்டத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் .காந்தி என்றழைக்கப்பட்ட புலிகளின் சித்திரவதைகளினதும் சிறைச்சாலைகளினதும் பொறுப்பாளன் ஓர் உண்மையான காந்தீய வாழ்வில் வாழ்ந்த முருகநேசனை சிறையில் சித்திரவதை செய்து கொன்றான் .தன்னைச் சித்திரவதை செய்தவர்களுக்கு அவர் சிறையில் அரசியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தின் அடிப்படைகளை விளக்கமுயன்று தோற்று காந்தியால் கதிரையால் அடித்துக்கொல்லப்பட்டார்.சித்திரவதை செய்த காந்தி இறுதி யுத்தத்தில் அரச படைகளிடம் சரணடைந்து இன்னமும் புனர்வாழ்வு முகாமில் உள்ளான்.
இவன் என் தோழன். வன்னியில் ஒன்றாக பயணித்து திருகோணமலையில் ஒரே வீட்டில் படுத்துறங்கி பொதுச்செயலாளரின் அருகில் கரங்களாக நாம் செயற்பட்ட அந்தக் காலங்கள்… எனது மேல்வகுப்பில் என்பாதுகாப்பிற்காக நுண்கணித மாணவனாக மாணவர்களோடு மாணவர்களாக இருந்த என்னவன் மக்களுக்கு இவனின் அர்பணிப்பு புரியுமோ ஏன் இவனை அறியுமோ எங்கள் சனம்.
(Sugan, Saakaran)