முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.
காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியினரின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சவாலை விடுத்தார்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது,
‘ இந்த அரசாங்கமானது நாட்டின் வளங்களை விர்பனை செய்கின்றது. தெற்கில் மட்டுமல்ல. வடக்கு கிழக்கில் உள்ள வளங்களையும் இந்த அரசு விற்பனை செய்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துடன் சேர்த்து 15000 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு வழங்கவும், மாதுரு ஓயா பகுதியில் இடம் வழங்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் இந்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டு மக்கள் ஒரு முறை ஏமாந்து விட்டனர். மீள ஏமாறமாட்டார்கள். நாட்டின் வளங்களை பாதுகாக்க ஒன்றிணைந்து தேசிய கொள்கை அடிப்படையில் செயற்படுவர்.
இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை நாம் இந்த காலி முகத்திடலில் இருந்து ஆரம்பிக்கின்றோம்.
எமது பயணத்துக்கு அச்சுறுத்தல்கள் பல ஏற்படுத்தப்பட்டன. எம்மை சிறையடைத்தார்கள். விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன், கம்பன்பில, மஹிந்தானந்த, நாமல், எனது சகோதரர்கள், அரச அதிகாரிகள் என பலர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டனர்.
அத்தனை அச்சுறுத்தல்களையும் தாண்டி இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம்.
இந்த அரசாங்கம் முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொன்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு எனக்கு சவால் விட்டது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன்.
எனது ஆட்சியை கைப்பற்ற இந்த அரசாங்கம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது. இது தொடர்பில் சிலர் மலசல கூடங்களுக்குள் வைத்தே பணத்தை வழங்கியுள்ளனர்.
எனது காலத்தில் இராணுவம் பயங்கரவாதத்தை இல்லாது செய்து சமாதானத்தை ஏற்படுத்தினர். எனினும் இன்று இராணுவத்தினரை மக்களின் நியாயமான கோரிக்கைகளை முடக்க பயன்படுத்தப் பார்க்கின்றனர்.
எமது இராணுவத்தினரை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றில் நிறுத்தும் விதமாகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. அதற்கு இடமளிக்க முடியாது. இந் நாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றில் நிறுத்த ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன்.
குப்பை சரிந்து பொது மக்கள் உயிரிழந்த சம்பவங்கள் உலகில் எந்த நாட்டிலும் இடம்பெற்றதில்லை
எனினும் எமது நாட்டில் கவலைக்குரிய விடயமாக இது இடம்பெற்றுவிட்டது. ஒரு குப்பையைக் கூட அகற்றிக்கொள்ள முடியாத இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுப்பது கேளிக்கைக்குரியது.