வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பினை தனது பதவி முடிவுறும் தறுவாயினில் பெண்களின் அமைப்புரீதியான செயற்பாட்டுக்கான ஒரு தளத்தை காத்திரமாகக் கட்டியெழுப்புவது எனும் நோக்கத்துடன் வடமாகாணசபை பெண் உறுப்பினர் அனந்தி சசிதரன் உருவாக்கியுள்ளார்.
எனினும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலிற்கு கடை விரிக்க இதன் மூலம் அவர் முற்பட்டுள்ளதாக காணாமல் போனோரது குடும்பங்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைக்கத்தொடங்கியுள்ளன. இன அழிப்புப் போருக்குப் பின்னர், கட்டமைப்பு இன அழிப்பு எம்மை எவ்வாறெல்லாம் சீரழித்துவருகிறது என்பதையும், குறிப்பாக பண்பாட்டுச் சீர்கேடுகளை நாம் எவ்வாறு எதிர்கொண்டு முறியடிப்பது என்பது குறித்த ஒரு ஒருங்கிணைந்த வேலைப்பாட்டுக்கான தளமாகவும் இந்த அமைப்பு இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு எங்கணும் பல்வேறு காலகட்டங்களில் நடந்தேறிய படுகொலைகள் தொடக்கம், புதைகுழிகளில் புதைக்கப்பட்டோருக்கான அடையாளம் காணுதல் வரை சர்வதேசப் பங்களிப்புக் கோரி நாம் பல நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கவேண்டிய காலமும் இதுவாகும். குறிப்பாக, இன அழிப்புப் போரின் பலவித பரிமாணங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவும், போராட்டங்களை முன்னெடுப்பவர் களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், பெண்களின் குரலை அமைப்பு ரீதியாக முன்னிலைப்படுத்தும் தன்மை எம்மிடை மிகவும் குறைவாக உள்ளதாகவும் அதனால் தானொரு அமைப்பினை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவற்றிற்கு முன்னராக தமது கேள்விகளிற்கு அனந்தி பதிலளிக்க வேண்டுமென வவுனியா,கிளிநொச்சியினில் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் போனோரது குடும்பங்கள் கோரியுள்ளன. குறிப்பாக காணாமல் போனோர் குடும்பங்களிற்கென புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட நிதி தொடர்பான முழுமையான கணக்கறிக்கையை அனந்தி வெளியிடவேண்டுமெனவும் அதே போன்று மாகாணசபையினில் ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களிற்கான நிதியினில் காணாமல் போனோர் குடும்பங்களிற்கு செய்ததை வெளிப்படுத்தவும் அவை கோரியுள்ளன.
இந்நிதிகளினில் அனந்தி கணக்கு காட்டாமல் இருந்து வருவதுடன் ரணில் அரசு பற்றி வாய் திறக்க மறுப்பதேன் எனவும் அவை கேள்வி எழுப்பியுள்ளன.