குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய மூவரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட பொலிசுக்கு தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.

‘தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்’ முன்னோடி மட்டுமல்ல, எமது தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் 1970 முதல் தமது மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்களில் தங்கத்துரை (தங்கவேல்), குட்டிமணி (யோகச்சந்திரன்), தேவன் (சுப்பிரமணியம்)ஆகிய மூவரும் 5.4.81 அன்று பருத்தித்துறை மணற்காட்டில் வைத்து கடற்படை, இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட மூவரும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு போகிறார்கள் என்பது எப்படி கடற்படைக்குத் தெரிய வந்தது? இதற்கான பதில் இன்னமும் மர்மமாகவே உள்ளது. இவர்கள் வழக்குகளில் ஈடுபட்டு இவர்களை அடிக்கடி பனாகொடை முகாமுக்கு போய் சந்தித்தவரான சட்டத்தரணி கரிகாலன் “தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன்” என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் எழுதிய தொடர் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிடுகின்றார்.

‘நம் வீரர்கள் அந்த நேரத்தில் மணல்காட்டுக்கு வரும் செய்தி கடற்படையினருக்கு எட்டியது எப்படி? இறுக்கமாக பின்னப்பட்டிருக்கும் இரகசிய வலையின் ஒரு மூலையிலே முடிச்சுகளை அறுத்து விட்டவர் யார்? யார் அந்த யூதாஸ்? வீரர்கள் அறிவார்கள். காலம் கனியட்டும் என்று காத்திருக்கின்றனர்’

இவர்களின் கைதைத் தொடர்ந்து தேடப்பட்ட ஜெகன் (ஜெகநாதன்) எப்படி முடமாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதும் கேள்விக்குரியதே!

ஜெகன் வெளிநாடொன்றுக்குப் போவதற்கான ஏற்பாடுகளுடன் பிரபாகரனை 23.4.1981 அன்று அதிகாலை சந்திப்பதற்காகத் தான் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வந்ததோ கனேகம தலைமையிலான பொலிஸ் கோஷ்டி. அங்கு வைத்தே ஜெகனும் அவரது நண்பர் அமிர்தலிங்கமும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் சிவநேசனை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காகவே குட்டிமணிக்கும், ஜெகனுக்கும் 13.8.1982 அன்று ‘ட்ரயல் அட் பார்’ நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. (அப்படி என்றால் தான் கண் தானம் செய்ய முடியும்)

அன்றைய தினமே குட்டிமணி நீதிமன்றத்தில் ‘நான் தூக்கிலிடப்பட்ட பின்னர் விழிகளை கண்ணிழந்த ஒரு தமிழ் இளைஞனுக்கு வழங்குங்கள். இந்தக் கண்களின் மூலமாக மலரப் போகும் தங்கத்தமிழ் ஈழத்தை தரிசிக்க ஆசைப்படுகிறேன்’ என்று வீர உரை நிகழ்த்தினார். இவரைப் போலவே மரண தண்டனை வழங்கப்பட்ட ஜெகன் ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதனை அனுபவிக்கத் துடிக்கிறேன். அதற்காக என்னைத் தூக்கில் போடுகிறீர்களே! மலரப் போகும் எனது தாயகத்தை, தமிழ் ஈழத்தை நீங்கள் தூக்கிலிட முடியாது’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், நீர்வேலி வங்கிக் கொள்ளை (8.1 மில்லியன் ரூபாய்) 25.3.1981 அன்று நடைபெற்றது. இதில் முக்கிய பங்கெடுத்தவர்கள் தங்கத்துரை, குட்டிமணி, சிறிசபாரத்தினம் (டெலோ தலைவர்), ஒபரோய் தேவன் (டெலி தலைவர்), இராகவன் (சி.சிவகுமார்) குறிப்பிட வேண்டியவர்கள். சிறிசபாரத்தினம், ஒபரோய் தேவனும் பின்னாட்களில் விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதும், இராகவன் விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியேறி தற்போது லண்டனில் வாழ்வதும் வரலாற்றுக் குறிப்புகளில் முக்கியமான சம்பவங்களே.
(http://www.thayagam.com/sabalingam3/)