இன்று உலகம் முழுவதும் பரவி வரும் கணனிகளை செயலிழக்க வைக்கும் வைரஸ் அமெரிக்காவில் இருந்து பரவி இருக்கலாம் என நம்பப் படுகின்றது. அதற்குக் காரணம் அமெரிக்க உளவு நிறுவனம் NSA ஹேக்கர்ஸ் பயன்படுத்திய பாதையின் ஊடாகத் தான் இந்த வைரஸ் பரவுகின்றது. அதாவது வின்டோஸ் மென்பொருளில் ஒரு பாதுகாப்பு ஓட்டை உள்ளது. அதன் மூலமாகத் தான் கிரிமினல்கள் வைரஸ் அனுப்புகிறார்கள். இந்த பாதுகாப்பு ஓட்டை NSA உளவறிவதற்காக உண்டாக்கப் பட்டது.
வழமையாக வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு ரஷ்யா தான் காரணம் எனக் குற்றம் சாட்டப் பட்டது. அது அரைவாசி உண்மை மட்டுமே. இந்த தடவை ரஷ்ய நிறுவனங்களின் கணனிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன. அதனாலும் கிரிமினல்கள் அமெரிக்காவில் இருந்தே இயங்கலாம் என்று நம்பப் படுகின்றது.
நவீன காலத்தில் அனைத்தும் இணைய வலைப் பின்னலுக்குள் அடங்குகின்றன. இது கிரிமினல்களுக்கும் வாய்ப்பாகி விடுகிறது.
வைரஸ் தொற்று காரணமாக, பிரித்தானிய மருத்துவமனைகள் இயங்க முடியவில்லை. மருத்துவர்களின் கணனிகளை திறக்க முடியவில்லை. அறுவைச் சிகிச்சைகள் நடக்கவில்லை. நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க முடியவில்லை.
பிரான்ஸில் ரெனோல்ட் தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தப் பட்டது. இவை எல்லாம் பாரதூரமான விளைவுகள் அல்ல. இருப்பினும் கிரிமினல்கள் நினைத்தால் வைரஸ் தாக்குதல் மூலம் அழிவுகளை உண்டாக்கலாம் என்பது அதிர்ச்சியானது.
கிரிமினல்கள், NSA மற்றும் பல மேற்கத்திய புலனாய்வுத்துறையினரின் வழியை பின்பற்றியுள்ள படியால், இணையப் பாதுகாப்பில் அரச தலையீடு குறித்து பல நிறுவனங்கள் முறைப்பாடு செய்துள்ளன.
மைக்ரோசாப்ட், கூகிள், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களும் புலனாய்வுத்துறை நுழைய இடம் கொடுக்கும் பலவீனமான இணைய ஓட்டைகளை அடைக்க விரும்புகின்றன.
(தகவலுக்கு நன்றி : De Volkskrant, 16-5-2017)