(அருண் நடேசன்)
இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
இதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை.
கட்டாய ஆட்சேர்ப்பின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு காலை மூன்று பேரைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சனங்கள் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு கப்பலுக்கு வழித்துணையாக வரும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் சென்றனர். அங்கே புலிகளின் கொடுமையை அவர்கள் அந்தப் பிரதிநிதிகளுக்கு விவரித்தனர். அப்போது கூட்டம் கூட்ட வேண்டாம் என்று சனங்களை விரட்டியடிக்க வந்த புலிகளையும் அவர்களின் காவல் துறையினரையும் மக்கள் கலைத்துக் கலைத்து அடித்தனர். அவர்களுடைய வாகனங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியால் புலிகள் ஆடிப்போனார்கள்.
ஆனால் மறுநாள் அந்தப் பகுதியில் 1500க்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் காவல் துறையினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கண்டபடி ஆண்களைப் பிடித்துத் தாக்கி எல்லோரையும் தமது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் நாள் கலவரத்தையடுத்து மக்கள் 30 படகுகளில் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று சேர்ந்தனர். இதுபோலப் பல சம்பவங்கள் உண்டு. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் அவை.
ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது.
இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.
காரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.
(தொடரும்…..)