“போர்க்காலத்திலும் தாங்கள் கைவிடப்பட்டிருந்தோம். இப்போதும் அப்படியான ஒரு நிலைதான் உருவாகியிருக்கு. ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தப்பார்க்கினம். கொல்லப்பட்டவைக்கு உண்மையில அஞ்சலி செலுத்திறதெண்டால், எல்லாருமாகக் கூடி, ஒண்டா நிண்டு அதைச் செய்யலாமே! அப்பிடிச் செய்யாமல், ஏனிப்பிடி ஆளுக்கு ஒரு இடமாக நிண்டு கொண்டாடுகினம்? இது எனக்குச் சரியாகப் படேல்ல. எல்லாரும் எங்களுடைய கண்ணீரையும் கவலைகளையும் இழப்புகளையும் தங்கடை அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கினம். இதுதான் நடக்குது”. என்று சொல்லிக் கவலைப்பட்டார் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 மே 17 இல் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுத்த தந்தையொருவர்.
சனங்களின் எண்ணங்களையும் கவலைகளையும் யார்தான் கவனத்திற் கொள்கிறார்கள்? தங்கள் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சனங்களை அடக்கிக் கொள்வதற்கே ஒவ்வொரு தரப்பும் முயன்றது. இதனால் எந்த நிகழ்வில் கலந்து கொள்வது என்று தெரியாமல் பெரும்பாலானவர்கள் குழம்பிக் கொண்டு நின்றனர். இதற்குள் தங்கள் நிகழ்வுகளுக்கான ஆட்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் ஒவ்வொரு தரப்பும் முயன்று கொண்டிருந்தது.
இதைப் பார்த்துவிட்டு, “ஆட்சேர்ப்பு அரசியல் இன்னும் ஓயவில்லை” என்றார் இன்னொருவர். அவருடைய முகம் கறுத்து இறுகியிருந்தது.
இதனால்தான், “இந்த நிகழ்வை காயங்களை ஆற்றும் நிகழ்வாகக் கொள்ளுங்கள். காயங்களைப் பெருக்கும் நிகழ்வாகத் தயவு செய்து மாற்றிவிட வேண்டாம்” எனதெரிவித்திருந்தார் மனநல மருத்துவர் டொக்ரர் சிவதாஸ்.
ஆகவே “முள்ளிவாய்க்கால் நிகழ்வை ஒரு பிரார்த்தனை நிகழ்வாக மாற்ற வேண்டும். அரசியலாளர்கள் ஒதுங்கி, மதகுருக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் சிறார்களும் இந்த நிகழ்வில் இணைந்திருப்பது நல்லது“ என்று கூறப்பட்டது. ஆனால், இதற்கு யார்தான் இடமளித்தார்கள்?
(Sivarasa Karunagaran)