தாங்கொணாத் துயரம்

(தொகுப்பாளர் சதாசிவம் ஜீவாகரன்)

விடுதலைப்புலிகளை நம்பி, பிரபாகரனைத் ‘தம்பி’என வாய் நிரம்பச் சொல்லியபடி அவர்களால் கொலைசெய்யப்பட்டு உயிர் துறந்தவர்களில் எதிர்கட்சித்தலைர் அமிர்தலிங்கம், பத்மநாபா நான் அறிந்தவர்களில் முக்கியமானவர்கள். அதற்கு மாறாக நான் பழகியவர்களில் பல காலமாக பிரபாகரனை சரியாகப் புரிந்து இருந்தவர்களில், முன்னாள் வட- கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜப்பெருமாள் என். எல். எவ். ரி மற்றும் பிஎல். எவ். ரி யில் இருந்து, தற்பொழுது கனடாவில் வசிக்கும் மனேரஞ்சன், முன்றாவது தாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் என்பவர்களாகும். வரதராஜப்பெருமாள் நாங்கள் அறியாக்காலத்திலே அரசியலுக்கு வந்து சிறை சென்றதுடன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.அதேபோல் மனோரஞ்சன் யாழ்பாணத்தின் புழுதிபடியாதமேனியர். கண்டியில் மூவினங்களோடு படித்து வளர்ந்தவர். ஜோர்ச் குருசேவ் மட்டும் யாழ்பாணத்துச்சாதி, மத, மற்றும் குறிச்சி என்ற குறுநில மன்னவர்கள் மனப்பான்மையை மீறி உருவாகிய ஒரு சுயம்புலிங்கம்.

90களின் பின்னர் விடுதலைப்புலிகளால் கொலைசெய்யப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் சாமானியர்கள் அல்ல. நிட்சயமாக எமது தமிழ்மண்ணில் உதித்தவர்களில் அறிவும், தியாகமனப்பான்பையும் அளவுக்கு அதிகமாகக்கொண்டவர்கள்.பலர் வாய்ப்பிருந்தும் வெளிநாடு போக மறுத்தவர்கள்.சிலர் மேற்கு நாடுகளில் இருந்து போராட தாய்நாட்டுக்கு வந்தவர்கள். இவர்கள் எல்லாம் தாம் சார்ந்த சமூகத்திற்காக உடல், பொருளை மற்றும் குடும்ப உறவுகளைத் உதறித்தள்ளியவர்கள். ஆனால் பலர் இலகுவாக விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் பலர் விடுதலைப்புலிகளை ஏற்காதபோதிலும் மனத்தில் அவர்கள் மீது சிறிது நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். நாய்க்கு விசர் பிடித்த பின்பும் எனது நாய் என்னைக் கடியாது என்பது போன்ற மன நிலை இவர்களுக்கு இருந்திருக்கிறது. அல்லது இலங்கை அரசின் மீது வெறுப்பு கண்ணை மறைத்திருக்கலாம்.

இந்திய அமைதிபடைகாலத்தில் எந்த இயக்கச்சம்பந்தமில்லாத யாழ்ப்பாண வைத்தியசாலை பிணஅறையில்வேலை செய்தவர்கள், ஈபி எல் ஆர் எவ் ஆல் பிடிக்கப்பட்ட தமிழ்த்தேசிய இராணுவத்தினரையோ அல்லது இந்திய இராணுவத்திற்குப் பொருள்கள் வினியோகித்தால் கொலை செய்யப்பட்டவர்களை நான் இங்குசொல்லவில்லை . நான் குறிப்பிடுபவர்கள் மற்ற இயக்கங்களைப் புலிகள் தடைசெய்யப்பட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் வாழலாம் என நினைத்த இருந்த மாற்று இயக்கத்தினர், இடதுசாரிகள் மற்றும் பழைய தமிழ் அரசியல்க்கட்சிகளின் ஆதரவாளர்கள். இவர்களே துணுக்காய் வதை முகாமில் சாம்பலாகி உரமாகியவர்கள்.

சமீபத்தில் நான் ரொரண்ரோ, கனடா சென்றபோது எனது நண்பர் சிவா முருகுப்பிள்ளை ஒரு புத்தகத்தைத்திணித்தார். அதன் தலையங்கம் பழயகாலத்து நாவலின்(மங்கள நாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இதயம்) பெயர் போல் ‘தாங்கொணாத் துயரம்’ என இருந்தது. அத்துடன் தொகுப்பு பத்தகமாக இருந்தது. தொகுப்பு புத்தகங்கள் சோம்பேறிகளால் வெளியிடப்படுபவை என எனது தனிப்பட்டகருத்து. எழுதுவதற்கு சோம்பலால் பலர் எழுதியதை தொகுத்துவிட்டுஆசிரியராகுவது. தற்காலத்தில் பலர் இப்படியான விடயங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதால் பெட்டிக்குள் வைத்துவிட்டேன்.

மெல்பேன் வந்து இரண்டு மாதங்களில் பிரயாணப்பெட்டியை எடுத்து, அடுக்க முயற்சித்தபோது கையிலெடுத்துப்பார்த்த பின்பு அதை கீழே வைக்கமுடியவில்லை. இதயத்தில் சுரண்டி இரத்தத்தைக்கசியவைக்கக்கூடியதாக முதல்க்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.

அன்ரன் எனப்படும் விவேகானந்தன், கண்டியில் படித்த பிராமண குலத்தை சேர்ந்தவர். விசுவானந்ததேவனோடு பி.எல். எவ். ரி இயக்கத்தில் இருந்தவர். அவரது மனைவி சாந்தி தனது கணவனை எப்படி விடுதலைப்புலிகள் கொண்டு சென்றார்கள் என்பதையும், அவரைத்தேடி பல வருடங்களாக அவர்களது முகாங்களுக்கு மாறி மாறி அலைந்ததையும், இறுதியில் 2-9 1993யில் இவ்வுலகைவிட்டு விடுதலை செய்ததாக, தாங்கள் கொலை செய்ததை விடுதலைப்புலி உறுப்பினர்கள் 12-2 1995 ஆண்டு வந்துசொல்கிறார்கள். அதாவது ஒன்றரை வருடத்தின் பின்பு,

“நாங்கள் முன்னாலும் பின்னாலும் இவ்வளவு காலமும் திரிந்துகொண்டிருந்தோம். ஏன் இப்பொழுது எங்களுக்குகுச் சொல்கிறீர்கள்”என்கிறார் சாந்தி.

“இப்பொழுதான் உங்களுக்கு அறிவிக்கும்படியான அனுமதி கிடைத்தது.”

“அவர் என்ன செய்தார்? அவர் யாரையாவது சுட்டாரா? அப்படியென்றால் அவரைப்பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்திருக்கவேண்டும்.” மீண்டும் சாந்தி.

“அவர் துரோகி” எனக்கூறிச் சென்றார்கள்.

சாந்தியின் எழுத்து, இடதுசாரியாகிய அன்ரனது போராட்ட வரலாற்றைச் சொல்வதுடன் சாந்தியின் போராட்டத்தையும் சொல்கிறது. சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் முகாங்களுக்கு வருடக்கணக்காகத் அலைந்த சாந்தியின் மன ஓட்டம் எழுத்தில் தெரிகிறது.

இதில் உள்ள சிறப்பான கட்டுரை மனேரஞ்சனுடையது. மனேரஞ்சன் எனக்குப் பழக்கமானவர் ஆனாலும் அவரது போராட்டகாலம் எனக்குத் தெரியாது. கண்டியில் படித்துக்கொண்டிருந்தாலும், போராட்டத்தைத்தேடி யாழ்ப்பாணம் வந்து இயக்கத்தில் சேருகிறார். இயக்கங்களில் சேருங்காலத்தில் இலங்கை அரசுக்கு எதிரான நோக்கத்தில் பலர் இளைஞர்கள் எந்த வள்ளம் கரைக்கு வருகிறதே அதில் ஏறிய காலத்தில் மனோரஞ்சன் போன்றவர்கள் ஆயுதத்திற்கு முதன்மையளிக்காது மக்களில் நம்பிக்கைகொண்டு இடதுசாரி இயக்கத்தில் சேருகிறார்கள்.

மனோரஞ்சனின் அரசியல் கட்டுரைகள் கூர்மையானவையாததால் அக்காலத்தில் உதயத்தில் நான் பிரசுரித்தேன்.

எனக்குப் பிரபாகரனும் அவரது பரிவாரங்களும் எத்தனை சாந்திகளை உருவாக்கியிருப்பார்கள்? இப்படியாக ஆயிரக்கணக்கானவர்களின் சாபங்கள் மட்டும் சாதாரணமானதா என எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. இந்து மற்றும் புத்த மதத்தின் கலாச்சாரத் தன்மை என்னில், என்னையறியாது உள்ளதால் மே 18 என்பது ஒருவிதத்தில் பிரமாண்டமான தீர்ப்பு(Judgement day) எழுதிய நாளாக இருக்கலாம் என மனத்தில் மோதுகிறது.

(நடேசன்)