சட்டப்பேரவை வைரவிழாவுக்கான அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதியிடம் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழனை மாலை வழங்கினர். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கருணாநிதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த 1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் வென்று முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வென்று சாதனை படைத்துள்ள அவர், தற்போது திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டப்பேரவை வைர விழாவை அவரது 94-வது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்ட திமுக ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இவ்விழா, வரும் ஜூன் 3-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க வுள்ளது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிஹார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை வைரவிழாவுக்கான அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதியிடம் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் நேற்று மாலை வழங்கினர்.
தற்போதைய சூழலில் கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லை. ஒருவேளை மருத்துவர்கள் அனுமதித்தால் அவர் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.