யாழ்ப்பாணம், புத்தூர் கிராமத்தில் நடந்த “சாதிக்கொரு மயானம்” பிரச்சினையில் தலையிட்ட சிங்களப் பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. ஆனால், இது தொடர்பாக தமிழ்த் தேசியவாதிகள் யாரும் பொங்கி எழவில்லை. “சிங்களவனே வெளியேறு!” என்று போராட்டம் நடத்தவில்லை. அதற்கு மாறாக, தமிழ் செய்தி ஊடகங்களில் பொலிஸ் அத்துமீறலை நியாயப் படுத்தும் வகையில் செய்தி வெளியிடப் பட்டன. அங்கு இயங்கும் மார்க்சிய லெனினிசக் கட்சி, மக்களை ஒன்றுதிரட்டி போராட வைத்ததை பாராட்டாமல், “மக்களை வன்முறைக்கு தூண்டி விட்டார்கள்” என்று குற்றம் சாட்டின.
அந்த சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் வெளியாகும் “தமிழ்த் தேசிய” தினசரிப் பத்திரிகை உதயன் வெளியிட்ட செய்தியில், மிகுந்த வன்மத்துடன் எழுதப் பட்டுள்ளது. அது தனது ஆதிக்க சாதிவெறியையும், வலதுசாரி- மேட்டுக்குடி மனோபாவத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணத்தில், இதற்கு முன்னர் நடந்த தமிழ் மக்களின் போராட்டங்களை “தன்னெழுச்சி” என்று குறிப்பிட்டு வந்த பத்திரிகை, இந்தப் போராட்டத்தை மட்டும் “ஒரு கட்சியின் தூண்டுதல்” என்று எழுதுவது உள்நோக்கம் கொண்டது. வலதுசாரிகள் தமிழ்த் தேசிய போர்வையில் வந்தாலும், சாதிய கொண்டையை மறைக்க முயற்சிப்பதில்லை.
(Kali Marks)