“களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்ற கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூறுவதற்குச் சென்ற என்னை, சிறைக் கூடமொன்றுக்குள் வைத்து கைதிகள் சிலர், பாய்ந்து தாக்கினர்” என, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (01) சாட்சியமளித்தார்.
தம்மை விடுவிக்குமாறு கோரி, 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி, தமிழ்க் கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூறுவதற்கு, ஜூலை 30ஆம் சென்ற டக்ளஸ் எம்.பி, அங்கிருந்த சிறைக்கைதிகள் சிலரால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பவித்தினி டி சில்வா கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,
“சிறையிலுள்ள அவர்களின் நிலை தொடர்பில் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற கைதியால், சில கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பின்னர், தாம் உண்ணாவிரதம் இருப்பதாகவும் அது தொடர்பில் வந்து பார்க்குமாறும் கூறப்பட்டது.
“அந்த உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூற, நானும், சட்டத்தரணி மகேஷ்வரி வேலாயுதமும் என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளும் களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தோம்.
“சுமார் 15 கைதிகள், சிறைச்சாலை அலுவலகத்தில் எம்மை வந்து சந்தித்தனர்.
உண்ணாவிரத்தைக் கைவிடுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றும் கம்லத்திடம் கூறி (சுகத கம்லத்) ஒரு மாதத்துக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் நான் கூறினேன்.
“இந்த விடயத்தை சிறைக்குள் இருக்கும் ஏனைய கைதிகளிடமும் சொல்லுமாறு அவர்கள், என்னை அழைத்தனர். நானும் அவர்களுடன், இரண்டு மூன்று சிறைக்கூடங்களுக்குச் சென்று விடயத்தைக் கூறி திரும்பிக்கொண்டிருந்தேன்.
“அப்போது, ஒரு கைதியும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் வந்து, இன்னோர் அறையும் இருப்பதாகவும் அங்கும் வந்து கூறுமாறும் கூறினர்.
“நான், அங்கு சென்றபோது, சுமார் 15பேர் வரை இருந்தனர். அவர்களிடம் நான் விடயத்தைக் கூறிக்கொண்டிருந்தபோது, திடீரென என் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தனர். 15 -20 நிமிடங்களின் பின் நான் மயங்கிவிட்டேன். அதன் பின்னரே என்னுடைய ஒரு கண் பார்வையும் இல்லாமல் போனது” என சாட்சியமளித்தார்.
அதன் பின்னர், பிரதிவாதி ஸ்ரீஸ்கந்த ராஜாவின் சட்டத்தரணி சஞ்ஜெய எஸ். ஆரியதாஸ குறுக்குக் கேள்விகளைக் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே தான் அங்கு சென்றதாகவும், தம்முடைய கொள்கைக்கு எதிரானவர்களே தன்னைத் தாக்கினர் எனவும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, அப்போதைய அடையாள அணிவகுப்பில் சிலரை அடையாளம் காட்டியதாகவும் 19 வருடங்கள் கடந்துள்ளமையால் அடையாளம் காட்டுவது சிரமம் எனவும் குறிப்பிட்டதையடுத்து, அவருடைய சாட்சியப்பதிவு நிறைவுற்றது.
வழக்கு விசாரணை இம்மாதம் 21,22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவித்த நீதிபதி, 2, 3, 8 மற்றும் 9ஆம் இலக்க சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.