காவி அணிந்த பிக்குகள் அரசியல் செய்வதும் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அபத்தம்!

 

(ரி. தர்மேந்திரன்)

பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த சிங்கை ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த முடிக்கு உரிய அரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா நாடு கடந்து நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் வாரிசு என்பதை உறுதிப்படுத்தித்தான் நெதர்லாந்து அரசாங்கம் இவருக்கு புகலிடம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கி உள்ளது. அத்துடன் நாடுகளின் தலைவர்கள், உலகில் உள்ள அரச பரம்பரையினர், சர்வதேச சமூக பிரதிநிதிகள் இவரை ஏற்று அங்கீகரித்து உள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இருந்த முன்னைய அரசாங்கம் இவரை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு பகீரத முயற்சிகள் மேற்கொண்டு இருந்தது. இப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மிக நெருக்கமான நண்பரும், சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண அப்போதைய அரசாங்கத்தில் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக இருந்தபோது ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் உண்மையில் துறவு வாழ்க்கை வாழ தீர்மானித்து இருக்கின்ற பட்சத்தில் அரசியலில் ஈடுபடவோ, தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவோ கூடாது, அதே போல இவர்களில் யாராவது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகின்ற பட்சத்தில் காவி உடையை துறந்து, துறவு வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டியது அவசியம் ஆகும், உலகில் எத்தனையோ பௌத்த நாடுகள் உள்ளன, ஆனால் இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகளே வித்தியாசமாக நடந்து கொள்வதை காண முடிகின்றது என்று இவர் எமக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- உங்களை பற்றி எமது வாசகர்களுக்கு சிறிய அறிமுகம் ஒன்றை தாருங்கள்?

பதில்:-  எனது மூதாதையர்கள் 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி புரிந்தார்கள். செவ்விருக்கை நாட்டில் உள்ள சக்கரவர்த்தி நல்லூர் என்கிற இடத்தை சேர்ந்த சிங்கை ஆரியன் செகராசசேகரனில் இருந்து ஆரிய சக்கரவர்த்திகளின் வம்சம் ஆரம்பிக்கின்றது. காசியப்ப கோத்திரத்தில் பிறந்தவரும், நான்கு வேதங்களை கற்று உணர்ந்தவரும், படை தளபதியுமான பிராமணர் ஒருவரின் வழி தோன்றலாக சிங்கை ஆரியன் செகராசசேகரன் உள்ளார்.

இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கென்று ஒரு சுயதீன இராச்சியம் காணப்பட்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்கின்றனர். ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தில் 28 ஆவது தலைமுறையை சேர்ந்த நான் நாடு கடந்து வாழ்கின்றேன். எனது பெற்றோர்களான இளவரசர் தம்பிராஜா எம். கனகராஜா, இளவரசி மகேஸ்வரி கனகராஜா ஆகியோர் என்னை அரச பாரம்பரிய சம்பிரதாய மரபு முறைகளுக்கு அமைய வளர்ந்து இருந்தனர். இருவரும் இறை பதம் சேர்ந்து விட்டார்கள்.

கேள்வி:- நீங்கள் ஏன் நாடு கடந்து வாழ்கின்றீர்கள்?

பதில்:- 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாண பிரதிநிதியாக நான் தெரிவு செய்யப்பட்டேன். பிற்பாடு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பதிகாரியாக இலங்கை செஞ்சிலுவை சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால் நியமிக்கப்பட்டேன்.

அக்காலத்தில் தமிழ் ஆயுத குழுக்கள் பல இயங்கி வந்தன. என்னை படுகொலை செய்கின்ற சில முயற்சிகள் நடத்தப்பட்டு அவை தோல்வியில் முடிந்தன. அத்துடன் ஜே. வி. பியினரின் ஹர்த்தால் நடவடிக்கைகளின்போதும் நான் பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாக நேர்ந்தது. எனக்கு உயிராபத்துக்கள் அதிகரித்து வந்த நிலையிலேயே நான் நாட்டை விட்டு வெளியேறி மறைந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானேன். எனது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்பது தெளிவாக புரிந்திருந்தது.

கேள்வி:- போர் முடிவுக்கு வந்த பிற்பாடு மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் உங்களை இலங்கைக்கு திருப்பி அழைத்ததாக செய்திகள் வெளியாகினவே?

பதில்:- ஜனாதிபதி செயலகத்தில் இருந்து உயரதிகாரி ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார். என்னை வட மாகாண ஆளுனராக நியமிக்க தீர்மானித்து உள்ளனர் என்று தெரிவித்தார். எனக்கு அதியுயர் பாதுகாப்பும், யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகமும் வழங்கப்படும் என்று சொன்னார். என்னுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசியில் உரையாட விரும்புகின்றார் என்றும் இவர் கூறினார். குறுகிய கால விஜயம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொள்ள சகல ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என்று ஆளுனர் பதவி தொடர்பாக நான் தீர்மானம் எடுக்க முன்னர் இவ்வதிகாரியை கோரினேன். நான் இரட்டை பிரஜாவுரிமை பெற வேண்டும் என்று தெரிவித்து ஒன்லைன் மூலமாக எனது அலுவலகத்துக்கு விண்ணப்ப படிவங்களை அனுப்பி இவற்றில் நான் கையொப்பமிட்டு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டார்கள். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்ற விடயத்தில் எதற்காக நான் இரட்டை பிரஜாவுரிமைக்கான விண்ணப்ப படிவங்களில் கையெழுத்து வைக்க வேண்டும்? என்று இவரை வினவினேன். இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோள் என்று தெரிவித்தனர். நான் கையொப்பம் இட்டு கொடுக்காததால் மஹிந்த ராஜபக்ஸ என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்த புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று 2013 ஆம் ஆண்டில் பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னதாக என்னை தொடர்பு கொண்டது. நான் இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விரும்புகின்றார் என்று எனக்கு தெரியப்படுத்தியது. உரிய வழிமுறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு நான் அவர்களுக்கு தெரிவித்தேன். நெதர்லாந்தில் அல்லது பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக இவ்வேற்பாடுகளை செய்வது உசிதமானது என்கிற யோசனையையும் முன்வைத்தேன். ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் என்னை வரவேற்க பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுடன் கூடவே வருவார்கள் என்று மேற்சொன்ன புலம்பெயர் தமிழர் அமைப்பினர் தெரிவித்தார்கள். ஆயினும் தெய்வாதீனமாக ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று என்னை தொடர்பு நான் இலங்கைக்கு செல்லவே கூடாது என்று கேட்டு கொண்டதுடன் என்னை மாநாட்டுக்கு அரசாங்கம் அழைத்ததின் பின்னணியில் இருந்த இரகசிய திட்டத்தை எடுத்து கூறியது. எனது நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற பாதுகாப்பு வலையமைப்பு ஒன்று என்னுடன் மிக நெருக்கமாக நின்று செயற்பட்டு வருகின்றது என்பதை இலங்கையின் புலனாய்வு துறைக்கு வேலை செய்பவர்கள் மறந்து விட கூடாது. இது போல பல சந்தர்ப்பங்களிலும் என்னை நாட்டுக்கு வர வைக்க முயன்றபோதும் அம்முயற்சிகளில் அவர்கள் வெற்றி அடையவில்லை. நான் கடவுளை நம்புபவன். இவ்வாறான ஆட்களிடம் இருந்து அவர்தான் எனது வாழ்க்கையை காப்பாற்றி தந்து உள்ளார். இதே இறைவன் என்னை உரிய நேரத்தில் எனது மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

கேள்வி:- நல்லாட்சி அரசாங்கத்தில்கூட உங்களால் நாட்டுக்கு வர முடியாத நிலைதான் நீடிக்கின்றதா?

பதில்:- நான் எனது தாயகத்துக்கு திரும்பி வர வேண்டும் என்று எனது நண்பர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் அன்பர்கள் தொடர்ச்சியாக கேட்ட வண்ணம் உள்ளார்கள். நாட்டுக்கு திரும்பி வந்து எனது மக்களுக்கும், ஏனைய மக்களுக்கும் சேவை செய்ய நான் பெருவிருப்பம் கொண்டிருக்கின்றேன். என்னால் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டி எழுப்பு நாட்டை அபிவிருத்தி அடைய வைக்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன். சுமார் 30 வருட காலமாக நீடித்த யுத்தத்தை தொடர்ந்து நாட்டில் நீடித்த சமாதானத்தை உடனடியாக கட்டியெழுப்ப முடியாது. புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுபட்டு உழைப்பதன் மூலமாகவே நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும்.

ஆனால் முன்னைய அரசாங்கத்தில் நடந்த சம்பவங்களை பார்க்கின்றபோது எனது உயிருக்கு யார் உத்தரவாதம் தருவார்கள்? என்று கேட்கின்றேன். ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுகின்ற பட்சத்தில் ஒருவர் மீது மற்றவர் பழியை சுமத்தி கொள்வார்கள். நான் எனது அலுவலகத்தில் இருந்து தற்போதைய அரசாங்கத்துக்கு கடிதங்கள் அனுப்பி உள்ளேன். ஆயினும் நாட்டு பிரச்சினையை தீர்த்து வைக்க என்னை வரவழைப்பதற்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் உள்ளனர். வைத்திய கலாநிதி ராஜித சேனராட்ண முன்னாள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது என்னை சந்தித்தார். எமக்கு இடையில் ஆரோக்கியமான உரையாடல்கள் இடம்பெற்றன. அரசாங்கத்துக்கு சிங்கள மக்கள் பிரச்சினை கொடுக்க கூடும் என்கிற காரணத்தாலேயே நான் இலங்கைக்கு திரும்பி வருவதை அரசாங்கம் விரும்பவில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். ஆயினும் அவர்களுக்கு அவ்வாறான அச்சம் தேவையில்லை. ஏனென்றால் சிங்கள மக்களில் அநேகமானவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள். மட்டும் அல்லாமல் என்னுடன் தொடர்பில் உள்ள சிங்கள மக்கள் என்னை தாயகத்துக்கு கொண்டு வர அவர்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளார்கள்.

கேள்வி:- நல்லாட்சி அரசாங்கம் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்:- நல்லாட்சி அரசாங்கம் குறித்து அபிப்பிராயம் சொல்வதை விட எங்கே, எவ்வாறு பிரச்சினை ஆரம்பம் ஆனது? என்பதை நாம் அடையாளம் காண்பதே உசிதமானது என்று நினைக்கின்றேன். பண்டைய காலத்தில் நாட்டை அரசர்கள் ஆண்டனர். அப்போது நாடு செல்வ செழிப்புடன் காணப்பட்டது. காலனித்துவ ஆட்சியில் நாட்டின் பெரும்பாலான பெறுமதி வாய்ந்த பொருட்கள் காலனித்துவ ஆட்சியாளர்களால் சூறையாடி கொண்டு செல்லப்பட்டன.

சுதந்திரத்துக்கு பிற்பாடு இலங்கை அபிவிருத்தி அடைந்த சிங்கப்பூரை விட எத்தனையோ மடங்கு செழுமை கண்டிருக்க வேண்டும்.சில, பல இடர்ப்பாடுகள் இருந்திருப்பினும்கூட 1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து உள்ளனர். இவர்கள் வெளிநாட்டு உற்பத்திகளில் தங்கி இருக்கவில்லை. நாட்டில் சொந்த உற்பத்திகள் நிறைவாக காணப்பட்டன.

ஆனால் 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தொடங்கியது. ஆனால் இதன் காரணமாக சொந்த உற்பத்திகளை நாடு இழந்து விட்டது. இன்று பொருளாதார ரீதியில் நாடு மிகவும் நலிவடைந்து காணப்படுவதுடன் பாரிய கடன் சுமைகளுக்கு உள்ளாகி உள்ளது.

ஆட்சி மாற்றத்தை வேண்டி இலங்கை மக்கள் வாக்களித்த நிலையில் புதிய யுகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. புதிய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட 100 நாள் வேலை திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது என்பதே எனது அவதானம் ஆகும்.

ஆயினும் இலங்கை அரசாங்கம் மக்களுக்கு தேர்தல்களுக்கு முன்னதாக வழங்கி இருந்த அநேக வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுக்கவில்லை. மக்களுக்கு வழங்கி இருந்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றி கொடுத்தே ஆக வேண்டும். இனியும் எந்தவொரு தாமதமும் இல்லாமல் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை உடனடியாக இல்லாமல் செய்யப்பட வேண்டும். ஏராளமான விடயங்கள் தீர்த்து வைக்கப்பட வேண்டி உள்ளன. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இவை தீர்த்து கொடுக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் அரசியல் ஊழல்கள் கட்டாயம் வேரறுக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கையில் பல இயற்கை அனர்த்தங்கள் நேர்ந்தன. ஆனால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் சரியான முறையில் விடயங்களை கையாள முடியாது உள்ளது. ஏனென்றால் இவர்களிடம் சரியான ஒழுங்கு கட்டமைப்பு கிடையாது. ஏனைய நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பது அர்த்தம் அற்ற விடயம் ஆகும். எனவே நாடு முழுவதும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களை அமைச்சு கட்டாயம் அமைத்து கொடுப்பதோடு எதிர்காலத்தில் இடம்பெற கூடிய அனர்த்தங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள கூடியவாறு மக்களை தயார்ப்படுத்தியும் வைத்திருக்க வேண்டும்.

நான் ஒரு விடயத்தை அழுத்தி கூற வேண்டி உள்ளது. யாராவது இனி மேல் தனி நாடு, பிரிவினை குறித்து பேசுவார்களாக இருந்தால் மக்கள் ஒரேயடியாக நிலை குலைந்து போய் விடுவார்கள். ஆனால் நான் இன்னொரு விடயத்தையும் நினைவூட்ட வேண்டி உள்ளது. 1972 ஆம் ஆண்டு அரசாங்கம் நாட்டின் தேசிய கொடி மூலமாக இந்நாட்டு சமூகங்களை பிரித்து விட்டது. இத்தேசிய கொடியில் செம்மஞ்சள் நிற பட்டை தமிழர்களையும், பச்சை நிற பட்டை முஸ்லிம்களையும், சிங்கத்துடன் கூடிய கருஞ்சிவப்பு நிற பகுதி சிங்களவர்களையும் குறித்து நிற்கின்றன. இவ்விதம் தேசிய கொடி வடிவமைக்கப்பட்டது ஒரு மிக பெரிய வரலாற்று தவறாகும்.

கேள்வி:- பொதுபலசேனாவின் செயற்பாடுகள் குறித்து என்ன சொல்கின்றீர்கள்?

பதில்:- நான் தினமும் இலங்கைச் செய்திகளை மிக நெருக்கமாக அவதானித்து வருகின்றேன். கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர், பொதுபலசேனாவின் பொது செயலாளர் வண. கல்கொடாத்தே ஞானசார தேரர் போன்றோர் என்னுடன் தொடர்பில் உள்ளதுடன் என்னை உரிய மரியாதையுடன் நடத்துகின்றனர்.

எனக்கு பௌத்த சமயம் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் உண்மையில் துறவு வாழ்க்கை வாழ தீர்மானித்து இருக்கின்ற பட்சத்தில் அரசியலில் ஈடுபடவோ, தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவோ கூடாது என்று விநயமாக கேட்டு கொள்கின்றேன். இதே போல இவர்களில் யாராவது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகின்ற பட்சத்தில் காவி உடையை துறந்து, துறவு வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டியது அவசியம் ஆகும். உலகில் எத்தனையோ பௌத்த நாடுகள் இருக்கின்றன. ஆனால் இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகளே வித்தியாசமாக நடந்து கொள்வதை காண முடிகின்றது. இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் புத்தபிரானின் தம்ம போதனைகளை பின்பற்றி நடப்பதோடு, இப்போதனைகள் மூலமாக நாட்டு மக்களை சரியான பாதையில் வழி நடத்தி செல்ல வேண்டும் என்றும் வேண்டி கொள்கின்றேன்.

இதே நேரம்  சில குழுக்கள் நாட்டில் சமயத்தின் பெயரால் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவது கவலைக்குரிய விடயம் ஆகும். இன, மொழி, மத, கலாசார ரீதியாக வெவ்வேறு சமூகங்கள் இலங்கையில் வாழ்கின்றபோதிலும் ஒருவரை ஒருவர் புரிந்து, மதித்து நடக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழ வேண்டியது அவசியம் ஆகும்.

கேள்வி:– உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன?

பதில்:- இன பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை. அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கவில்லை. இவர்களின் பிரச்சினைகள் நியாயமானவை. இலங்கைக்குள்ளே ஒரு தேசிய இனம் என்கிற வகையில் தமிழ் மக்களுக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் வழங்கப்பட வேண்டும். அதே நேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு நின்று அரசாங்கத்தோடு இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும்.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகள் அரசியல் அமைப்பில் கொண்டு வரப்பட உள்ள மாற்றங்கள் மூலமாக கட்டாயம் நிறைவேற்றி கொடுக்கப்பட வேண்டும். வேறு வகையில் சொன்னால் அரசியல் அமைப்பில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதை உறுதிப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அவசியம். அரசியல் அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட பிற்பாடு அவற்றின் அமுலாக்கம் நாட்டு மக்களின் உதவி, ஒத்தாசை ஆகியவற்றுடன் இடம்பெறுதல் வேண்டும்.

உள்ளக சுயாட்சி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை. உள்ளக சுயாட்சி என்பது ஒரு மாநிலத்தை சேர்ந்த மக்கள் வெளியாட்களின் எந்தவொரு தலையீடும் இல்லாமல் அவர்களை அவர்களே ஆட்சி புரிகின்ற உரிமை ஆகும். சுயாட்சிக்கான உரிமை ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் மக்கள் அமைதி முறையிலேயே அவர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. எனவே தமிழ் மக்கள் வெவ்வேறு பாதைகளில் செல்வதை விடுத்து, அவர்களிடையே இருக்க கூடிய வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு நின்று, இவ்விலட்சியத்தை அடைய அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.

ஆனால் தமிழ் மக்களின் பெரும்பான்மை பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இராஜதந்திரம் கிடையாது. கௌரவ நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்றபோது ஏராளமான நல்ல மாற்றங்கள் நடக்கும் என்றும் மக்கள் ஓரளவு நன்றாக வாழ கூடியதாக இருக்கும் என்றும் எண்ணி இருந்தேன். ஆயினும் நான் அவரை குறையோ, பிழையோ சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஒரு முதலமைச்சருக்கு உரித்தான பதவி நிலை அதிகாரங்கள் வட மாகாண முதலமைச்சரான அவருக்கு வழங்கப்படவில்லை. ஆனால் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் உதவியை பெற்று பல விடயங்களை செய்திருக்க வேண்டும். ஆயினும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் அதிகாரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதோ அரசாங்கத்தை எப்படி கையாள வேண்டும் என்பதோ தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரியாது.

நான் வட மாகாணத்தின் மீளெழுச்சி தொடர்பாக மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றேன். வட மாகாணத்தினதும், யாழ்ப்பாணத்தினதும் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்தால் கொடுக்கப்படுகின்ற நிதியை வட மாகாண சபை பயன் உள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன். யாழ்ப்பாணம் மீண்டும் பழைய செழுமையையும், பெருமையையும் பெற வேண்டும் என்பது எனது அபிலாஷை ஆகும். அதே நேரம் யாழ்ப்பாண இராச்சியம், தமிழர் நாகரிகம், தமிழ்மொழி ஆகியவற்றின் செழுமையும், பெருமையும் வாய்ந்த கலாசார பாரம்பரியங்கள் கட்டாயம் பேணி பாதுகாக்கப்பட்டு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இவற்றை யாரும் அழிப்பதற்கு இடமளிக்க கூடாது.