(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இயற்கை வளங்கள் வரமா, சாபமா? என்கிற கேள்வி ஒருவகையில் அபத்தமானது. ஏனெனில், இன்று உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள நாடுகளின் அடிப்படையாக, இயற்கை வளங்களே இருந்தன; இன்னமும் இருக்கின்றன. அந்த வளங்கள் சொந்த நாட்டில் இருந்த வளங்களாகட்டும் அல்லது சுரண்டிய வளங்களாகட்டும் அவையே அந்நாடுகளை வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராட்சியமாக, பிரித்தானியா திகழ்வதற்கு, அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் இயற்கை வளங்கள் முக்கிய காரணியாகின. இவை, ஏனைய காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருந்தும். காலங்கள் மாறிவிட்டன. ஆனால், களங்கள் மாறவில்லை. மாறாத களத்தின் நிகழ்காலக் கதைதான் இது.
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், உலகின் மிகவும் வறுமைப்பட்ட இருபது நாடுகளில் ஒன்றாகக் கொங்கோ திகழ்கிறது.
இயற்கை வளங்கள் என்ற வரமே சாபமாகிய கதை கொங்கோவினுடையது. வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் தென்சூடான்; கிழக்கே உகண்டா, ருவாண்டா, புரூண்டி, தன்சானியா; தெற்கே ஸம்பியாவும் அங்கோலாவும் மேற்கே கொங்கோ குடியரசையும் அத்திலாந்திக் கடலையும் கொண்ட நாடு கொங்கோ.
நிலப்பரப்பின் அடிப்படையில் ஆபிரிக்காவின் இரண்டாவது பெரிய நாடாகவும் 80 மில்லியன் சனத்தொகையின் அடிப்படையில் ஆபிரிக்காவின் நான்காவது பெரிய நாடாகவும் திகழ்கிறது.
19 ஆம் நூற்றாண்டின் பின்னரைக் காலப்பகுதியில், ஐரோப்பியர்கள் நாடுபிடிக்கும் முனைப்பில், உலகெங்கும் வலம்வரத் தொடங்கினர். இதன் பகுதியாக, ஆபிரிக்கக் கண்டத்தைப் பாகப்பிரிவினை செய்யும் கைங்கரியம் பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கிடையே 1885 இல் பெர்லினில் இடம்பெற்ற மாநாட்டில் நடந்தேறியது.
அன்று வரையப்பட்ட வரைபடமே, இன்றும் நாடுகளின் எல்லைகளாக உள்ளது. அதுவே, ஆபிரிக்கக் கண்டம் இன்றுவரை எதிர்நோக்கும் சிக்கல்களின் தோற்றுவாயாகும்.
அங்கு எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, கொங்கோ பகுதி பெல்ஜியத்தின் வசம் வந்தது. பெல்ஜிய அரசர் இரண்டாவது லியோபோல்ட், கொங்கோவைத் தனது தனிப்பட்ட சொத்தாக அறிவித்தார். அதைச் ‘சுதந்திரக் கொங்கோ’ என அறிவித்து, அங்கு இராணுவ ஆட்சியை நிறுவினார்.
உலக வரலாற்றில் கொடுங்கோன்மையான ஓர் ஆட்சிக்காலம், 1885 முதல் 1908 ஆம் ஆண்டு வரை நிலவியது. அந்த 23 வருடங்களில் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் கொங்கோலியர்கள் கட்டாயத் தொழில் முறையின் விளைவினாலும் அதனால் ஏற்பட்ட நோய்களினாலும் மடிந்து போயினர்.
1908 இல் கொங்கோவில் நிகழ்ந்த கலவரங்களின் பின்னர், பெல்ஜிய அரசு கொங்கோப் பகுதியைப் பொறுப்பேற்று, அதற்கு ‘பெல்ஜியக் கொங்கோ’ எனப் பெயரிட்டது.
இதைத் தொடர்ந்த காலப்பகுதியில், கொங்கோவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, செல்வந்த நாடாக பெல்ஜியம் வளர்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தயாரிப்பதற்கான தாதுப்பொருட்கள் கொங்கோவிலிருந்தே பெறப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், காலனித்துவ பகுதி மக்களிடையே ஒரு புரட்சிகர எழுச்சி, முதலில் ஆசியாவில் உருவாகிப் பின்னர் ஆபிரிக்காவுக்கும் பரவியது.
பழைய காலனித்துவ ஆதிக்க நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகியவை, காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களை நசுக்க முற்பட்டன.
அல்லது, தங்கள் நலன்களைக் காப்பாற்ற பிரித்தானியா, தென்னாசியாவில் செய்தது போன்று, உயர்வர்க்கத்தின் கைகளில் ஆட்சியை வழங்கி, மறைமுகக் கட்டுப்பாட்டை வைத்திருக்கும், பெயரளவுக்கான சுதந்திரத்தைக் கொடுக்கத் தந்திரங்களைச் செய்தன.
கொங்கோவில் காலனிய விடுதலைக்கான போராட்டத்தில் பற்றிஸ் லுமும்பா முதன்மைப் பாத்திரம் வகித்தார். கொங்கோவின் மீதான கட்டுப்பாடு நழுவிய நிலையில், தனது அண்டை நாடான பிரான்ஸ், அல்ஜீரியாவில் பேரழிவை எதிர்கொள்வதை உணர்ந்த பெல்ஜியம், 1960 இல் கொங்கோவுக்குச் சுதந்திரத்தை வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியது.
இருந்தபோதிலும், அங்குள்ள இயற்கை வளங்களை இலகுவாக விட்டுவிட பெல்ஜியம் விரும்பவில்லை. ஆனால், சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் லுமும்பா பிரதமரானார்.
இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததன் பின்னணியில், ஆபிரிக்காவில் எழுந்த காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை என்ற உணர்வின் குறியீடாகத் திகழ்பவர் லுமும்பா.
காலனியாதிக்கத்தில் இருந்து மீண்ட நாட்டைச் சுயபொருளாதாரத்தை மையப்படுத்திய திசையில் நகர்த்த, லுமும்பா விரும்பினார். இது, மேற்குலகின் விருப்பத்துக்குரிய செயலாக அமையவில்லை.
கொங்கோவில் அமைதியின்மை தூண்டப்பட்டது. அதைக் கண்காணிக்க ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைகள் அனுப்பப்பட்டன. அப்படைகள் நிலைகொண்டுள்ளபோதே இராணுவப் புரட்சி அரங்கேறியது.
பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்று ஐந்து மாத இடைவெளியில், மேற்குலகின் சதிப்புரட்சியின் விளைவாகக் கைது செய்யப்பட்டு, 1961 ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, அமெரிக்காவினதும் பெல்ஜியத்தினதும் ஆதரவுடன், கைதியாக இருந்த போதே, லுமும்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இது ஐ.நா அமைதி காக்கும் படைகளின் கண்முன்னே நடந்தது. இதை விசாரிக்கச் சென்ற அப்போதைய ஐ.நாவின் செயலாளர் நாயகம், மர்மமான முறையில் விமான விபத்தில் பலியானார்.
தேசிய ஜனநாயகப் புரட்சியை கொங்கோவில் அறிமுகம் செய்ய முயன்ற பற்ரிஸ் லுமும்பாவின் முடிவு, உலகம் ஒரு ஜனநாயக ரீதியான மக்கள் எழுச்சிக்கு எவ்வாறு பின்விளைவுகளை ஆற்றும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
கொங்கோவின் இயற்கை வளங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்ததோடு, அமெரிக்காவினதும் பெல்ஜி யத்தினதும் கைப்பொம்மையாக இருக்க மறுத்ததன் விளைவே, லுமும்பாவின் கொலையாகும்.
‘மனிதத்துவத்துக்கு எதிராக நிகழும் குற்றங்கள் எங்கு நடந்தாலும் பெல்ஜியம் அதைக் கண்டித்து நீதி வழங்க முயலும்’ என்று பெருமையடித்துக் கொள்ளும் பெல்ஜியத்துக்கு ஜனநாயகம் பற்றியோ, மனித உரிமை பற்றியோ பேசுவதற்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது.
லுமும்பாவின் கொலை, மனித உரிமைகள் பற்றிய மேற்குலகின் மாயையை மட்டுமல்ல, ஆபிரிக்க விடுதலையின் பொய்யான தோற்றத்தையும் தோலுரித்துக் காட்டியது.
கொங்கோ, இன்று வரை, தன்னகத்தே கொண்டிருக்கின்ற இயற்கை வளங்களுக்காக வறுமையிலும் உள்நாட்டுப் போரிலும் சிக்கித் தவிக்கும் நாடாக இருக்கிறது.
‘அடிமையாய் இருப்பதைக் காட்டிலும், என் சிரம் உயர்ந்திருக்க, அசையாத நம்பிக்கையுடன், என் தேசத்தின் எதிர்காலம் பற்றிய பெரும் கனவுடன் சாவதையே நான் விரும்புகிறேன்’ என சிறையிலிருந்து லுமும்பா இறுதியாக எழுதிய வரிகள், இன்றும் ஆபிரிக்க விடுதலையின் சாட்சியாகி நிற்கின்றன.
இதைத் தொடர்ந்து கொங்கோவை மேற்குலக நாடுகள் பங்குபோட்டுக் கொண்டன. தங்களது இருப்பை உறுதிசெய்ய ஆயுதம் தாங்கிய குழுக்களை உருவாக்கின. அக்குழுக்கள் இயற்கை வளங்களை எடுத்து, அனுப்புவதன் மூலம் தங்களை வளர்த்துக் கொண்டன.
அக்குழுக்கள் கொங்கோ மக்களை மிகக்குறைவான ஊதியத்துக்கு ஆயுதவலிமையின் உதவியோடு, இயற்கை வளங்களை அகழ்வுசெய்யப் பயன்படுத்தின. இவ்வாறு பல குழுக்கள் இயங்கத் தொடங்கின. அரசால் எதுவும் செய்யமுடியவில்லை.
நாட்டின் பெரும்பான்மையான பகுதி அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் அரசுக்கான வருமானம் எதுவும் இல்லை. மறுபுறம் கொங்கோவில் உள்ள இயற்கை வளங்கள் மிகக்குறைவான விலைக்கு மேற்குலக நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
உலகில் அதிகளவான ‘கோபோல்டை’ என்ற தாதுப்பொருளைக் கொண்ட நாடு கொங்கோவாகும். ‘கோபோல்ட்’ கைத்தொழில் உற்பத்தியில் முக்கிய தாதுப்பொருளாகும். மின்கலன்கள், நிறப்பூச்சுகள் போன்றவற்றில் ‘கோபோல்ட்’ பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல, செப்பு மற்றும் வைரம் என்பன மிக அதிகளவில் கிடைக்கின்றன. உலகில் மிகவும் பெரிய வைரச் சுரங்கங்களை உடைய நாடு கொங்கோவாகும். கடந்த நான்கு தசாப்தங்களாக இவ்வளங்களுக்காகத்தான், தொடர்ந்தும் உள்நாட்டு யுத்தங்கள் கொங்கோவுக்குள் நடந்து வருகின்றன.
உலகின் 70 சதவீதமான ‘கோபோல்ட்’, 70 சதவீதமான வைரம், 60 சதவீதமான யுரேனியம் ஆகியவை, 1960இல் கொங்கோ சுதந்திரமடைந்த போது, அங்கிருந்து எடுக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போரின் போது, ஹிரோஷிமா மற்றும் நாகசாஹி மீது வீசப்பட்ட அணுக்குண்டுகளைத் தயாரிப்பதற்கான யுரேனியம், கொங்கோவில் இருந்தே பெறப்பட்டது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, கொங்கோவில் உள்ள இன்னொரு தாதுப்பொருள், கொங்கோவை மீளவியலாத யுத்தத்துக்கும் வளச்சுரண்டலுக்கும் இட்டுச் சென்றுள்ளது.
அத்தாதுப்பொருளின் பெயர் ‘கோல்ட்டான்’. இலத்திரனியல் உபகரணங்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் ‘கோல்ட்டான்’. ‘கோல்ட்டான்’ மலிவாகக் கிடைத்ததன் விளைவாலேயே இலத்திரனியல் உபகரணங்களின் விலை கடந்த பத்தாண்டுகளில் குறைந்துள்ளது.
‘கோல்ட்டான்’ அதிகம் பயன்படுத்தப்படும் உபகரணங்களில் பிரதானமானது அலைபேசியாகும். கோங்கோ மக்கள் வறுமையில் வாடி, இரத்தம் சிந்தி, தோண்டியெடுத்து அனுப்பும் கோல்ட்டானில் இருந்து உங்கள் கைகளில் தவழும் அலைபேசி உற்பத்தி செய்யப்படுகிறது.
இன்று உலகளாவிய ரீதியில் அலைபேசிகளிலும் கணினிகளிலும் பயன்படுத்தப்படும் ‘கோல்ட்டான்’ உலகளாவிய சந்தையில் 65 சதவீதமானவை கொங்கோவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கொங்கோவில் இருந்து எடுக்கப்படும் கோல்ட்டானுக்கு கிலோ கிராம் ஒன்றுக்கு ஆறு அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் இது நான்கு அமெரிக்க டொலர்களாவதும் உண்டு. சர்வதேசச் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோல்ட்டான் 125 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகிறது. இன்று கொங்கோவின் மிகப் பெரிய சாபக்கேடாக இந்த இயற்கை வளங்கள் மாறிவிட்டன.
இன்று, இயற்கை வளங்களைத் தனியார் மயமாக்குவதும் அதைப் பொதுமக்களின் பாவனைக்கற்றதாக மாற்றுவதும் பெரியளவில் நடந்து வருகிறது.
இதை நியாயப்படுத்தி, அமெரிக்கா, கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காரட் ஹார்டின் எழுதிய வாதங்கள்தான், இன்னும் இந்த இயற்கை வளக்கொள்ளையின் முக்கிய நியாயப்படுத்தலாக இருக்கிறது. ‘பொதுச் சொத்தின் அவலம்’ (The Tragedy of the commons) என்ற அவரது நூல் இன்றுவரை மேற்குலகத்தினரின் அறிவுலகால் கொண்டாடப்படுகிறது.
ஹார்டின் முன்வைக்கும் வாதம் யாதெனில், ‘இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே, அவற்றை நுகரும் மக்கள் தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால், ஏழைகள்தான் கட்டுப்பாடின்றிச் சனத்தொகை அதிகரிப்புக்குக் காரணமாகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய ‘தண்டனை’ வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால்தான் ஏழைகள் இந்தப் பொறுப்பற்ற செயலைச் செய்கிறார்கள். எனவே, பொதுச் சொத்துகளை ஆறு, கடல், காடு போன்ற அனைத்தையும் தனியாருக்கு விற்றுவிடலாம்; அல்லது அவற்றைப் பயன்படுத்தும் உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க, அவற்றை ஏலம் விடலாம். பொதுச்சொத்தின் அழிவா, தனியார் மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்.’
பேராசியர் ஹார்டினின் வாதத்தை விளங்கிக் கொள்பவர்களுக்கு இன்றைய உலகை விளங்குவதில் அதிக சிரமங்கள் இருக்கமாட்டாது. இன்று எமது இயற்கை வளங்களும் பல்வேறு பெயர்களில் பல்வேறு வாதங்களுடன் விற்கப்படுகின்றன.
இயற்கையைப் பற்றி மிகவும் தீவிரமாக யோசித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லாதுவிடின், இன்று எங்கள் அலைபேசியில் வழியும் குருதி எமது பேரப்பிள்ளைகளில் இருந்து வழியும். மாற்றங்களை நோக்கி நடைபயில, இது சரியான தருணம்.