(கே. சஞ்சயன் )
வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், பெரியதொரு சிக்கலாக மாறியிருக்கிறார். மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட டெனிஸ்வரன், அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக, தமது அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. ஏனென்றால், அவ்வாறு பதவி விலகினாலும், டெனிஸ்வரனுக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைக்கப் போவதில்லை. விந்தன் கனகரட்ணத்தையோ, சிவாஜிலிங்கத்தையோ அல்லது மருத்துவர் கலாநிதி குணசீலனையோ தான், டெலோ அமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதனால்தான், அவர் முரண்டு பிடிக்கிறார் என்று கருத முடியாது. அதற்கும் அப்பாற்பட்ட காரணங்களும் இருக்கின்றன. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய குழு, அமைச்சர்கள் டெனிஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் மீது முறைப்பாடு செய்தவர்கள் வரவில்லை என்பதால், அவர்களை் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்திருந்தது. ஆனாலும், இவர்கள் இருவரின் மீதும், புதிய விசாரணை நடத்தவும், அதற்காக விலகியிருக்குமாறும் முதலமைச்சர், கோரியபோதுதான், வடக்கு மாகாணசபையின் இப்போதைய பிரச்சினைகள் எல்லாம் வெடித்தன.
ஒருவழியாக, இந்தப் பிரச்சினைகளுக்குத் தற்காலிக தீர்வு காணப்பட்ட போதிலும், தான் நியமிக்கும் விசாரணைக்குழு முன்பாக, இரண்டு அமைச்சர்களும், முன்னிலையாக வேண்டும் என்ற பிடிவாதத்தை முதலமைச்சர் கைவிடத் தயாராக இருக்கவில்லை. அதேவேளை, முதலமைச்சர் நியமிக்கும் சட்டரீதியற்ற விசாரணைக்குழு முன்பாகத் தாம் முன்னிலையாகப் போவதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்க டெனிஸ்வரனும் தயாராக இல்லை.
இந்த இழுபறிகளின் ஒரு கட்டமாக, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்ட, டெனிஸ்வரனைத் தமது கட்சியில் இருந்து நீக்க, டெலோ முடிவெடுத்தது.
அந்தத் தீர்மானத்தை முதலமைச்சருக்கு அனுப்பி, அவரது அமைச்சுப் பதவியைப் பறித்து விட்டு, அவருக்குப் பதிலாக விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்கவும் டெலோ பரிந்துரைத்தது.
ஆனாலும், டெனிஸ்வரன் தனது பதவியை விட்டு விலக மறுத்து வருவதுடன், முதலமைச்சர் வேண்டுமானால் தன்னைப் பதவி நீக்கட்டும் என்றும் சவால் விடுத்தும் வருகிறார்.
கடந்தவாரம் ரெலோ மத்திய குழுக் கூட்டத்தில் பங்கேற்றுத் தனது விளக்கத்தைக் கொடுத்த டெனிஸ்வரன், மறுநாள் முடிவை அறிவிப்பதாகக் கூறிச் சென்றிருந்தார்.
எனினும், அதற்குப் பின்னரும் தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்.
டெனிஸ்வரன் பதவி விலக மறுத்து வருவதால், அடுத்து என்ன செய்வதென்ற குழப்பம் முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு அமைய சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தனது பதவியை விட்டு விலகி விட்டார்.
இப்போது முதலமைச்சரின் தலையில் தான் எல்லாப் பொறுப்புகளும். குருவியின் தலையில் பனங்காய் போல அவரை அழுத்தத் தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் தனது கையில் எல்லா அதிகாரங்களையும் குவித்து வைத்துக் கொண்டு, எதையும் செய்ய முடியாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
அவரால், இப்போது, கைவசம் இருக்கின்ற அமைச்சுகளை அப்படியே கொண்டு நடத்துவதற்கு அப்பால், அடுத்த கட்டம் பற்றியோ, அல்லது ஏனைய விவகாரங்கள் பற்றியோ சிந்திக்கவோ, அல்லது அதுபற்றிய முடிவுகளை எடுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாற்றுத் தலைமை உள்ளிட்ட பெரும் எதிர்பார்ப்புகளை வெளியே கொண்டுள்ள ஒருவர், இவ்வாறு முடக்கப்பட்ட நிலையில் இருப்பதை, அவரைச் சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்துக்கு தமிழரசுக் கட்சி உள்ளிட்ட நான்கு பங்காளிக் கட்சிகளுமே முதலமைச்சருக்கு அதிகாரம் அளித்து விட்டன.
ஆனாலும் முதலமைச்சர், அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு, அமைச்சரவை மாற்றத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்.
தமிழரசுக் கட்சி அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சத்தியலிங்கம் பதவி விலகி விட்டார்.
இனிமேல் தமிழரசுக் கட்சி அமைச்சரவையில் இணையப் போவதும் இல்லை. அவர்கள் தரப்பில் அமைச்சுப் பதவிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படப் போவதுமில்லை.
இது முதலமைச்சருக்கு ஆறுதல் அளிக்கின்ற விடயமாக இருந்தாலும், டெனிஸ்வரன் விவகாரம், அவருக்குச் சவாலாக மாறியிருக்கிறது. அவர் பதவி விலகினால்தான், அமைச்சரவையை மாற்றியமைக்க முடியும்.
டெனிஸ்வரன், தாம் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றும் எனவே, தாமாக முன்வந்து பதவி விலகப் போவதில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறார்.
இதனால், இந்த விவகாரத்தில் மிகச் சுலபமான, வழி முதலமைச்சருக்கு அடைபட்டுப் போயுள்ளது.
“வேண்டுமானால், முதலமைச்சர் தன்னைப் பதவியில் இருந்து நீக்கட்டும்” என்றும் டெனிஸ்வரன் கூறியிருக்கிறார்.
எனினும், தான் சட்ட ரீதியாக அதை எதிர்கொள்வேன் என்று அவர் கூறி வருவதுடன், முதலமைச்சர் நீதியரசர் என்றால், தாம் ஒரு சட்டத்தரணி என்றும் நினைவுபடுத்தியிருந்தார்.
இந்தச் சிக்கலில், டெனிஸ்வரனைப் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு முதலமைச்சருக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. அதிலும் ஒரு வழி அடைபட்டுப் போயிருப்பது அவரது துரதிஷ்டம்தான்.
மாகாணசபைத் தேர்தல் சட்டத்தின்படி, மாகாணசபை உறுப்பினர் ஒருவரைத் தமது கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தால், அவரது பதவி பறிக்கப்பட்டு, அடுத்த நிலையில் உள்ளவர் நியமிக்கப்படுவார். இதுதான் முதலாவது வழி.
இந்த வழியைப் பின்பற்றுவதானால், அமைச்சர் பதவியில் இருந்து மாத்திரமன்றி மாகாணசபை உறுப்பினர் பதவியையும் டெனிஸ்வரன் இழக்க நேரிடும்.
டெனீஸ்வரன் மீது இந்த நடவடிக்கையை எடுப்பதற்கும் டெலோ தயாராகவே இருக்கிறது. ஆனால், டெலோவின் வேட்பாளராக களமிறங்கியிருந்தாலும், தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ், அந்தக் கட்சியின் பட்டியலில்தான் போட்டியிட்டிருந்தார்.
எனவே தமிழரசுக் கட்சிதான் டெனிஸ்வரனை நீக்குமாறு கோர வேண்டும். முதலமைச்சருக்கு எதிராகத் துணிந்து நின்று சவால் விடும் டெனிஸ்வரனை தமிழ் அரசுக் கட்சி அவ்வாறு நீக்குவதற்கு முடிவெடுக்க வாய்ப்பில்லை. இதனால்தான், முதலாவது வழி அடைபட்டுப் போயிருக்கிறது.
இப்போது கடைசியாக எஞ்சியிருப்பது, டெனிஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு, ஆளுநரிடம் முதலமைச்சர் பரிந்துரைக்கின்ற ஒரே ஒரு வழிதான் எஞ்சியிருக்கிறது. இது கூட அவ்வளவு சுலபமானது அல்ல.
டெனிஸ்வரனைப் பதவி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் ஆதரவுடன், நியாயமான காரணங்களையும் குறிப்பிட்டு, ஆளுநரிடம் பரிந்துரைக்க வேண்டும். இது ஒன்றுதான் முதலமைச்சருக்கு உள்ள
ஒரே வழி.
இதற்கு மாகாணசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு, முதலமைச்சருக்குத் தேவைப்படும். தற்போதைய நிலையில் அது அவருக்குக் கிடைக்குமா என்பது முதல் பிரச்சினை.
பதவி நீக்கத்துக்காக முதலமைச்சர் முன்வைக்கும் காரணத்தை ஆளுநர் ஏற்கவும் வேண்டும். இது இன்னொரு பிரச்சினை.
இதற்கு மேல், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, ஆளுநரிடம் தமிழரசுக் கட்சி சரணாகதி அடைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்கள்.
இப்போது தன்னைப் பதவி நீக்குவதற்காக, முதலமைச்சர் ஆளுநரை நாடினால், அது அவரது காலில் விழும் செயல் இல்லையா என்று டெனிஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலையீடு செய்ய முனையவில்லை. டெலோவினால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது உறுதியாகி விட்டது.
தமிரசுக் கட்சி, நினைத்தால், முதலமைச்சருக்கு உதவ முடியும். ஆனால் முதலமைச்சர் அவ்வாறு உதவக் கூடிய வழியை விட்டு வைத்திருக்கவில்லை.
அதைவிட முதலமைச்சரைச் சுற்றி எந்த நேரமும் பிரச்சினைகளை உருவாக்கி வைத்திருக்க விரும்பும் தமிழரசுக் கட்சி அவருக்கு ஆறுதலை அளிக்கக் கூடிய வாய்ப்பை வழங்கப் போவதில்லை.
முதலமைச்சரை செயல்படாத நிலைக்குள் தள்ளிச் செல்வது, அதாவது தம்முடன் தாக்குதல் நிலைக்கு வராமல் தற்காப்பு நிலைக்குள் தள்ளி வைத்திருப்பது தான் தமிழரசுக் கட்சியின் இப்போதைய உத்தி.
இதனை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும் நிலையில், தமிழரசுக் கட்சி ஒருபோதும் முதலமைச்சருக்கு கைகொடுக்க முன்வராது.
இந்த நிலையில், டெனிஸ்வரன் விவகாரத்தை முதலமைச்சர் விரைவாகத் தீர்வு காணத் தவறினால், வடக்கு மாகாணசபையின் நிர்வாகம் மேலும் மோசமடையும்.
ஏற்கெனவே மாகாண நிர்வாகம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் கிளம்பி வரும் நிலையில், எஞ்சியுள்ள காலத்தையாவது, வினைதிறனுடன் செயற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்தும் கனல் நீராகவே கரைந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கூத்துகளையெல்லாம் வேடிக்கை பார்க்கின்ற பார்வையாளர்களாக, தமிழ் மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு இது பெரும் சோதனைதான்.